Tuesday, June 7, 2011

விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை ஜப்பான் விஞ்ஞானி தீவிரம்.

விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை ஜப்பான் விஞ்ஞானி தீவிரம்

சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா (ஜப்பான்), செர்ஜி வல்கோவ் (ரஷியா), மைக்கேல் போசும் (அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர்.

அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, விண் வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று நகைச்சுவையுடன் கூறினார்.

ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ் கூறும்போது, விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் : டெல்லி ஐகோர்ட்.

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும்: டெல்லி ஐகோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. திகார் ஜெயிலில் உள்ளார். கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது.

அப்போது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதாடினார். சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்காமல் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (8-5-2011) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டருக்கு 46.33 கி.மீ. தரும் வகையில் கார் ஓட்டி கோவை எஞ்சினியர் சாதனை.


லிட்டருக்கு 46.33 கி.மீ. செல்லும் வகையில் டாடா மான்சா காரை ஓட்டி கோவையை சேர்ந்த எஞ்சினியர் சாதனை புரிந்துள்ளார். அவரது இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெறுகிறது.

கோவையை சேர்ந்தவர் நாராயணன் மேனன். இவர் அங்குள்ள ஆரோமென் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், டாடா நிறுவனத்தின் மான்சா குவாட்ராஜெட் டீசல் காரை சமீபத்தில் வாங்கினார். இந்த காரை அவர் அதிக மைலேஜ் கொடு்க்கும் விதத்தில் டிரைவிங் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும்விதமாக சமீபத்தில் இவர் கோவை-அவினாசி நெடுஞ்சாலையில் தனது காரை ஓட்டி காட்டினார். என்ன ஆச்சரியம். கோவை-அவினாசி இடையிலான 72.3 கி.மீ. தூரத்தை அந்த கார் வெறும் 1.58 லிட்டர் டீசலில் கடந்தது.

இதையடுத்து, நாராயணன் மேனனின் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்த சாதனை குறித்து நாராயணன் மேனன் கூறுகையில்," நல்ல பராமரிப்பும், முறையான டிரைவிங் செய்தாலே கார் நல்ல மைலேஜ் கொடுக்கும்" என்கிறார் மிகவும் தன்னடக்கத்துடன்.

நானோ கார் தீப்பிடித்து எரிந்தது : 7வது சம்பவம்.


குஜராத்தில் மீண்டும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த காரை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வதோதரா நகரில் சமீபத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை காரின் உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், டாடா மோட்டார்ஸ் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

வதோதரா நகரை சேர்ந்த மாயன்க் தோஷி என்பவரது நானோ கார்தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. அவர் தனது நானோ காரில் சப்னபுரா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எஞ்சினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

உடனே காரை விட்டு இறங்கி பார்ப்பதற்குள் தீ கார் முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீ்ய்ச்சியடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். நானோ கார் தீப்பிடித்து எரியும் 7வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்களால் நானோ காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட பிரச்னையை சரிசெய்து வரும் வகையில் நானோ கார்களை டாடா மோட்டார்ஸ் திரும்பபெற வேண்டும் என்று ஆட்டோமொபைல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

கடந்த ஆண்டு நானோ கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் அதன் விற்பனை படுபாதளத்திற்கு சென்றது. விளம்பரங்கள், சலுகைகளால் நானோ காரின் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் நானோ கார் தீப்பீடித்து எரிந்த சம்பவம் நானோ விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

பிரதமர் செய்த பாவத்தை வரலாறு மன்னிக்காது ; பாபா ராம்தேவ் ஆவேசம்.


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்துவாரில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். பொதுமக்கள், யோகா சீடர்கள் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று அவர் இன்று காலை வேண்டுகோள் விடுத்தார்.

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால் நல்ல அரசியல்வாதி அல்ல. டெல்லியில் நடந்த எங்கள் உண்ணாவிரதத்தை அவர் திட்டமிட்டு சீர்குலைத்து விட்டார். இதன் மூலம் அவர் பெரிய பாவம் செய்துள்ளார். உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதைத் தவிர வேறு வழி இல்லை என்று பிரதமர் கூறி உள்ளார்.

இப்படி சொல்லியதன் மூலம் அவர் தான் செய்த பாவத்தை ஒப்புக் கொண்டிருக் கிறார். இதனால் நான் அவரை மன்னித்து விட்டேன். தனிப்பட்ட முறையில் நான் அவரை மன்னித்து விட்டாலும் அவர் செய்த பாவத்துக்காக இந்தியா மட்டுமல்ல உலக வரலாறு அவரை மன்னிக்காது.

ஜன நாயகத்தை அவர் மாசுபடுத்தி விட்டார். சத்ரபதி, சிவாஜி போன்றவர்களை இந்த ஆட்சியாளர்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரவாதி களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இவர்கள் என்னை கொல்ல நினைக்கிறார்கள்.

என்னை ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்ற 5 விதமான சதி திட்டம் தீட்டப்பட்டது. இதை கருத்தில் கொண்டே மைதானம் முழுக்க ஏராளமான கண்காணிப்பு காமிராக்களை நாங்கள் பொருத்தி இருந்தோம். அந்த கேமிரா பதிவுகளை போலீசார் எடுத்து சென்று அதில் எடிட் செய்து காட்சிகளை மாற்றி உள்ளனர்.

தடியடி குற்றச் சாட்டில் இருந்து தப்பிக்க அவர்கள் காட்சி பதிவுகளை மாற்றி உள்ளனர். போலீசார் தப்பு செய்ய வில்லை என்றால் ரகசிய காமிரா பதிவுகளை எடுத்து சென்றது ஏன்? போலீசார் குண்டர்கள் போல நடந்து கொண்டனர்.

ராம்லீலா மைதானத்துக்குள் என்னை கொன்று விட நினைத்தனர். அதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தடவை கண்ணீர் புகை குண்டு வெடிக்கப்பட்டது. நான் அமர்ந்திருந்த மேடை எரிக்கப்பட்டது. தீவிரவாதிகள் என்னை கொல்ல திட்ட மிட்டிருந்தனர். இதற்கான இ-மெயில் மிரட்டல் வந்தது என்று சொல்வதெல்லாம் அரசின் சதி செயல்களில் ஒன்றாகும்.

இவ்வாறு பாபா ராம் தேவ் கூறினார்.

சமச்சீர் கல்விக்கு அ.தி.மு.க. எதிரானது அல்ல ; சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.


தமிழக சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திருத்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானது போன்ற எண்ணத்தை சிலர் பரப்ப முயற்சி செய்கிறார்கள். அ.தி. மு.க. அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானது அல்ல. இதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. நாங்கள் சமச்சீர் கல்விக்கு எதிரி அல்ல. அதில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் அன்றும் சொன்னோம், இன்றும் சொல்கிறோம்.

முன்னாள் முதல்- அமைச்சர் எழுதிய கவிதையை நீக்கிவிட்டு, பாடத்தை வைக்கலாம் என்று கூறுகிறார்கள். அப்படி செய்வது எங்கள் நோக்கம் அல்ல. அப்படி நாங்கள் நினைத்திருந்தால் அவற்றை நீக்கிவிட்டு பாடத்தை வைத்து இருக்கலாம். சமச்சீர் கல்வி மூலம் சிறப்பான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி நடந்தபோது வீராணம் திட்டம் கொண்டு வருவதாக சொல்லி கைவிட்டனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் புரட்சித்தலைவி புதிய வீராணம் திட்டம் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்படவில்லை. இந்த திட்டத்தில் உள்ள குறை பாடுகளை நீக்கி, ஏழை, கிராம மக்கள், நகர்ப்புற மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மக்களை மட்டுமல்ல, நீதித்துறையையும் ஏமாற்றி உள்ளனர். பலர் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில முடிவுகள் செல்லத் தக்கதல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அரசு அதுபற்றி திருத்தம் கொண்டு வராமலேயே சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அவர்களது சமச்சீர் கல்வி திட்டம் தரமானதாக இல்லை. குறைபாடுகள் உள்ளது.

முத்துக்குமரன் தலைமையிலான வல்லுனர் குழு 109 கருத்துக்களை கூறியுள்ளது. அவை முறைப்படி ஏற்கப்படவில்லை. கடந்த ஆட்சி அமைத்த கல்வியாளர் குழுவில் ஒரு கல்வியாளர் தவிர மற்ற 3 பேரும் அரசு அதிகாரிகள். எனவே சமச்சீர் கல்வி முறையாக கொண்டு வரப்படாததால் அதில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.

டெல்லியில் நாளை நடக்கும் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறப்போவதாக அறிவிப்பு.

டெல்லியில் நாளை நடக்கும்  அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடையை மீறப்போவதாக அறிவிப்பு

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த காந்தியவாதி அன்னா ஹசாரே 8-ந்தேதி ஒருநாள் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

ஜந்தர்மந்தரில் நடத்த திட்டமிட்டுள் இந்த உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகளை அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள். உண்ணாவிரதம் அமைதியாக நடைபெறும். கூட்டத்தில் அனைத்து மத பிரார்த்தனைப் பாடல்கள் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர லோக்பால் மசோதா குறித்து விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் கூட்டம், ஊர்வலம் உள்பட ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தக்கூடாது என்று போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாலும் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை திட்டமிட்டப்படி நடத்த அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக உள் ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் இதுபற்றி கூறுகையில், அன்னா ஹசாரே நாளை ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

பிரபல வக்கீல் சாந்திபூஷன் டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதி சிறப்பு அனுமதி கேட்டுள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மத்திய டெல்லி பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் மிரட்டல் எதுவும் இல்லை. அவசரமான சூழ்நிலையும் இல்லை. அப்படி இருக்கும் போது மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பது மக்கள் உரிமையை மீறுவதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

8-ந்தேதி நடக்கும் உண்ணாவிரதம் அமைதியாக நடை பெறும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அன்று ஜந்தர் மந்தருக்கு வரும் மக்களை தடுத்து நிறுத்தினால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறிப்பதாக இருக்கும். டெல்லி போலீசார் இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு வக்கீல் சாந்தி பூஷன் கூறினார்.

இந்தியாவில் முதல் முறையாக 9 மாடி உல்லாச கப்பல் : சென்னையில் இருந்து நாளை முதல் இயக்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக 9 மாடி உல்லாச கப்பல்: சென்னையில் இருந்து நாளை முதல் இயக்கப்படுகிறது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள “அமெட்” கடல்சார் பல்கலைக் கழகத்தின் வேந்தர் நாசே ஜெ.ராமச்சந்திரன் இந்தியாவில் முதல் கடல் சார் பல்கலைக்கழகத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்போது கடல்சார் கல்வியின் தரத்தை உயர்த்தவும் வேலை வாய்ப்பை பெருக்கவும் இந்திய சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யவும் புதிய சொகுசு கப்பலை சொந்தமாக வாங்கி உள்ளார்.

இந்த கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. அமெட் மெஜஸ்டி என்ற இந்த சொகுசு கப்பலில் 9 மாடிகள் உள்ளன. 9 மாடிகளிலும் சேர்த்து 267 தங்கும் அறைகள் உள்ளன. கப்பல் முழுவதும் 5 நட்சத்திர ஓட்டல் அந்தஸ்துடன் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்குள் நுழைந்ததும் அரண்மனைக்குள் நுழைவது போல் இருக்கும். தங்கும் அறைகளில் சொகுசு மெத்தைகள், வரவேற்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் 1400 பயணிகள் பயணம் செய்யலாம். ஒவ்வொரு மாடியிலும் அழகு நிலையங்கள், கடைகள், மசாஜ் கிளப்புகள் உள்ளன. பலவகை விளையாட்டு அரங்கங்கள், குழந்தைகளுக்கு தனி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி அரங்கங்கள், மதுபான பார்கள் உள்ளன.

24 மணி நேரமும் இயங்கும் காபி பார், சைவ, அசைவ உணவு விடுதிகள் மற்றும் தந்தூரி, சைனீஸ் மற்றும் உலக பிரசித்தி பெற்ற உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும். ஜெயின் சமூகத்துக்கான சிறப்பு உணவகமும் அமைந்துள்ளது. சுங்க வரி இல்லாத மார்க்கெட்டும் உள்ளது.

கடல் பயணத்தின் போது இயற்கையையும், சூரிய ஒளியையும் ரசித்தப்படி நீந்தி மகிழ நீச்சல் குளம் உள்ளது. இது தவிர பிரமாண்டமான அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் கடலுக்குள் சென்ற படியே விழாக்கள் நடத்தலாம். திருமணங்கள் நடத்தலாம்.

உல்லாச பயணிகளை வெகுவாக கவரும் இந்த கப்பல் நாளை முதல் தனது பயணத்தை தொடங்குகிறது. சென்னை துறைமுகத்தில் நாளை மாலை நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து திரிகோணமலை செல்லும். விரைவில் மும்பை-கோவா, கொச்சி-மாலத்தீவு, அந்தமான், தாய்லாந்து, மலேசியா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

ஒரு நாள், 3 நாள் என்று பலவித பேக்கேஜில் உல்லாச பயணம் செய்யலாம். குறிப்பாக கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் 210 பேருக்கு இந்த கப்பலில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடல் வழி படிப்பில் சொந்த கப்பலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இங்கு மட்டும் தான். இது மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாகும்.

இந்தியாவில் முதல் சொகுசு கப்பலை இயக்கி பெருமை சேர்த்துள்ள நாசே ராமச்சந்திரன் கூறியதாவது:-

தரமான கடல்சார் கல்வியைக் கற்பித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை உலக அரங்கில் உள்ள முன்னணிக் கப்பல் கம்பெனிகளில் பணியமர்த்தி சாதனை படைத்து வருகிறோம். எங்கள் பல்கலைக்கழகம் தனது சொந்த கப்பலில் தனது மாணவர்களுக்கு கடலில் பயணிக்க வைக்கிறது.

கடல்சார் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அமெட் பல்கலைக்கழகத்தின் 210 மாணவர்கள் இக் கப்பலில் பயிற்சி மேற்கொள்ள இந்திய அரசின் கப்பல் இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர் கல்வி திட்டம் திருத்தம் : சட்டசபையில் மசோதா நிறைவேறியது.


தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு பள்ளிக் கல்வியைப் பொறுத்த அளவில் 2010-ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டம் இயற்றப்படுவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் பரிசீலித்ததின் பேரில், ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், அனைவருக்கும் பொதுவான பள்ளிக்கல்வி முறையை கொண்டு வருவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை அங்கீகரித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த சட்டத்தின் ஒரு சிலவற்றை செல்லாது என நீக்கம் செய்துள்ளது. இதில் வேறு சில வகை முறைகளை திருத்துவதற்காக, அதிகாரம் வழங்கி உள்ளது.

1 மற்றும் 6-ம் வகுப்புக்கான சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான முடிவுகள் பதவி வழி உறுப்பினர்களால் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வாரியத்தின் பிற உறுப்பினர்கள் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரியம், மத்திய சட்டத்தின்படி கல்வி அதிகார அமைப்பாக பணியாற்று வதற்கு அரசினால் அறிக்கை வாயிலாக குறித்துரைக்கப்படும் அதே வாரியமாக இருக்குமா? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டத்தின்படி அறிமுகப்படுத்த, கருதப்பட்ட பாடத்திட்டத்தை பொறுத்த அளவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடத் திட்டமானது பல்வேறு பாடங்களில் உதாரணமாக கணக்கியல், அறிவியல், ஆங்கிலம் போன்றவற்றில் தரத்தையும் உள்ளடக்கத்தையும் பொறுத்த அளவில் தகுதியில் குறைந்ததாக காணப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்தை தகர்ப்பதாக இருக்கிறது.

புதிய முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய பாட நூல்களை ஆய்வு செய்தால், அதில் ஆக்கப்பூர்வமான கல்வி கற்றல் மற்றும் பாடத்திட்டத்துக்கு வெளியே கல்விக் கற்றல் ஆகியவை தேசிய கலைத் திட்ட வடிவமைப்பால் பரிந்துரை செய்யப்பட்டபடி, ஏற்றதாக இல்லை என்பதை காணலாம். இது தமிழ்நாட்டு மாணவர்கள், உயர் கல்விக்காக தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, இந்த நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சமமாக இருக்காது.

எம்.பி. விஜயகுமார், முனைவர் முத்துக்குமரன் குழுக்களின் அறிக்கையில் கொடுக்கப்பட்ட முக்கியமான ஒரு சில பரிந்துரைகள் வகை செய்யப்படவில்லை. எனவே பாடத் திட்டம் ஒன்றை தக்க முறைகளில் உருவாக்குவதில் உதவி செய்வதற்கான ஆலோசனை அமைப்பு எதுவும் இல்லை. பொதுவான பாடதிட்டத்தை வகுக்கவும் பாட நூல்களை வகுப்பதற்கான தகுதி வாய்ந்த அமைப்பு எதுவும் இல்லை.

இரண்டாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலுமான வகுப்புகளுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கொண்டு வந்துள்ள புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் அறிவிக்கப்படவில்லை.

சமச்சீர் கல்வி என்பது பொதுவான பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் வகுப்பது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமானவற்றை கொண்டவைகளாகும். முனைவர் முத்துக்குமரன் குழுவினால் செய்யப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை மாணவர்கள் நலன் கருதி விரிவாக ஆய்வு செய்வது தேவையான ஒன்று.

மாணவர்களை மதிப்பிட்டு கணிக்கும் முறையில் மாற்றங்கள் தேவைப் படுகிறது என்று அவர் வலி யுறுத்தியுள்ளார். எனவே சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாததாக ஆகி உள்ளது.

இந்த அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வழிமுறைகளை வழங்கி, ஆலோசனை பெறுவதற்கு குழு ஒன்றை நியமிக்க கருதுகிறது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க சமச்சீர் கல்வி முறை சட்டத்தை திருத்துவது அவசியமாகிறது.

சமச்சீர் கல்வி சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை விட்டு விடுவதும் அவசியமா னதாக உள்ளது. பாடத்திட்டங்களும், பாட நூல்களும், இந்த சட்டத்தின் நோக்கங்களை முழுவதுமாக நிறைவு செய்வதாக இல்லை. உலக சவால்களை எதிர்கொள்ள, மாணவர்களை தயார்படுத்துவதாகவும் இல்லை.

எனவே அனைத்துப் பிரிவினருக்கும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய வல்லுனர்களைக் கொண்ட உயர் அதிகாரக் குழு நியமித்து புதிய பாடத் திட்டம் குறித்து ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. இதற்கு ஏற்ப இந்த சட்டம் திருத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த சட்ட திருத்தம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதல் - அமைச்சர் ஜெயலலிதாவும், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகமும் விளக்கம் அளித்தனர். அதன் பிறகு இந்த சட்ட திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏர்செல் சிவசங்கரன் வாக்குமூலம் எப்.ஐ.ஆர். ஆக பதிவாகிறது ; சி.பி.ஐ. திடீர் முடிவு.


பிரபல தொழில் அதிபர் சிவசங்கரன் கடந்த 2006-ம் ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றார். ஸ்பெக்ட்ரம் உரிமம் அவரது நிறுவனத்துக்கு திட்ட மிட்டு கொடுக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு நிர்ப்பந்தம் காரணமாக ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டிய சூழ்நிலை சிவசங்கரனுக்கு உருவாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட சிவசங்கரன், எனது நிறுவனத்தை விற்க தயாநிதி மாறன்தான் நிர்ப்பந்தம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனால் நான் யாரையும் நிர்ப்பந்தம் செய்ய வில்லை என்று தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் சிவசங்கரன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடுகள் குறித்து சிவசங்கரன் விளக்கம் அளித்தார். ஏர்செல் நிறுவனம் கைமாறியதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக சிவசங்கரன் கூறியதாக தெரிகிறது.

சிவசங்கரன் தெரிவித்துள்ள தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக தொகுத்துள்ளனர். அவர் வெளியிட்ட கருத்துக்களும் முதல் கட்ட விசாரணை குறிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஆக மாற்ற சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இது தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தொழில் அதிபர் சிவ சங்கரனை முக்கிய சாட்சியாக சேர்க்கவும் சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது.

இது ஸ்பெக்ட்ரம் ஊழலை நிரூபிக்க சி.பி.ஐ.க்கு பலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் சி.பி.ஐ. யிடம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தை தொடர்ந்து, இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களை நினைத்து பயப்படாமல் அதிகாரிகள் தைரியமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரம் முழுமையான அறிக்கை தர வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாரதீய ஜனதா போராட்டத்தில் சுஷ்மாசுவராஜ் நடனம்.


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் போராட்டம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப் பட்டது. உண்ணாவிரத பந்தலில் நள்ளிரவில் புகுந்த போலீசார் தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்ததுடன் பாபா ராம்தேவை டெல்லியில் இருந்து வெளியேற்றியது.

போலீசாரின் இந்த செயலை கண்டித்து டெல்லி ராஜ்காட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடனம் ஆடினார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் சுஷ்மாசுவராஜ் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் நடனம் ஆடியது கண்டிக்கத்தக்கது. சத்யாகிரக போராட்டத்துக்கு அவர் அளித்துள்ள முக்கியத்துவம் இதுதானா? இப்படித்தான் சத்தியாகிரகத்தை வெளிப் படுத்துவதா? அதில் என்ன சந்தோஷப்பட இருக்கிறது.

அப்படி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தால் அன்னாஹசாரே அல்லது பாபாராம்தேவ் ஆகியோர் முன்னிலையில் நடனம் ஆடட்டும். காந்தி சமாதியின் புனிதத்தை கெடுக்க வேண்டாம் என்றார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்.


மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்டம் மேலூர் கோர்ட்டில் இன்று சரணடைந்தார். பின்னர் அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேலூர் அருகே கோவிலில் ஏற்பட்ட தகராறில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உட்பட 6 பேர் மீது, மேலூர் தாசில்தார் காளிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீரென காளிமுத்து தான் அளித்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை கோர்ட் ஏற்கவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அடிப்படையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.

முன்ஜாமீன் வழங்கப்பட்டதன் பேரில் மதுரை மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி யாத்மின் முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னள் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை ஆஜரானார்கள்.

இதையடுத்து இருவரையும் ஜாமீனில் செல்ல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அழகிரி வந்ததால் மேலூர் கோர்ட் வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர் தொழிற்சாலையில் பிரதமர் பயன்படுத்தும் விமானம் பழுது பார்க்கும் பணி.


ஓசூர் அருகே பேள கொண்டப்பள்ளியில் தனியார் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 2 பேர் முதல் 6 பேர் வரை பயணம் செய்யக் கூடிய குட்டி ரக பயணிகள் விமானம், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆள் இல்லாத குட்டி விமானங்கள் தயாரிக்கப்படுகிறது.

இதைத் தவிர பெரிய மற்றும் சிறிய ரக பயணிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பழுது நீக்கி தரப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்தும் விமானத்தை இங்கு பழுது பார்க்க விமானப்படை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த சில நட்களுக்கு முன்பு வந்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. (பொறுப்பு) சைலேந்திரபாபு கடந்த 30-ந்தேதி ஓசூர் வந்து பிரதமர் விமானம் வர உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் பயன்படுத்தக்கூடிய விமானம் நேற்று ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப் பள்ளியில் உள்ள தனியார் விமான தயாரிப்பு நிறு வனத்திற்கு வந்தது. இங்கு விமானத்தின் பழுதுகள் சரிபார்க்கப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி மேற்பார்வையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரஜினி உடல் நலம் பெற கிணற்று தண்ணீரில் யோகாசனம் செய்த ரசிகர் .

ரஜினி உடல் நலம் தேற கிணற்று தண்ணீரில் யோகாசனம் செய்த ரசிகர்: கோவிலிலும் சிறப்பு பூஜை

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டத்திலும் ரஜினி ரசிகர்கள் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.

உத்தமபாளையம் ஒன்றிய ரசிகர் மன்றம் சார்பில் நேற்று காலையில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்தார்கள். இதில் தேவாரம் பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி தேவராத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் விஜயன் (வயது48) என்பவர் கிணற்று தண்ணீரில் யோகாசனம் செய்தார். உப்புக் கோட்டையில் உள்ள ஒரு கிணற்று தண்ணீரில் இவர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு யோகாசனம் தொடங்கி பிரார்த்தனை செய்தார். மாலை 6 மணி வரை அவர் யோகசனம் செய்தார்.

ரஜினி ரசிகர் யோகாசனம் செய்வதை அறிந்ததும் அங்கு ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் யோகாசனம் செய்த ரஜினி ரசிகருக்கு உற்சாகம் அளித்தனர்.

திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கும் எல்.கே.ஜி. மாணவி.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் சொந்தமாக கட்டிட வசதி கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்து பள்ளியில் (ஸ்ரீராமஜெயம் வித்யாலயா) எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைதான் ராகவி.

இவள் அதிசய குழந்தையாக உள்ளாள். திருக்குறள் என்றதும் 100 திருக்குறளை திக்காமல் திணறாமல் கடகடவென சொல்கிறாள். 5 என்றவுடன் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், ஐம்பூதங்கள், ஐவகை நிலங்கள் என 5 செய்திகளை அடுக்கி கொண்டே போகிறாள்.

நாடுகள் என்றவுடனேயே உலகத்தின் அத்தனை நாடுகளுக்கான தலைநகரங் களையும், நாட்டின் தேசிய பறவை, தேசிய மலர், தேசிய பூ, தேசிய மரம், தேசிய விலங்கு என அனைத்தையும் சொல்கிறாள்.

மாநிலங்கள் என சொன்னதும் இந்தியாவின் அத்தனை மாநிலங்களையும் அதன் தலைநகரங்களையும் சொல்கிறாள். மேலும் கனீரென்ற குரலில் பேசி கண்ணகி பாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான நடிப்புத்திறமையும் மாணவி ராகவியிடம் உள்ளது.

இக்குழந்தையை பள்ளியின் தாளாளர் ஜெயமணி, பெற்றோர் செந்தில்குமார்-இந்திரா ஆகியோர் மேலும் சாதனை படைக்க ஊக்குவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் காலத்திலும் மேல்-சபை வராது : ஜெயலலிதா பேச்சு.


தமிழக சட்டசபையில் மேல்-சபையை ரத்து செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை ஒன்றைத் தோற்றுவிக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு இச்சட்டப் பேரவையால் திரும்பப் பெறவேண்டும் என்றும், இந்த முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றம் தேவையெனக் கருதும் அளவிற்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களிலும் திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய அவசியமான விதிக்கூறுகளை உள்ளடக்கிய தேவையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்றும் இப்பேரவை தீர்மானிக்கிறது.

அ.தி.மு.க.வை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். அரசால் தமிழக சட்டமன்ற மேலவையை நீக்கும் தீர்மானம் 1986 ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை நீக்கும் சட்டம் 30.8.1986 அன்று அங்கீகரிக்கப்பட்டு 1.11.1986 முதல் அமல்படுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக, 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிப்பதற்கான தீர்மானத்தினை 20.2.1989 அன்று இந்த அவையில் நிறைவேற்றியது.

1991 ஆம் ஆண்டு அ.தி. மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தினை 4.10.1991 அன்று இதே சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியது.

1996 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவையை உருவாக்க வேண்டும் என்ற அளவில் மீண்டும் ஒரு தீர்மானத்தினை 26.7.1996 அன்று நிறைவேற்றியது.

மீண்டும் 2001 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற அ.தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவைத் தேவையில்லை என்ற அளவில் ஒரு தீர்மானத்தை 12.9.2001 அன்று இயற்றியது.

இதனையடுத்து, 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மைனாரிட்டி தி.மு.க. அரசு, நான்கு ஆண்டு காலம் கழித்து 12.4.2010 அன்று சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், மத்தியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இதற்கான சட்டத்தினையும் இயற்றியது.

இருப்பினும், சட்டமன்ற மேலவைக்கான தொகுதி வரையறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்று தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால், சட்டமன்ற மேலவைக்கான தேர்தல்கள் நடைபெறாத சூழ்நிலை தற்போது உள்ளது.

சட்டமன்ற மேலவை தேவை என்று 2010 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ... இத்தகைய அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று அரிய ஆலோசனைகளைக் கூறத்தக்க வகையில் ... சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வருவோம் என்ற அளவில் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக இருந்தவர்களும் இருக்கிறார்கள், கல்வியாளர்கள் இருக்கிறார்கள், சமூக எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்குகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அப்படி இருக்கும்போது, சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் மு.க. ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. மற்றொரு மகன் மு.க. அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுவிட்டன. மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கும், தன் துதி பாடுகிறவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்டமன்ற மேலவையை தி.மு.க. கொண்டு வந்ததே தவிர, பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை, சான்றோர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2010 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை அமைப்பது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய செங்கோட்டையன்... இறுதிக் காலத்தில், கடைசி நேரத்தில் ஓராண்டிற்கு முன்னாலே இதைக் கொண்டு வரவேண்டியதன் அவசியம் என்ன? என்று கேட்டதற்கு பதில் அளித்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, இது யாருக்குக் கடைசி காலம் என்பது இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற அளவிலே கூறியிருக்கிறார்.

இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டமன்ற மேலவை தேவையில்லை என்பதை மக்களும் ஆமோதித்து இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

இந்தியாவிலே இருக்கின்ற 28 மாநிலங்களில், கர்நாடகா, மகராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் மட்டும் தான் சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்றப் பேரவை ஆகிய இரு அமைப்புகளும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற பெரும்பாலான மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை. இதிலிருந்தே மேலவை வேண்டும் என்ற கருத்து எவ்வளவு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை எளிதில் எவரும் தெரிந்து கொள்ளலாம்.

அந்நியர் நம்மை ஆண்ட போது, 1919-ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தக் குழு கொடுத்த அறிக்கை ஒன்றினால் உருவானவைதான் சட்டமன்ற மேலவைகள். ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில், ஜனநாயக ரீதியாக அமையும் சட்டமன்றப் பேரவைகளுக்குப் போட்டியான அமைப்புகளாக உருவாக்கப்பட்டது தான் சட்டமன்ற மேலவைகள் என நற்சிந்தனையாளர்கள் பலரும் கருதி வந்தனர்.

முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை எனக் கருதப்படும் மேலவை தேவையற்றது என்பதையே மிகத் திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மறைந்த கல்யாண சுந்தரம், சிக்கனம் தேவையென்று சொன்னால், மிகச் சரியான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால், தேவையற்ற மேலவையை கலைத்துவிடலாம் என்பது என் அபிப்ராயம் என்று தெரிவித்து இருக்கிறார்.

சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “மேலவை எனப்படும் இந்த இரண்டாம் அவை எப்போதும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று அல்ல; தற்காலிகமான ஏற்பாடுதான். இதனை என்றைக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம், நீக்கி விடலாம், கலைத்து விடலாம் என தெளிவுபட கூறியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிறைவேற்றிட சபதமேற்று, அதற்கான பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், அவருடைய கொள்கைகளின்படியும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் மேலான கருத்துக்களின்படியும், அனைத்து முற்போக்கு சிந்தனையுள்ளம் கொண்டவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளின்படியும், தமிழகத்திற்கு மேலவை தேவையில்லை என முடிவெடுத்து இத்தீர்மானத்தை முன் வைத்துள்ளோம்.

எனக்கு முன்னால் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு வரும்போது இந்த மேலவை வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். திரும்பத் திரும்ப தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மேலவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறார்கள். இனிமேல் எந்தக் காலத்திலும் மீண்டும் ஆட்சிக்கு வருபவர்கள் மேலவையை கொண்டு வருவதற்கு வழியில்லாமல் செய்திட ஏதாவது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று இங்கே கேட்டுக் கொண்டார்.

எனக்குத் தெரிந்தவரை மேலவை வேண்டுமென்று நினைக்கின்ற ஒரே கட்சி தி.மு.க. தான். ஆகவே, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து மேலவையை கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான். இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது என்பதைத் தெரிவித்து, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை தேவையென எடுக்கப்பட்ட முடிவினை நீக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு இந்த மாமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு அமைகின்றேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.