Tuesday, June 7, 2011

சமச்சீர் கல்விக்கு அ.தி.மு.க. எதிரானது அல்ல ; சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.


தமிழக சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திருத்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானது போன்ற எண்ணத்தை சிலர் பரப்ப முயற்சி செய்கிறார்கள். அ.தி. மு.க. அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானது அல்ல. இதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. நாங்கள் சமச்சீர் கல்விக்கு எதிரி அல்ல. அதில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் அன்றும் சொன்னோம், இன்றும் சொல்கிறோம்.

முன்னாள் முதல்- அமைச்சர் எழுதிய கவிதையை நீக்கிவிட்டு, பாடத்தை வைக்கலாம் என்று கூறுகிறார்கள். அப்படி செய்வது எங்கள் நோக்கம் அல்ல. அப்படி நாங்கள் நினைத்திருந்தால் அவற்றை நீக்கிவிட்டு பாடத்தை வைத்து இருக்கலாம். சமச்சீர் கல்வி மூலம் சிறப்பான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி நடந்தபோது வீராணம் திட்டம் கொண்டு வருவதாக சொல்லி கைவிட்டனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் புரட்சித்தலைவி புதிய வீராணம் திட்டம் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்படவில்லை. இந்த திட்டத்தில் உள்ள குறை பாடுகளை நீக்கி, ஏழை, கிராம மக்கள், நகர்ப்புற மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மக்களை மட்டுமல்ல, நீதித்துறையையும் ஏமாற்றி உள்ளனர். பலர் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில முடிவுகள் செல்லத் தக்கதல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அரசு அதுபற்றி திருத்தம் கொண்டு வராமலேயே சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அவர்களது சமச்சீர் கல்வி திட்டம் தரமானதாக இல்லை. குறைபாடுகள் உள்ளது.

முத்துக்குமரன் தலைமையிலான வல்லுனர் குழு 109 கருத்துக்களை கூறியுள்ளது. அவை முறைப்படி ஏற்கப்படவில்லை. கடந்த ஆட்சி அமைத்த கல்வியாளர் குழுவில் ஒரு கல்வியாளர் தவிர மற்ற 3 பேரும் அரசு அதிகாரிகள். எனவே சமச்சீர் கல்வி முறையாக கொண்டு வரப்படாததால் அதில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.

No comments: