Tuesday, June 7, 2011

இந்தியாவில் முதல் முறையாக 9 மாடி உல்லாச கப்பல் : சென்னையில் இருந்து நாளை முதல் இயக்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக 9 மாடி உல்லாச கப்பல்: சென்னையில் இருந்து நாளை முதல் இயக்கப்படுகிறது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள “அமெட்” கடல்சார் பல்கலைக் கழகத்தின் வேந்தர் நாசே ஜெ.ராமச்சந்திரன் இந்தியாவில் முதல் கடல் சார் பல்கலைக்கழகத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்போது கடல்சார் கல்வியின் தரத்தை உயர்த்தவும் வேலை வாய்ப்பை பெருக்கவும் இந்திய சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யவும் புதிய சொகுசு கப்பலை சொந்தமாக வாங்கி உள்ளார்.

இந்த கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. அமெட் மெஜஸ்டி என்ற இந்த சொகுசு கப்பலில் 9 மாடிகள் உள்ளன. 9 மாடிகளிலும் சேர்த்து 267 தங்கும் அறைகள் உள்ளன. கப்பல் முழுவதும் 5 நட்சத்திர ஓட்டல் அந்தஸ்துடன் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்குள் நுழைந்ததும் அரண்மனைக்குள் நுழைவது போல் இருக்கும். தங்கும் அறைகளில் சொகுசு மெத்தைகள், வரவேற்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் 1400 பயணிகள் பயணம் செய்யலாம். ஒவ்வொரு மாடியிலும் அழகு நிலையங்கள், கடைகள், மசாஜ் கிளப்புகள் உள்ளன. பலவகை விளையாட்டு அரங்கங்கள், குழந்தைகளுக்கு தனி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி அரங்கங்கள், மதுபான பார்கள் உள்ளன.

24 மணி நேரமும் இயங்கும் காபி பார், சைவ, அசைவ உணவு விடுதிகள் மற்றும் தந்தூரி, சைனீஸ் மற்றும் உலக பிரசித்தி பெற்ற உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும். ஜெயின் சமூகத்துக்கான சிறப்பு உணவகமும் அமைந்துள்ளது. சுங்க வரி இல்லாத மார்க்கெட்டும் உள்ளது.

கடல் பயணத்தின் போது இயற்கையையும், சூரிய ஒளியையும் ரசித்தப்படி நீந்தி மகிழ நீச்சல் குளம் உள்ளது. இது தவிர பிரமாண்டமான அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் கடலுக்குள் சென்ற படியே விழாக்கள் நடத்தலாம். திருமணங்கள் நடத்தலாம்.

உல்லாச பயணிகளை வெகுவாக கவரும் இந்த கப்பல் நாளை முதல் தனது பயணத்தை தொடங்குகிறது. சென்னை துறைமுகத்தில் நாளை மாலை நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து திரிகோணமலை செல்லும். விரைவில் மும்பை-கோவா, கொச்சி-மாலத்தீவு, அந்தமான், தாய்லாந்து, மலேசியா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

ஒரு நாள், 3 நாள் என்று பலவித பேக்கேஜில் உல்லாச பயணம் செய்யலாம். குறிப்பாக கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் 210 பேருக்கு இந்த கப்பலில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடல் வழி படிப்பில் சொந்த கப்பலில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இங்கு மட்டும் தான். இது மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாகும்.

இந்தியாவில் முதல் சொகுசு கப்பலை இயக்கி பெருமை சேர்த்துள்ள நாசே ராமச்சந்திரன் கூறியதாவது:-

தரமான கடல்சார் கல்வியைக் கற்பித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை உலக அரங்கில் உள்ள முன்னணிக் கப்பல் கம்பெனிகளில் பணியமர்த்தி சாதனை படைத்து வருகிறோம். எங்கள் பல்கலைக்கழகம் தனது சொந்த கப்பலில் தனது மாணவர்களுக்கு கடலில் பயணிக்க வைக்கிறது.

கடல்சார் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அமெட் பல்கலைக்கழகத்தின் 210 மாணவர்கள் இக் கப்பலில் பயிற்சி மேற்கொள்ள இந்திய அரசின் கப்பல் இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: