Tuesday, June 7, 2011

பிரதமர் செய்த பாவத்தை வரலாறு மன்னிக்காது ; பாபா ராம்தேவ் ஆவேசம்.


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்துவாரில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். பொதுமக்கள், யோகா சீடர்கள் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று அவர் இன்று காலை வேண்டுகோள் விடுத்தார்.

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால் நல்ல அரசியல்வாதி அல்ல. டெல்லியில் நடந்த எங்கள் உண்ணாவிரதத்தை அவர் திட்டமிட்டு சீர்குலைத்து விட்டார். இதன் மூலம் அவர் பெரிய பாவம் செய்துள்ளார். உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதைத் தவிர வேறு வழி இல்லை என்று பிரதமர் கூறி உள்ளார்.

இப்படி சொல்லியதன் மூலம் அவர் தான் செய்த பாவத்தை ஒப்புக் கொண்டிருக் கிறார். இதனால் நான் அவரை மன்னித்து விட்டேன். தனிப்பட்ட முறையில் நான் அவரை மன்னித்து விட்டாலும் அவர் செய்த பாவத்துக்காக இந்தியா மட்டுமல்ல உலக வரலாறு அவரை மன்னிக்காது.

ஜன நாயகத்தை அவர் மாசுபடுத்தி விட்டார். சத்ரபதி, சிவாஜி போன்றவர்களை இந்த ஆட்சியாளர்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரவாதி களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இவர்கள் என்னை கொல்ல நினைக்கிறார்கள்.

என்னை ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்ற 5 விதமான சதி திட்டம் தீட்டப்பட்டது. இதை கருத்தில் கொண்டே மைதானம் முழுக்க ஏராளமான கண்காணிப்பு காமிராக்களை நாங்கள் பொருத்தி இருந்தோம். அந்த கேமிரா பதிவுகளை போலீசார் எடுத்து சென்று அதில் எடிட் செய்து காட்சிகளை மாற்றி உள்ளனர்.

தடியடி குற்றச் சாட்டில் இருந்து தப்பிக்க அவர்கள் காட்சி பதிவுகளை மாற்றி உள்ளனர். போலீசார் தப்பு செய்ய வில்லை என்றால் ரகசிய காமிரா பதிவுகளை எடுத்து சென்றது ஏன்? போலீசார் குண்டர்கள் போல நடந்து கொண்டனர்.

ராம்லீலா மைதானத்துக்குள் என்னை கொன்று விட நினைத்தனர். அதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தடவை கண்ணீர் புகை குண்டு வெடிக்கப்பட்டது. நான் அமர்ந்திருந்த மேடை எரிக்கப்பட்டது. தீவிரவாதிகள் என்னை கொல்ல திட்ட மிட்டிருந்தனர். இதற்கான இ-மெயில் மிரட்டல் வந்தது என்று சொல்வதெல்லாம் அரசின் சதி செயல்களில் ஒன்றாகும்.

இவ்வாறு பாபா ராம் தேவ் கூறினார்.

No comments: