Saturday, June 18, 2011

சமச்சீர்க் கல்வி நிபுணர் குழு அதிர்ச்சி அளிக்கிறது ராமதாஸ்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டிஏவி பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டு விட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒருசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறுன்.

இவ்வாறு ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் ரூ.323.62 கோடி டெபாசிட் ; திருப்பதி கோவிலுக்கு ரூ.11 கோடி வருமானம்.

வங்கிகளில் ரூ.323.62 கோடி டெபாசிட்; திருப்பதி கோவிலுக்கு  ரூ.11 கோடி வருமானம்

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலின் உண்டியல் வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உண்டியல் வருமானத்தை தேவஸ்தான அதிகாரிகள் வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.

இதன் மூலம் கோவிலுக்கு வட்டி வருமானம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு பல்வேறு வங்கிகளில் தேவஸ்தான அதிகாரிகள் ரூ.323.62 கோடி டெபாசிட் செய்தனர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வட்டி மூலம் ரூ.10.94 கோடி கோவிலுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதி ரெயில் நிலையத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லக்கேஜில் முகவரி எழுதும் பிளாஸ்டிக் அட்டை தரப்படுகிறது. பக்தர்கள் அதை லக்கேஜில் இணைத்து முகவரியை எழுதி விடலாம்.

இதன் மூலம் லக்கேஜை யாராவது தவறவிட்டால் போலீசார் அதை உரியவர் களிடம் எளிதாக ஒப்படைக்க முடியும். இந்தியாவிலேயே இந்த முறை முதன் முதலாக திருப்பதி ரெயில் நிலையத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிகாரிகள் சுருட்டிய ரூ.6 லட்சம் கோடி ஊழல் பணம் வெளிநாட்டு பாங்கிகளில் பதுக்கல்.

சீன அதிகாரிகள் சுருட்டிய ரூ.6 லட்சம் கோடி ஊழல் பணம் வெளிநாட்டு பாங்கிகளில் பதுக்கல்

சீனாவில் ஊழல் மலிந்துவிட்டது எனக் கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, ஊழல் நடைபெறுவதை சீன அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனாவின் மத்திய வங்கி ஒரு குழு அமைத்தது.

அந்த குழுவினர் சமீபத்தில் அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், சீன அதிகாரிகள் ரூ.6 லட்சம் கோடி லஞ்ச பணம் சம்பாதித்ததாக கூறப்பட்டுள்ளது. 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1990 முதல் 2008-ம் ஆண்டு வரை இந்த மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வர்த்தக ரீதியாக பணபரிமாற்றம் செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து இவற்றை லஞ்சமாக பெற்றுள்ளனர்.

இந்த பணத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளில் உலக வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் சீனாவின் பொருளாதாரம் சீரழியும், அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஊழல் அதிகாரிகள் மீது சீனஅரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வெளிநாட்டு பாங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

உலகில் முதல்முறையாக 20 வயது பெண்ணுக்கு நுரையீரல் மாற்று ஆபரேசன் ; இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை.

உலகில் முதல்முறையாக 20 வயது பெண்ணுக்கு நுரையீரல் மாற்று ஆபரேசன்; இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்தவர் பெக்கி ஜோன்ஸ். 20 வயது பெண்ணான இவர் கடுமையான மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டார். இவரை தெற்கு மான்லுஸ்டரில் உள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவரது நுரையீரலில் பூஞ்சைக்காளான் நோய் பாதித்து இருப்பதை கண்டறிந்தனர்.

எனவே, நுரையீரலில் உள்ள பூஞ்சைக்காளானை அகற்ற மருந்து மாத்திரைகளை வழங்கினர்.ஆனால், அந்த நோய் குணமாகவில்லை. மாறாக அதிக அளவில் பரவியது. முன்பை விட மூச்சு திணறல் அதிகமானது.

எனவே நுரையீரல் மாற்று ஆபரேசன் நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெக்கி ஜோன்ஸ்சுக்கு நுரையீரல் மாற்று ஆபரேசனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது அவர் எந்தவித பிரச்சினையும் இன்றி வழக்கமாக சுவாசிக்கிறார்.

இதற்கு முன்பு அமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்கு செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தினர். அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது உலகிலேயே முதல்முறையாக நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வைட்டமின் சி குறைவு - ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சை.வீடானாலும், கோவில் என்றாலும் அங்கே எலுமிச்சையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அந்த பழத்தில் உள்ள அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களே. வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எலுமிச்சை உடல் நலத்தை பாதுகாக்கிறது. கோவில்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சப்பழ மாலையும், எலுமிச்சை விளக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். எலுமிச்சை கனிகள் மருத்துவ குணம் கொண்டவை கனிகளின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். வைட்டமின் சி குறைவினால் வரும் ஸ்கர்வி நோய்க்கு எதிரானது.

செயல் திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், உள்ளன. அஸ்காரிக் அமிலம், அலனைன், நியாசின், வைட்டமின் சி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்க்மோட்டின், நாரிங்கின், சிட்ரால், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிங் அமிலம்

சர்வரோக நிவாரணி

நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் அதிகம் காணப்படுகிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

நுரையீரல் நோய்களை தடுக்கும்

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். எலுமிச்சை சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப் போக்கும். நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. நுரையீரல் நோய்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் பெற இயலும். ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. பசி தூண்டுவி. தசை இறுக்கி, சீரண ஊக்குவி, வயிற்று வலி தீர்க்கும். வாந்தி நிறுத்தும்.

சீரண மண்டலம்

கல்லீரல் தொல்லைகளைப் போக்க வல்லது. கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களுக்கு எலுமிச்சை ஊறுகாய் பயன்படுகிறது. எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளியின் தாகம் போக்கும். கொசுக்கடியினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் குடைச்சல் போக்க கடித்த இடத்தில் எலுமிச்சை சாறினைப் பூச வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் சாறினைப் பூசினால் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும்.

வயிற்றுப் போக்கு

எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை இறுக்கும் குணம் உண்டு. அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக வயிற்றுப் போக்கு நின்றுவிடும். தேன் சேர்த்து சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி விடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் சிரமப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஸ்கர்வி நோயை குணமாக்கும்

குழந்தைகளுக்கு 35 மில்லிகிராமும், பெரியவர்களுக்கு 50 மில்லிகிராமும், பாலு}ட்டும் தாய்மார்களுக்கு 80 மில்லிகிராம் வைட்டமின் சி யும் தினம் தேவையாகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.

மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான்.மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் என இத்தாவரம் பெயர் பெற்றுள்ளது. இதன் இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இந்தியா முழுவதும் வீட்டின் வேலிகளின் ஓரங்களில் பற்றி படர்ந்திருக்கும் இந்த கொடி குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் நன்கு செழித்து வளரும்.

“சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”

என்று சங்க இலக்கத்தியத்தில் முடக்கற்றானைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடும் என்று இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்

முடக்கற்றான் இலையில் அதிக அளவு ஈரப்பதமும் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவு சத்து, தாது சத்து, சக்தி கலோரி முதலியவை அடங்கியுள்ளன.

சுகப்பிரசவம் ஏற்பட

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. இன்றைய சூழலில் சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாகி வருகிறது. சிசேரியன் மூலம் மகப்பேறு மருத்துவ மனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்டது. பண்டைய காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையை பயன்படுத்தியுள்ளனர். இதன் இலையை நன்கு அரைத்து பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ ஏற்படாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டிகளும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.

முடக்குவாத பிரச்சினை

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நாள் பட்ட மூட்டு வழிகளுக்கும் விடிவு ஏற்படும். இதன் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது போன்றவை நீங்கும்.

பாரிச வாயு நீங்கும்

மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் ’பாரிச வாயு’ எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும். இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

மூலநோய் குணமடையும்

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கல் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

முடி உதிர்வதை தடுக்கும்

வாரம் ஒரு முறை முடக்கற்றான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்; முடி கொட்டுவதும் நின்று விடும்; இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும். அதிகப் பணச் செலவில்லாத வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்.

யுனிடெக் நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி சொத்து முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய  யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தின்  ரூ.5 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்; அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை கூறி உள்ளது. இது பற்றி சி.பி.ஐ., அமலாக் கப்பிரிவு, பாராளுமன்ற கூட்டுக்குழு, பாராளுமன்ற பொது கணக்கு குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை கைமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. இது வரை சிறப்பு கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் 14 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.அந்த 14 பேரும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர யுனிடெக் வயர்லஸ், சுவான் டெலிகாம், ரிலையன்ஸ் நிறுவனம், டிபி ரியாலிட்டி நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முறைகேடாகப் பெற்ற இந்த நிறுவனங்கள் அவற்றை விற்றும், தில்லு முல்லு செய்தும் கொள்ளை லாபம் சம்பாதித்தன. குறிப்பாக யுனிடெக் நிறுவனம் தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்றதில் அதிக லாபம் சம்பாதித்தது. அந்த நிறுவனம் டெலிநார் நிறுவனத்துக்கு தனது 66.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 6 ஆயிரத்து 135 கோடி ரூபாய் லாபம் அடைந்தது.

இதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய ஆவணங்களை கைப்பற்றி குற்றப்பத்திரிகையிலும் அதை பதிவு செய்துள்ளனர்.முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட இந்த பணம், சொத்துக்களை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் சொத்துக்களை முடக்கும் பணிகளை அமலாக்கப் பிரிவு தொடங்கி உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் யுனிடெக் வயர்லஸ் (தமிழ்நாடு) நிறுவனம் தான் முதலில் சிக்கும் என்று தெரிய வந்துள்ளது. சொத்துக்களை முடக்கப் போவதாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து தற்காலிக நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்க போவதாக அந்த நோட்டீசில் அமலாக்கப் பிரிவு கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தங்களுக்கு அமலாக்கப் பிரிவிடம் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை என்றார். யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தை தொடர்ந்து டிபிரியாலிட்டி நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


தேர்தலுக்கு முன்பு ரூ. 8 ஆயிரத்துக்கு விற்ற மணல் ரூ. 14 ஆயிரமாக உயர்வு.

ரூ. 8 ஆயிரத்துக்கு விற்ற  லாரி மணல் விலை ரூ. 14 ஆயிரமாக உயர்வு: அரசு கட்டிட மராமத்து பணிகள் பாதிப்பு

தமிழ்நாட்டில் 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித்துறை மூலம் மணல் வினியோகம் நடந்தபோது மணல் விலை கட்டுப்பாட்டில் இருந்தது.

அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி நடந்தாலும் இடைத்தரகர்கள் புகுந்து மணல் விலையை அதிகளவு உயர்த்தி விற்றனர். சட்டசபை தேர்தல் சமயத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 ஆயிரமாக உயர்ந்தது.

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மணல் விலையை குறைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஆனாலும் இன்னும் முழுமையாக மணல் விலை குறைய வில்லை. இதுபற்றி பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி கூறியதாவது:-

பொதுப்பணித் துறையில் பதிவு செய்த காண்டிராக்டர்கள் சென்னையில் 146 பேர் உள்ளனர். அரசு கட்டிடங்களை மராமத்து பணிகள் செய்யும் இவர்களுக்கு மணல் கிடைப்பதில்லை. தேர்தலுக்கு முன்பு ரூ. 8 ஆயிரத்துக்கு கிடைத்த ஒரு லாரி மணல் இப்போது ரூ. 14 ஆயிரம், ரூ. 15 ஆயிரத்துக்கு தான் கிடைக்கிறது.

அரசாங்கம் ரூ. 624-க்கு தான் ஒரு லாரி மணல் விற்கிறது. மணலை லாரியில் ஏற்றும் கூலிகள் செலவு என ரூ. 3 ஆயிரம் போட்டு இதற்கு முன்பு ரூ. 5 ஆயிரத்துக்கு கிடைத்தது. அதன்பிறகு கடந்த ஆட்சியில் ரூ. 9 ஆயிரம் இருந்தது. தற்போது ரூ. 14 ஆயிரமாகி விட்டது. இதனால் அரசு கட்டிட மராமத்து பணிகள் செய்ய முடியாமல் பாதியில் நிற்கிறது.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை ஸ்டான்லி ஆஸ்பத்திரி, தாதண்டர்நகர் அரசு இல்லம், அரசு குடியிருப்பு போன்ற அரசு கட்டிட மராமத்து பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் கிடப்பில் போட்டுள்ளோம். எங்களைப் போல் மாநகராட்சி காண்டிராக்டர்கள், வீட்டுவசதி வாரிய காண்டிராக்டர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயிரம் ஆக குறைந்தால் தான் கட்டுமான தொழில் நன்றாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி ஜாமீன் வழக்கு : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்.கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை பொறுப்பில் இருந்து இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீரென்று விலகினர்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர்.

நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர்குமார் ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் கடந்த 13-ந்தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்கு திருப்பி விடப்பட்ட ரூ.200 கோடி என்ன ஆனது? என்று சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்கள் இருவருடைய ஜாமீன் மனுக்கள் மீதான பதிலை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு 13 லைசென்சுகள் வழங்கப்பட்டதில் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்தும், தனி கோர்ட்டில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும், அவர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

பின்னர் வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு, திங்கட்கிழமை தள்ளி வைக்கப்பட்டது.

2 நீதிபதிகள் விலகல்

திங்கட்கிழமை அன்று நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்னிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற இருந்தது. இந்த நிலையில், இரு நீதிபதிகளும் கனிமொழி ஜாமீன் மனு வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக முடிவு எடுத்து, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவுக்கு தகவல் அனுப்பினார்கள்.

அதைத் தொடர்ந்து கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்காக நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோரைக் கொண்ட மற்றொரு பெஞ்ச்சை தலைமை நீதிபதி நியமித்தார். இந்த பெஞ்ச் முன்பாக, திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணை நடைபெறும்.

நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மேற்பார்வையில்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.