Tuesday, May 3, 2011

பின்லேடன் சுட்டுக்கொலை : அமெரிக்கா- பாகிஸ்தானை பழி வாங்குவோம் ; தலிபான் தீவிரவாதிகள் சபதம்.

பின்லேடன் சுட்டுக்கொலை: அமெரிக்கா- பாகிஸ்தானை பழி வாங்குவோம்; தலிபான் தீவிரவாதிகள் சபதம்

உலகையே அச்சுறுத்திய அல்- கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் நேற்று பாகிஸ்தானில் அமெரிக்க கமாண்டோ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையின் சீல் என்ற கமாண்டோ படை பிரிவு இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியபோது பின்லேடன் ஆப்கானிஸ் தானில் இருந்தார்.

அமெரிக்கா தேடுதல் வேட்டையைத் தொடங்கியதும் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைக்காடுக்கு சென்று குகைக்குள் அவர் பதுங்கி இருந்தார். சாட்டிலைட் உள்பட பல நவீன கருவிகளை பயன்படுத்தி பார்த்த பிறகும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. 10 ஆண்டுகால இடைவிடாத தேடுதல் வேட்டை காரணமாக அமெரிக்க ராணுவம் சோர்ந்து போய் இருந்தது.

இந்த நிலையில் பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு உளவுத்துறையும் எல்லாவகை உதவிகளையும் செய்து வருவதை அமெரிக்கா கண்டுபிடித்தது. பின்லேடனுக்கு வந்த ரகசிய கூரியர் மூலம் பாகிஸ்தா னுக்குள் தான் பின்லேடன் இருக்கிறார் என்பதை உறுதியானது. இதையடுத்து பாகிஸ்தானிடம் சொல்லாமலே அமெரிக்கா தன்னிச்சையாக தேடுதல் வேட்டை நடத்தியது.

பின்லேடன் அபோதாபாத் நகரில் தனி பங்களாவில் தங்கி இருப்பதை கடந்த மாதம் அமெரிக்க உளவுப் பிரிவு கண்டுபிடித்தது. இதையடுத்து அமெரிக்காவின் அதிநவீன சீல் படை சிறப்பு பயிற்சிகள் எடுத்து பின்லேடனை கச்சிதமாக தீர்த்து கட்டிட்டது. பின்லேடன் திடீரென கொல்லப்பட்ட சம்பவம் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பின்லேடன் கொல்லப் பட்டால் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் முன்பு கூறி இருந்தனர். ஆனால் அத்தகைய தாக்குதல் எதையும் தலிபான்கள் நடத்தவில்லை. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதால் தலிபான் கள் ஆவேசம் அடைந்துள்ளனர். தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அசனுல்லா அசன் நேற்று பாகிஸ்தான் பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:- பின்லேடன் மரணத்துக்கு நிச்சயம் நாங்கள் பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம். பாகிஸ்தான் இனி எங்களின் முதல் எதிரி நாடாகும். அமெரிக்கா இரண்டாவது எதிரி நாடாகும். இரு நாடுகளுக்கும் பாடம் புகட்டுவோம். பாகிஸ்தான் தலைவர்களும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் எங்கள் கொலைப்பட்டியலில் உள் ளனர். அதில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி முதல் இடத்தில் உள்ளார்.

விரைவில் அவரை கொல்வோம். 2007-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை கொல்ல திட்டமிட்டோம். தற்கொலை படையை அனுப்பி மூன்றே மாதத்தில் அவரை கொலை செய்தோம். ஆனால் அமெரிக்காவால் 10 ஆண்டுகள் போராடிய பிறகுதான் எங்கள் தலை வரை கொல்ல முடிந்தது. எனவே இதை கொண்டாட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிய தகவல்கள்.


நம்மாலும் முடியும் : இந்திய விமானப் படை.


ஒசாமா பின்லேடனை கண்டுபிடித்து அமெரிக்க கமாண்டோ படை தாக்குதல் நடத்தியது போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.

தில்லியில் திங்கள்கிழமை நடந்த பி.சி.லால் நினைவு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.எனினும் அதுபோன்ற தாக்குதல்கள் நடத்துவதற்கு இந்தியாவிடம் எந்த மாதிரியான வசதிகள் இருக்கின்றன என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஒசாமா கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒசாமா மிகப்பெரிய பயங்கரவாதத் குழுவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டிருப்பதால், அந்தக் குழு பதில் தாக்குதல் நடத்தக்கூடும். அதனால் ஒவ்வொருவரும் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவும் அதையே செய்திருக்கிறது' என்றார்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா !


அல்-காய்தா பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடனை எங்களது சிறப்பு கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்றதை அமெரிக்காவில் இருந்தவாறே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம் என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கையை பார்ப்பதற்கு வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு சிறிய அறையில் பிரத்யேகத் திரை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சூழலை உற்று கவனித்துக் கொண்டிருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியது : எங்கள் நாட்டு கமாண்டோ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு மேல் சென்று வட்டமிடத் தொடங்கியது முதல் வீரர்கள் வீட்டுக்குள் புகுந்து ஒசாமாவை தீர்த்துக் கட்டியது வரை பார்த்தோம். எங்கள் கமாண்டோ வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் திகிலாக இருந்தது.

நாங்கள் அனைவருமே ஆரம்பம் முதல் கடைசி வரை பதற்றத்துடன் இருந்தோம். ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது ஒருபுறம் இருந்தாலும் எங்களது வீரர்களின் பாதுகாப்பை நினைத்து கவலை அடைந்தோம். உயிரைப் பணயம் வைத்து போராடிய அவர்களின் துணிவு எங்களை மெய்சிலிர்க்க வைத்து.

ஒசாமா தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து வீரர்கள் துப்பாக்கியால் சுட்டபோது எல்லாம் அதிபர் ஒபாமா அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்.

வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டார். சிறிய அறைக்குள் இருந்தாலும் ஒரு நிமிடம்கூட ஒருவரை ஒருவர் நாங்கள் பார்த்துக்கொள்ளவில்லை. அனைவரின் விழிகளும் திரையையே நோக்கின.

பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை 40 நிமிடமே நடந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு நாள்போல் கழிந்தது. கடும் போராட்டத்துக்குப் பின்னர் ஒசாமாவின் கதையை முடித்து அவரது உடலை ஹெலிகாப்டரில் கிடத்தியதும்தான் எங்களுக்கு நிம்மதி என்றார் ஜான் பிரனென்.

பட்டதாரிகள் அலைக்கழிப்பு : ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு முறையில் குளறுபடி; 6 மாதமாகியும் செயல்படுத்த முடியவில்லை

பட்டதாரிகள் அலைக்கழிப்பு: ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு முறையில் குளறுபடி; 6 மாதமாகியும் செயல்படுத்த முடியவில்லை

பட்ட படிப்பு, டிப்ளமோ, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 உள்ளிட்ட கல்வித் தகுதியினை மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பி.பி.எஸ்., பொறியியல் போன்ற தொழில் படிப்பு முடித்தவர்கள் சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

3 வருடத்துக்கு ஒருமுறை பதிவு புதுப்பித்தல் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தமிழகம் முழுவதும் இருந்து முதுகலை பட்டதாரிகள், தொழிற்படிப்பு சார்ந்தவர்கள் சென்னைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து சென்னைக்கு வந்து காத்திருந்து புதிதாக பதிவு செய்யக் கூடியவர்கள், புதுப்பிக்க கூடியவர்கள் பணச்செலவினால் மட்டுமின்றி அறை எடுத்து தங்குதல், பயணம் செய்தல் போன்ற பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

நாள் முழுவதும் வரிசையில் காத்து நின்று பதிவு செய்ய வேண்டியது உள்ளது. இதனால் ஆன்- லைன் மூலமாக வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தல், பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது.

கடந்த 6 மாதம் முன்பு ஆன்- லைன் பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நேரில் வரத்தேவையில்லை. வீட்டில் இருந்தபடியோ அல்லது கம்ப்யூட்டர் மையத் திலோ பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இந்த திட்டம் அறிவித்ததோடு மட்டுமே இருக்கிறது. இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தினமும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஆன்- லைன் வழியாக அணுகியவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். பதிவை புதுப்பிக்க முடியாமல் தடுமாறினார்கள். வேலைவாய்ப்பு அலுவலக இணைய தளத்தின் மூலமாக சென்றால் பதிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வேலை வாய்ப்பு உதவி இயக்குனரிடம் இதுபற்றி முறையிட்ட பட்டதாரிகள் இன்னும் ஆன்-லைன் பதிவு முறை செயல்பாட்டிற்கு வரவில்லை. அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. சாப்ட்வேரில் ஏற்கனவே உள்ள விண்ணப்பத்தாரர்களை கொண்டு செல்ல முடியவில்லை. லட்சணக்கணக்கான பட்டதாரிகள் இருக்கிறார்கள்.

ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் விரைவாக செயல்படுத்த முடியவில்லை என்று பதில் அளிப்பதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளியூரில் இருந்து நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் தினமும் சந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு சரியான தகவல் சொல்லக்கூட அங்கு ஆள் இல்லை. வேலை பளுவினால் ஊழியர்கள் எரிச்சலடைந்து வெளியூரில் இருந்து வரும் பட்டதாரிகளிடம் விரக்தியாக பேசுகிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அவர்கள் மன உளைச்சலில் என்ன செய்வதென்று தெரியாமலும் எங்கே போவது என்று புரியாமலும் அலைகிறார்கள். அங்கு புதிதாக உதவி இயக்குனராக வருபவர்கள் கூட தொடர்ந்து பணி செய்ய விரும்புவது இல்லை. போதுமான அளவு ஊழியர்கள் இல்லாமல் பணிச்சுமை அதிகரித்து வருவதால் எப்போது அங்கிருந்து வெளியே செல்லலாம் என்று நினைக்கிறார்கள்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் அலுவலகத்தில் மிகக்குறைந்த அளவில் பணியாளர்கள் உள்ளனர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவு பெயரளவில்தான் இருக்கிறது. அதை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வேலைவாய்ப்பை பெற்று தரக்கூடிய வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே 2 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வெளி மாவட்ட பட்டதாரிகளை வேதனை அடையச் செய்கிறது.

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்ய சாய்பாபாவுக்கு முழு உருவ பளிங்கு சிலை : தெண்டுல்கர் அமைக்கிறார்.

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்ய சாய்பாபாவுக்கு முழு உருவ பளிங்கு சிலை: தெண்டுல்கர் அமைக்கிறார்

மரணம் அடைந்த சத்ய சாய்பாபாவின் உடல், புட்டபர்த்தியில் அவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, அருளுரை வழங்கிய பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது சமாதி மீது தங்கத்தாலான அவரது முழு உருவ சிலையை நிறுவி, கோவில் கட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்து இருந்தனர். ஆனால், தங்க சிலை நிறுவினால், அதை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இருக்கும்.

அப்படி ஏற்பாடு செய்யப்படும்போது பாதுகாவலர்களால் பக்தர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இதனால் பக்தர்கள் எளிதாக, வசதியாக, நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாது என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்த காரணங்களால் சாய்பாபாவுக்கு தங்க சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டது.

ஆகவே, தங்க சிலைக்கு பதிலாக, ஷீரடியில் சாய்பாபாவுக்கு பளிங்கு சிலை அமைத்து இருப்பதுபோல், சத்ய சாய்பாபாவுக்கும் பளிங்கு சிலையே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலையை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது செலவில் அமைத்துத்தர முன்வந்துள்ளார். அவரது கோரிக்கையை சத்ய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சத்ய சய்பாபாவின் தாயாரின் நினைவு நாள் வருகிற 6-ந் தேதி வருகிறது. அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், சத்ய சாய்பாபாவுக்கு ஒரு வார காலம் மகா ஆராதனை நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். இந்த ஆராதனை முடிவடைந்ததும் 13-ந் தேதி அல்லது 15-ந் தேதி சத்ய சாய்பாபாவின் முழு உருவ பளிங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிகிறது.

சத்ய சாய்பாபா மத்திய அறக்கட்டளையின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழகத்தை சேர்ந்தவருமான பகவதி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே, நீதிபதி பகவதி அல்லது மும்பையை சேர்ந்த பிரபல ஆடிட்டர் இந்துலால் ஷா ஆகிய இருவரில் ஒருவரை தலைவராக நியமிக்க சாய்பாபா உயிருடன் இருந்தபோதே முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இருவரும் தங்களுக்கு வயதாகி விட்டதாகவும், உடல் நிலையும் ஒத்துழைக்க வில்லை என்றும் கூறி தலைவர் பொறுப்புக்கு வர விரும்பவில்லை என்றும், அறக்கட்டளை உறுப்பினர்களாக நீடிக்க விரும்பவில்லை என்றும் சாய்பாபாவிடம் தெரிவித்ததாகவும், அவர்களது விருப்பத்தை சாய்பாபா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களது விருப்பத்தின் பேரிலேயே நேற்று முன்தினம் நடந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்தவரும், சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர்களில் ஒருவருமான ஸ்ரீனிவாசனை புதிய தலைவராக நியமிக்க அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆனால், புட்டபர்த்தியில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வருகிற 7 அல்லது 8-ந் தேதி நடைபெறும் அறங்காவலர்கள் குழுக்கூட்டத்தில், நீதிபதி பகவதியை கொஞ்ச காலம் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்வது என்றும், அவரது வழிகாட்டுதலுக்கு பின்னர் ஸ்ரீனிவாசனை புதிய தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் 2.7 கோடி பேருக்கு ஆஸ்துமா நோய் : சுற்றுச்சூழல் மாசுபடுவதால் 10 ஆண்டில் இரட்டிப்பாக உயர்வு.


உலக முழுவதும் ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சுழல் மாசுபடுவதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் தாக்கி இறக்கிறார்கள். இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதற்காக ஆஸ்துமா நோய் பாதிப்பு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. ஆஸ்துமா நோய் நம் நாட்டிற்கே பெரிய சவாலாக அமைந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது.

இந்தியாவில் மட்டும் 2.7 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2026-ம் ஆண்டில் 3.5 கோடியாக உயரும் நிலை உள்ளது.

சுற்றுச்சுழல் மாசுபடுதல், உணவு பழக்கவழக்கங்கள், செல்லப் பிராணிகளின் ரோமம், ரசாயணம், பரம்பரைக் காரணங்களால் ஆஸ்துமா ஏற்படுகிறது. உரிய சிகிச்சை எடுத்தால் ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்துமா தினமான இன்று மாசில்லா சுற்றுப்புறச்சூழல் அமைவதே நமது பிரதான இலக்காக இருக்க வேண்டும்.

கொல்லப்பட்டது பின்லேடன் தானா ? நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள்.


கொல்லப்பட்டது பின்லேடன் தானா?நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள்

கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்தி உறுதி செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை. அமெரிக்கா பின்லேடன் முகத்தை மட்டும் வெளியிட்டு உள்ளது. முழு உடல் படத்தை வெளியிடவில்லை.

மேலும் பல்வேறு கோணத்திலும் படம் வெளியிடப்பட வில்லை. எனவே இது பின்லேடன்தானா? என நம்ப மறுக்கிறார்கள். பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடி யாக கடலில் மூழ்கடித்து விட்டது. அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் ஹரீஷ் ரஷீத் கூறும்போது, Òபின்லேடன் பாகிஸ்தானில் இருந்தான் என்பதையோ அவர் கொல்லப்பட்டார் என்பதையோ நம்ப முடியவில்லை.

அவரை இவ்வளவு வேகமாக அடக்கம் செய்தது சந்தேகமாக உள்ளது. இது அமெரிக்கா நடத்தும் நாடகம் என கருதுகிறேன் என்றார். கமல்கான் என்பவர் கூறும் போது, இது எல்லோரையும் முட்டாளாக்கும் முயற்சி என்று கருதுகிறேன் என்றார். அதிபர் ஒபாமாவுக்கு தீவிரவாதிகள் தொடர்பாக ஆலோசனை கூறும் ஜான் பிரானன் கூறும்போது, கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்பதை பலர் மறுக்க முயற்சி செய்யலாம்.

அது பின்லேடன்தான் என்பதை அமெரிக்கா பலமாக உறுதி செய்யவேண்டும் என்றார்.

பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல தாவூத்தை நம்மால் அழிக்க முடியாது - ப.சிதம்பரம்.


ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல நம்மால் பாகிஸ்தானுக்குள் போய் தாவூத் இப்ராகிமை அழிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அமெரிக்காவால் பாகிஸ்தானுக்குள் புகுந்து உலகப் பெரும் தீவிரவாதியான பின்லேடனை சுட்டுக் கொன்றது போல இந்தியாவும் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் போன்ற தீவிரவாதிகளை அழிக்கக் கூடாது, அழிக்க முடியாது என்ற கேள்வி இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.

உலகைப் பொறுத்தவரை பின்லேடன் மிகப் பெரிய தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தாவூத் இப்ராகிம்தான் இந்தியாவின் பின்லேடனாக இருக்கிறான்.

பின்லேடன் மேற்கத்திய நாடுகளைத்தான் குறிப்பாக அமெரிக்காவைத்தான் குறி வைத்து தாக்கி வந்தான். இந்தியா அவனது இலக்காகவே இல்லை. இந்தியாவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பு பெரிய அளவில் எதையும் செய்ததில்லை.

அதேசமயம் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் இந்தியாவைக் குறி வைத்துத் தொடர்ந்து தாக்கி வருகிறது. தாவூத் இப்ராகிம் போன்றவர்கள்தான் இந்தியாவை தொடர்ந்து குத்திக் குதறிக் கொண்டிருக்கின்றனர். எனவே பின்லேடனின் சாவால் இந்தியாவுக்கு லாபமோ, நஷ்டமோ கிடையாது. மாறாக தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் போன்றோர்தான் நமக்கு உண்மையான மிரட்டல். இன்னும் வெளிப்படையாக சொல்வதானால், இந்தியாவுக்கான தீவிரவாத அபாயம் சற்றும் குறையவில்லை, அது அழிக்கப்படவும் இல்லை.

பின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு வேண்டுமானால் உற்சாகத்தைக் கொடுக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு இதனால் பலன் ஏதும் இல்லை.

பின்லேடனைப் போலவே தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில்தான் புகலிடம் அடைந்து தங்கியுள்ளான். அவனை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான் தொடர்ந்து காத்து ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் அரசின் ஆதரவும் கூட அவனுக்கு உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்குமே கூட நன்றாகத் தெரியும்.

அதேசமயம், பின்லேடனை தூள் தூளாக்க அமெரிக்க தலைவர்கள் எடுத்த ஆணித்தரமான நடவடிக்கைகளில் ஒரு பங்கைக் கூட, தாவூத்தை வீழ்த்த இந்தியத் தலைவர்கள் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் இந்தியாவின் இயலாமையை ஒத்துக் கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவத்தால் செயல்பட முடிகிறது. பாகிஸ்தான் அரசுக்குத் தெரிந்தே இதுபோல அவர்களால் செயல்பட முடிகிறது. அமெரிக்க உளவாளிகள் பெருமளவில் பாகிஸ்தானில் உள்ளனர். பாகிஸ்தான் அரசுக்கும் இது தெரியும்.

பின்லேடனை கொல்ல அமெரிக்காவால் முடிந்தது. பாகிஸ்தானுக்குள் போய், பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இதை செய்ய அவர்களால் முடிந்தது.

ஆனால் இந்தியாவுக்கு அப்படி ஒரு நிலை பாகிஸ்தானில் இல்லை. இந்தியப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் செயல்படவில்லை. நமக்கு அங்கு அமெரிக்காவைப் போல பெருமளவில் உளவாளிகள் இல்லை. எனவே தாவூத் இப்ராகிமைக் கொல்வது என்பது மிகக் கடினமானது. இதுதான் உண்மை, இதை நான் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

அமெரிக்காவால் முடிந்தது, ஆனால் நம்மால் முடியாது என்றார் ப.சிதம்பரம்.

thatstamil.oneindia.in

பின்லேடனை பிடிக்க 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா ; 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்தது.

பின்லேடனை பிடிக்க 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா; 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்தது

2001-ம் ஆண்டு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பின்லேடனை பிடிக்க அமெரிக்க தீவிரம் காட்டியது.

பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கருதிய அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க படைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

பின்லேடனை பிடிக்க 10 ஆண்டுகளில் அமெரிக்க ரூ. 60 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது. இன்னும் தேடுதல் வேட்டை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டில் மேலும் ரூ. 80 லட்சம் கோடி வரை செலவாகும் என்று கணக்கிட்டு இருந்தனர்.

இப்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால் அமெரிக்காவுக்கு பெருமளவு பணம் மிச்சமாகி இருக்கிறது. பின்லேடனை பிடிக்க நடத்திய வேட்டையில் அமெரிக்கா இதுவரை 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்து உள்ளது. 55 ஆயிரம் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய போரினால் 20 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 50 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். ஈராக்கில் நடந்த போரினால் 12 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சோமாலியாவில் தேடுதல் வேட்டையின்போது நடந்த தாக்குதலில் 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

2001-ல் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இதுவரை 13 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இதில் 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

பேரீச்சையின் பயன்கள்.


இரத்த விருத்திக்கு பேரீச்சை

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

பேரீச்சையின் பயன்கள், கண்பார்வை தெளிவடைய

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

markaspost.wordpress.com

அப்சல்குருவை இந்தியா தூக்கில் போடாதது ஏன்?


டெல்லியில் சில வருடங்களுக்கு முன் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் முக்கிய குற்றவாளியான அப்சல்குருவுக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து உள்ளது.

தீர்ப்பு வெளியாகி பல வருடங்கள் ஆன பின்பும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தற்போது நியூயார்க் தாக்குதலில் தொடர்புடைய பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்ட நிலையில் அப்சல்குருவை தூக்கிலிட இந்தியா தயங்குவது ஏன்? என்று பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்கரி கேள்வி விடுத்துள்ளார்.

இது பற்றி ஜெய்ப்பூரில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் நிதின் கட்கரி,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை 10 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா மறக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பின்லேடனை அமெரிக்கா தேடிப்பிடித்து கொன்று பழிவாங்கிவிட்டது.

ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன? நமது பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய தீவிரவாதி அப்சல் குருவுக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்த பின்பும் கூட இந்திய அரசு தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் போன்றவர்கள் பிரதமராக வர கனவுகாண்கிறார்கள்.

ஆனால் அவர்களால் காங்கிரசுக்கு தலைவராக கூட வரமுடியாது. இப்போது நாட்டின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அரசுக்கு தொலைநோக்கு பார்வையில் ஊழலாக இருந்தாலும், விலைவாசி உயர்வாக இருந்தாலும், தீவிரவாதமாக இருந்தாலும் அரசு நிலைமையை சமாளிக்க தவறி விட்டது. பாரதீய ஜனதா ஒரு ஜனநாயக கட்சி, அது தொழிலாளர்கள் மீது அக்கறையும், அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கி வருகிறது.

நாங்கள் கூட்டாக முடிவெடுக்கிறோம். ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் ஆனால் இதற்கு மாறாக காங்கிரசோ காந்தி குடும்பத்தால் நடத்தப்பட்டு வருகிறது. காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ஊழலில் சம்பந்தப்பட்டவரை ஊழல் கண்காணிப்பு கமிஷனின் தலைவராக நியமித்தது என அனைத்தும் காங்கிரசின் கோர முகத்தை காட்டிவிட்டது.

பிரதமரும், அவரது மந்திரி சபையும் தான் சுரேஷ் கல்மாடியின் அனைத்து முடிவுகளுக்கும் ஒப்புதல் அளித்து உள்ளனர். இதுவே ஊழலுக்கு காரணமாக அமைந்து விட்டது. கல்மாடி மட்டும் அல்லாமல் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என்று கூறினார்.

ஒசாமா பின்லேடன் வாழ்க்கை குறிப்பு.


* 1957 - சவூதி அரேபியாவில் கட்டுமான தொழில் நிறுவன அதிபர் முகமது ஆவாத் பின் லேடனின் 52 குழந்தைகளில் 17-வதாகப் பிறந்தார் ஒசாமா.

* 1979 - ஒசாமா ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இயக்கத்தினருக்கு உதவி செய்தார். அந்த இயக்கத்துக்கு அவர் நிதி உதவி அளித்தார். பின்னர் அதுவே அவரது தலைமையில் அல் காய்தாவாக மாறியது.

* 1989 - ஆப்கனில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மீண்டும் சவூதி அரேபியா திரும்பிய ஒசாமா பின்லேடன், தனது குடும்ப கட்டுமான தொழில் நிறுவனத்தை நிர்வகித்தார். அதே சமயம் ஆப்கன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியையும் அவர் அங்கிருந்தே திரட்டினார்.

* 1991 - அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சவூதி அரேபியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அந்நாட்டு குடியுரிமையும் பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சூடானில் தஞ்சமடைந்தார்.

* 1993 - நியூயார்க்கில், உலக வர்த்தக மைய கட்டடத்தில் குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் உள்பட முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

* 1995 - நைரோபி, கென்யா, தான்ஸôனியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு அருகில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 224 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கும் பின்லேடனே காரணம் என்று தெரியவந்தது.

* 1996 - அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் தொடர் நெருக்குதலை அடுத்து சூடானில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தனது 3 மனைவி மற்றும் 10 வாரிசுகளுடன் ஆப்கானிஸ்தான் சென்றார். அமெரிக்க படைகளுக்கு எதிராக புனித போருக்கு (ஜிஹாத்) அழைப்பு விடுத்தார்.

* 1998 - அமெரிக்க தூதரகங்களைக் குறி வைத்து வெடி குண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் ஒசாமா பின்லேடன் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவரைப் பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 கோடி ஊக்கத் தொகை அறிவித்தது அமெரிக்கா. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் சூடானில் பின் லேடனின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எனினும் பின் லேடன் அப்போது அங்கு இல்லை.

* 1999 - அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. தேடப்படும் 10 முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் பின்லேடனையும் சேர்த்தது.

* 2000 - ஏமன் நாட்டில் அமெரிக்கப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

* 2001 - அமெரிக்க தூதரகங்களை குறி வைத்து 1998-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் பின்லேடனின் கூட்டாளிகள் 4 பேர் குற்றவாளிகள் என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.

* நியூயார்க்கில் உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீதும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் செப்டம்பர் 11-ம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தியது அல் காய்தா. இதில் உலக வர்த்த மைய கட்டடம் (இரட்டை கோபுரம்) தகர்க்கப்பட்டதுடன் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் அவரைத் தேடும் பணிகளை முடுக்கி விட்டது அமெரிக்கா. அவரைப் கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 125 கோடி வெகுமதி அறிவித்தது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் அப்போது இருந்த தலிபான் ஆட்சி ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது.

தோரா போரா மலைப் பகுதியில் பின்லேடன் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகித்த பகுதிகளில் அமெரிக்க படைகள் கடும் தாக்குதல் நடத்தின. எனினும் பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை.

* 2002 - அமெரிக்க கூட்டுப் படைகளின் நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தன. தலிபான் படைகள் அமெரிக்காவிடம் வீழ்ந்தன. எனினும் பின்லேடனை அமெரிக்கா தொடர்ந்து தேடியது. மார்ச் மாதம் பின்லேடன் பதுங்கி இருக்கும் பகுதிகளை நெருங்கி விட்டதாக கூறிய அமெரிக்கப் படைகள், தாக்குதலை தீவிரப்படுத்தின. அவர் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. எனினும் சில மாதங்களில் அவர் பேசிய ஆடியோ டேப்புகளை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒலிபரப்பியது. அது பின்லேடனின் குரல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

* 2003 - பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் பதுங்கி இருப்பார் என்று தான் கருதுவதாகவும், அல் காய்தா தொடர்ந்து பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக நீடிக்காது என்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தெரிவித்தார்.

உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை மறந்து புனிதப் போருக்கு (ஜிஹாத்) தயாராகுமாறு அழைப்பு விடுத்தார் பின் லேடன்.

* 2004 - பின்லேடனின் பேச்சு மீண்டும் அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. அதில் இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைகள் ஆதிக்கம் செலுத்துவதை கடுமையாக எதிர்த்து அவர் பேசினார். பின்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பின்லேடனின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்கா தீவிர தேடுதல் மற்றும் தாக்குதல் நடத்தியது.

* 2009 - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக பின்லேடன் எங்கு இருக்கிறார் என்பது குறித்து ஆதாரப்பூர்வமான எந்தத் தகவலும் இல்லை' என்றார்.

* 2011, மே 2 - பாகிஸ்தானில் இஸ்லாமாபாதுக்கு அருகே உள்ள அபோத்தாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க படைகளுடன் சுமார் 40 நிமிடங்கள் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மகன் ஒருவரும் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார்.

"டார்க் பிரவுன்' சாக்லேட், இருதயத்துக்கு நல்லது - அமெரிக்கா ஆய்வு.


சாக்லேட் - இந்த வார்த்தைக்குள்ள ஈர்ப்பை விவரிக்கவே முடியாது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களைக் கூட இந்த நான்கு எழுத்து வார்த்தை மயக்கி வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பலரும் குறிப்பாக பெண்கள் ஆசைப்பட்டாலும் சாக்லெட் சாப்பிடுவதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வர். ஆனால் அதற்கு அவசியமே இல்லை. சாக்லேட் சாப்பிட்டால் இருதயத்துக்கு நல்லதாம். அதனால் உடல் எடையும் அதிகரிக்காதாம். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

ஹெர்ஷே சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மையத்தின் சமீபத்தில் ஆய்வு


உடலில் இருக்கும் நல்ல செல்கள் அழிந்துவிடாமல் காப்பாற்றி புற்றுநோய், இதய நோய்கள் வராமல் சாக்லேட் காப்பாற்றுகிறது. பழ ஜூஸ்களைவிட இந்த வேலையை சாக்லேட் சிறப்பாக செய்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் ஹெர்ஷே சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மையத்தில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு விதமான பழச் சாறுகள் குடிப்பது, சாக்லேட் தின்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன. மாதுளை ஜூஸ் உள்பட பல பழங்களின் ஜூஸ் குடிப்பதைவிட சாக்லேட் தின்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்தது.

சாக்லேட், கோகோவில் அதிகம் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், பாலிபீனால் ஆகியவை உடலில் இருக்கும் நல்ல செல்களை பாதுகாத்து புத்துயிர் கொடுக்கின்றன. இதனால் புற்றுநோய், மாரடைப்பு வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.சாக்லேட் தின்பதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அளவு உடலில் அதிகரிக்கிறது. எல்.டி.எல். எனப்படும் தீய கொலஸ்டிரால் அளவு குறைகிறது. இதனால் இதய நோய்கள் தவிர்க்கப்படுகிறது. வெள்ளை சாக்லேட்டை விட கருப்பு சாக்லேட்தான் இதயத்துக்கு நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்

விக்டோரியா பல்கலைக்கழம் ஆய்வு

விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லில்லி ஸ்டோஜன்ஸ்கோவா மற்றும் டாக்டர் ஜான் அஸ்தோன் ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் சாக்லேட் உணவு எந்த அளவுக்கு உடலுக்கு நன்மை விளைவிக்கிறது என்று கூறியுள்ளனர்.

வாயில் நீர் சொட்ட சொட்ட மிகவும் ரசித்து, ருசித்து சாக்லேட் சாப்பிட வேண்டுமாம். சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் சுகானுபவத்தை உணர்ந்து சாப்பிட்டால் அது கூடுதல் பலனை அளிக்கிறதாம். எனவே சாக்லெட் சாப்பிடுபவர்கள் எவ்வித குற்ற உணர்வின்றி சாக்லெட்டை சாப்பிட வேண்டும் என்று அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் தரமான "டார்க் பிரவுன்' சாக்லேட்டில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இவை அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை விரைந்து கரைத்துவிடுகின்றன. அத்துடன் விரைவாக பசியெடுப்பதையும் சற்று தள்ளிப்போடுகிறது. கருஞ்சிவப்பு திராட்சை ரசத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டிலும் இரு மடங்கு சக்தி சாக்லேட்டில் உள்ளன. பிரதான மூலக்கூறான சாக்லேட்டில் உள்ள கோகோவில் உள்ள அல்கலாயிட் எனப்படும் ஒபுரோமின் எனும் பொருள் தசைகளை ஊக்குவித்து உடலுக்கு சக்தியை அளிக்கிறது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கிறது. அத்துடன் உடலில் சேரும் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அது சார்ந்த பக்க வாதம் ஏற்படுவது குறைகிறது.

மேலும் கோகோவில் உள்ள இயற்கை மூலப்பொருள் மூளையை சுறுசுறுப்பாக்கும் ரசாயனம் சுரக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.

சாக்லேட் சாப்பிடுவது நல்லது என்பதற்காக குடும்பத்தினர் சாப்பிடும் அளவுக்கு ஃபேமிலி சாக்லேட்டை வாங்கி சாப்பிடக்கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் - என்பதைப் போல அளவோடு சாப்பிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். பொதுவாக அனைத்து சாக்லேட்டுகளிலும் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை கோகோ கலந்திருக்கும். இத்தகைய பிரவுன் சாக்லேட் சற்று கசப்பு சுவை இருந்தாலும் அது மிகவும் நல்லது. இது அல்லாமல் பால் சாக்லேட் இந்த அளவுக்கு பலனளிக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தங்களது ஆய்வின் பலனை அனுபவ ரீதியில் உணர்வதற்காக ஒரு தம்பதியை தேர்வு செய்து அவர்களுக்கு தினசரி சாக்லேட்டும், சாக்லேட் பானங்களும் அளித்து சோதித்துள்ளனர். அவர்களது செயல்பாடு ஆராய்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இருந்துள்ளது.

இனி என்ன, சாக்லெட் சாப்பிட்டு ஆரோக்கியமாயிருக்க வேண்டியதுதானே!.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள சோனியா, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.


ஊழல் புகாரில் சிக்கியுள்ள சோனியா ஊழல் எதிர்ப்பாளரானார் !

நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது.

யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.

அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை. அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.

""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று, ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.

யார் இந்த கிளியோ பாஸ்கல்?

சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெளரவமிக்க உறுப்பினர்.

அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.

2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.

கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணையதள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.

"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.

சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணுமுணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக் கணைகள் எழுந்துள்ளன.

1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.

எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1984-ல் இருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.

நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார். சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.

இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.

அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.

1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.

1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்துவிடுவார்.

உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல்.

சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.

இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.

அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது.

இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகிவிட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், ""ஆ, சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்.

ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹஸôரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.

சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.

சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.

அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.

கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்: ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.

எஸ். குருமூர்த்தி.