Tuesday, May 3, 2011

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா !


அல்-காய்தா பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடனை எங்களது சிறப்பு கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்றதை அமெரிக்காவில் இருந்தவாறே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம் என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கையை பார்ப்பதற்கு வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு சிறிய அறையில் பிரத்யேகத் திரை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சூழலை உற்று கவனித்துக் கொண்டிருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியது : எங்கள் நாட்டு கமாண்டோ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு மேல் சென்று வட்டமிடத் தொடங்கியது முதல் வீரர்கள் வீட்டுக்குள் புகுந்து ஒசாமாவை தீர்த்துக் கட்டியது வரை பார்த்தோம். எங்கள் கமாண்டோ வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் திகிலாக இருந்தது.

நாங்கள் அனைவருமே ஆரம்பம் முதல் கடைசி வரை பதற்றத்துடன் இருந்தோம். ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது ஒருபுறம் இருந்தாலும் எங்களது வீரர்களின் பாதுகாப்பை நினைத்து கவலை அடைந்தோம். உயிரைப் பணயம் வைத்து போராடிய அவர்களின் துணிவு எங்களை மெய்சிலிர்க்க வைத்து.

ஒசாமா தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து வீரர்கள் துப்பாக்கியால் சுட்டபோது எல்லாம் அதிபர் ஒபாமா அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்.

வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டார். சிறிய அறைக்குள் இருந்தாலும் ஒரு நிமிடம்கூட ஒருவரை ஒருவர் நாங்கள் பார்த்துக்கொள்ளவில்லை. அனைவரின் விழிகளும் திரையையே நோக்கின.

பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை 40 நிமிடமே நடந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு நாள்போல் கழிந்தது. கடும் போராட்டத்துக்குப் பின்னர் ஒசாமாவின் கதையை முடித்து அவரது உடலை ஹெலிகாப்டரில் கிடத்தியதும்தான் எங்களுக்கு நிம்மதி என்றார் ஜான் பிரனென்.

No comments: