Tuesday, May 3, 2011

ஒசாமா பின்லேடன் வாழ்க்கை குறிப்பு.


* 1957 - சவூதி அரேபியாவில் கட்டுமான தொழில் நிறுவன அதிபர் முகமது ஆவாத் பின் லேடனின் 52 குழந்தைகளில் 17-வதாகப் பிறந்தார் ஒசாமா.

* 1979 - ஒசாமா ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இயக்கத்தினருக்கு உதவி செய்தார். அந்த இயக்கத்துக்கு அவர் நிதி உதவி அளித்தார். பின்னர் அதுவே அவரது தலைமையில் அல் காய்தாவாக மாறியது.

* 1989 - ஆப்கனில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மீண்டும் சவூதி அரேபியா திரும்பிய ஒசாமா பின்லேடன், தனது குடும்ப கட்டுமான தொழில் நிறுவனத்தை நிர்வகித்தார். அதே சமயம் ஆப்கன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியையும் அவர் அங்கிருந்தே திரட்டினார்.

* 1991 - அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சவூதி அரேபியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அந்நாட்டு குடியுரிமையும் பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சூடானில் தஞ்சமடைந்தார்.

* 1993 - நியூயார்க்கில், உலக வர்த்தக மைய கட்டடத்தில் குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் உள்பட முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

* 1995 - நைரோபி, கென்யா, தான்ஸôனியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு அருகில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 224 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கும் பின்லேடனே காரணம் என்று தெரியவந்தது.

* 1996 - அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் தொடர் நெருக்குதலை அடுத்து சூடானில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தனது 3 மனைவி மற்றும் 10 வாரிசுகளுடன் ஆப்கானிஸ்தான் சென்றார். அமெரிக்க படைகளுக்கு எதிராக புனித போருக்கு (ஜிஹாத்) அழைப்பு விடுத்தார்.

* 1998 - அமெரிக்க தூதரகங்களைக் குறி வைத்து வெடி குண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் ஒசாமா பின்லேடன் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவரைப் பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 கோடி ஊக்கத் தொகை அறிவித்தது அமெரிக்கா. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் சூடானில் பின் லேடனின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எனினும் பின் லேடன் அப்போது அங்கு இல்லை.

* 1999 - அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. தேடப்படும் 10 முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் பின்லேடனையும் சேர்த்தது.

* 2000 - ஏமன் நாட்டில் அமெரிக்கப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

* 2001 - அமெரிக்க தூதரகங்களை குறி வைத்து 1998-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் பின்லேடனின் கூட்டாளிகள் 4 பேர் குற்றவாளிகள் என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.

* நியூயார்க்கில் உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீதும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் செப்டம்பர் 11-ம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தியது அல் காய்தா. இதில் உலக வர்த்த மைய கட்டடம் (இரட்டை கோபுரம்) தகர்க்கப்பட்டதுடன் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் அவரைத் தேடும் பணிகளை முடுக்கி விட்டது அமெரிக்கா. அவரைப் கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 125 கோடி வெகுமதி அறிவித்தது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் அப்போது இருந்த தலிபான் ஆட்சி ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது.

தோரா போரா மலைப் பகுதியில் பின்லேடன் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகித்த பகுதிகளில் அமெரிக்க படைகள் கடும் தாக்குதல் நடத்தின. எனினும் பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை.

* 2002 - அமெரிக்க கூட்டுப் படைகளின் நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தன. தலிபான் படைகள் அமெரிக்காவிடம் வீழ்ந்தன. எனினும் பின்லேடனை அமெரிக்கா தொடர்ந்து தேடியது. மார்ச் மாதம் பின்லேடன் பதுங்கி இருக்கும் பகுதிகளை நெருங்கி விட்டதாக கூறிய அமெரிக்கப் படைகள், தாக்குதலை தீவிரப்படுத்தின. அவர் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. எனினும் சில மாதங்களில் அவர் பேசிய ஆடியோ டேப்புகளை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒலிபரப்பியது. அது பின்லேடனின் குரல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

* 2003 - பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் பதுங்கி இருப்பார் என்று தான் கருதுவதாகவும், அல் காய்தா தொடர்ந்து பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக நீடிக்காது என்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தெரிவித்தார்.

உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை மறந்து புனிதப் போருக்கு (ஜிஹாத்) தயாராகுமாறு அழைப்பு விடுத்தார் பின் லேடன்.

* 2004 - பின்லேடனின் பேச்சு மீண்டும் அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. அதில் இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைகள் ஆதிக்கம் செலுத்துவதை கடுமையாக எதிர்த்து அவர் பேசினார். பின்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பின்லேடனின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்கா தீவிர தேடுதல் மற்றும் தாக்குதல் நடத்தியது.

* 2009 - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக பின்லேடன் எங்கு இருக்கிறார் என்பது குறித்து ஆதாரப்பூர்வமான எந்தத் தகவலும் இல்லை' என்றார்.

* 2011, மே 2 - பாகிஸ்தானில் இஸ்லாமாபாதுக்கு அருகே உள்ள அபோத்தாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க படைகளுடன் சுமார் 40 நிமிடங்கள் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மகன் ஒருவரும் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார்.

No comments: