Tuesday, May 3, 2011

பட்டதாரிகள் அலைக்கழிப்பு : ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு முறையில் குளறுபடி; 6 மாதமாகியும் செயல்படுத்த முடியவில்லை

பட்டதாரிகள் அலைக்கழிப்பு: ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு முறையில் குளறுபடி; 6 மாதமாகியும் செயல்படுத்த முடியவில்லை

பட்ட படிப்பு, டிப்ளமோ, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 உள்ளிட்ட கல்வித் தகுதியினை மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பி.பி.எஸ்., பொறியியல் போன்ற தொழில் படிப்பு முடித்தவர்கள் சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

3 வருடத்துக்கு ஒருமுறை பதிவு புதுப்பித்தல் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தமிழகம் முழுவதும் இருந்து முதுகலை பட்டதாரிகள், தொழிற்படிப்பு சார்ந்தவர்கள் சென்னைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து சென்னைக்கு வந்து காத்திருந்து புதிதாக பதிவு செய்யக் கூடியவர்கள், புதுப்பிக்க கூடியவர்கள் பணச்செலவினால் மட்டுமின்றி அறை எடுத்து தங்குதல், பயணம் செய்தல் போன்ற பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

நாள் முழுவதும் வரிசையில் காத்து நின்று பதிவு செய்ய வேண்டியது உள்ளது. இதனால் ஆன்- லைன் மூலமாக வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தல், பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது.

கடந்த 6 மாதம் முன்பு ஆன்- லைன் பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நேரில் வரத்தேவையில்லை. வீட்டில் இருந்தபடியோ அல்லது கம்ப்யூட்டர் மையத் திலோ பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இந்த திட்டம் அறிவித்ததோடு மட்டுமே இருக்கிறது. இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தினமும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஆன்- லைன் வழியாக அணுகியவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். பதிவை புதுப்பிக்க முடியாமல் தடுமாறினார்கள். வேலைவாய்ப்பு அலுவலக இணைய தளத்தின் மூலமாக சென்றால் பதிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வேலை வாய்ப்பு உதவி இயக்குனரிடம் இதுபற்றி முறையிட்ட பட்டதாரிகள் இன்னும் ஆன்-லைன் பதிவு முறை செயல்பாட்டிற்கு வரவில்லை. அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. சாப்ட்வேரில் ஏற்கனவே உள்ள விண்ணப்பத்தாரர்களை கொண்டு செல்ல முடியவில்லை. லட்சணக்கணக்கான பட்டதாரிகள் இருக்கிறார்கள்.

ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் விரைவாக செயல்படுத்த முடியவில்லை என்று பதில் அளிப்பதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளியூரில் இருந்து நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் தினமும் சந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு சரியான தகவல் சொல்லக்கூட அங்கு ஆள் இல்லை. வேலை பளுவினால் ஊழியர்கள் எரிச்சலடைந்து வெளியூரில் இருந்து வரும் பட்டதாரிகளிடம் விரக்தியாக பேசுகிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அவர்கள் மன உளைச்சலில் என்ன செய்வதென்று தெரியாமலும் எங்கே போவது என்று புரியாமலும் அலைகிறார்கள். அங்கு புதிதாக உதவி இயக்குனராக வருபவர்கள் கூட தொடர்ந்து பணி செய்ய விரும்புவது இல்லை. போதுமான அளவு ஊழியர்கள் இல்லாமல் பணிச்சுமை அதிகரித்து வருவதால் எப்போது அங்கிருந்து வெளியே செல்லலாம் என்று நினைக்கிறார்கள்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் அலுவலகத்தில் மிகக்குறைந்த அளவில் பணியாளர்கள் உள்ளனர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவு பெயரளவில்தான் இருக்கிறது. அதை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வேலைவாய்ப்பை பெற்று தரக்கூடிய வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே 2 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வெளி மாவட்ட பட்டதாரிகளை வேதனை அடையச் செய்கிறது.

No comments: