
பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க புலனாய்வு குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்கள் கூட்டத்தில் அமெரிக்க புலனாய்வு குழு தலைவர் லியோன் பனெட்டா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்க வில்லை. நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.
பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு இல்லை. என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். தீவிரவாதம் தொடர்பாக நாங்கள் அந்த நாட்டுடன் எந்த ஒப்பந்தமும் வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.
எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.