Wednesday, May 4, 2011

இரண்டாவது பசுமைப் புரட்சியை நோக்கி பிகார் : அப்துல்கலாம்.


நாட்டில் 2-வது பசுமைப் புரட்சி பிகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பலிகஞ்ச்சில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

பலிகஞ்ச் விவசாயிகள் இரண்டாவது பசுமைப்புரட்சியை படைக்கும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் விவசாய உற்பத்தி இரண்டு மடங்கு ஆகியுள்ளது. 1999-ம் ஆண்டு இப்பகுதி விவசாயிகள் 2.4 ஹெக்டேர் நிலத்தில் கோதுமை, நெல் பயிரிட்டனர். 2004-ம் ஆண்டில் பயிரிடப்படும் நிலம் 2 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் வீரிய விதை, சத்தான உரம், புதிய விவசாயக்கொள்கை ஆகியவற்றை கடைப்பிடித்து நெல், கோதுமை பரியிட்டு 5 ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக்கி சாதனை படைத்துள்ளனர். பலிகஞ்ச் விவசாயிகளின் இந்த முயற்சி தொடரவேண்டும். இதன்மூலம் பிகாரை நாட்டின் பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும்.

இம்மாநிலத்தில் மொத்தம் 56 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிலேயே உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன. இம்மாநிலத்தின் சராசரி நெல் உற்பத்தி ஹெக்டேருக்கு 1.45 டன்னாகவும் கோதுமை 2.19 டன்னாகவும் உள்ளது. ஆனால் பலிகஞ்ச் விவசாயிகள் நெல் ஹெக்டேருக்கு 4டன்ஆகவும் கோதுமை ஹெக்டேருக்கு 6 டன் ஆகவும் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இம்மாநிலத்தில் உணவு உற்பத்தியை இரண்டு மடங்கு ஆக்க பலிகஞ்ச் மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுடன் இங்குள்ள ராஜேந்திரா விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் உள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் புகுத்தவேண்டும். இதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தத்திட்டத்தை இங்குள்ள 38 மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே உணவு உற்பத்தியில் நமது இலக்கை அடைய முடியும். நெல், கோதுமை உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். பலிகஞ்ச் விவசாயிகள் புதிய திட்டங்களை விவசாயத்தில் அமல்படுத்தி 2016-2020-ம் ஆண்டில் 2-வது பசுமைப் புரட்சியை படைக்க வேண்டும். இதன் மூலம் 2020-ம் ஆண்டில் உணவு உற்பத்தியை 23 கோடி டன்னில் இருந்து 34 கோடி டன்னாக உயர்த்த முடியும்.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், வீரியவிதைகள், தரமான உரம், நீர் ஆதாரம் ஆகியவற்றை அடங்கிய அறிவுசார்ந்த விவசாயமாக 2-வது பசுமைப்புரட்சி அமைய வேண்டும். விவசாய விளை பொருளுக்கு சரியான விலை, உணவு பதப்படுத்துதல் வசதி, சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும். விவசாய தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து நமது விவசாயிகள் செயல்படவேண்டும். அப்போது மட்டுமே அதிக வீரியம் உடைய விதைகளை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

No comments: