Friday, July 15, 2011

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி.



இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி17 ராக்கெட்மூலம் ஜிசாட்-12 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது.

1410 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான செயற்கைக் கோளான ஜிசாட் 12 செயற்கைக் கோள் ரூ. 90 கோடியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக் கோள் 12 டிரான்ஸ்பாண்டர்களுடன் கூடியதாகும். வானிலை முன்னறிவிப்பு, தொலைத் தொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 200 கோடியாகும்.

பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்களில் இது 19வது ராக்கெட்டாகும். இன்றைய தினம் இந்திய விண்வெளித்துறைக்கு முக்கியமானதும் கூட. காரணம், இன்று செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் அதிக எடை கொண்டதாகும்.

இதை சிறிய வகை ராக்கெட் மூலம் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோளை ராக்கெட்டுடன் இணைக்கும் பணி கடந்த 12-ந்தேதி நிறை வடைந்தது.செயற்கை கோளுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை பறக்க விடுவதற்கான 53 மணி நேர கவுண்டவுன் கடந்த 13-ந்தேதி காலை 11.48 மணிக்கு தொடங்கியது. கவுண்டவுனில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. கவுண்டவுன் இன்று மாலை 4.48 மணியுடன் நிறைவு அடைந்தது.

கவுண்டவுன் முடிவடைந்ததும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பறக்க விடப்பட்டது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இன்று ஏவப்பட்ட ஜிசாட்-12 செயற்கை கோளின் ஆயுள் காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

நில மோசடி விவகாரத்தில் சிக்கிய ஐஜி சிவனாண்டி.



கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான 4 ஏக்கர் நில அபகரிப்பு விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சிவனாண்டி மீது தற்போது புகார் கூறப்படுகின்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஜான்ரோசன் என்பவர் பராமரித்து வந்தார்.

இவர் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி, போலீஸ் டி.ஜி.பி., முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நான் (ஜான்ரோசன்) பராமரித்து வந்தேன்.

ரூ 10 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டை அபகரித்து சிலர் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நிலம் அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க தனிப்பிரிவு அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து , இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த புகார் தொடர்பாக தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி. பால்ராஜ், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் கொடைக்கானல் நகரசபை தலைவர் முகமது இப்ராகிம், நில புரோக்கர்கள் துலிப்சிங், சேகர் செபாஸ்டியான் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்து, கொடைக்கானல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை ஜூலை 27 ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து மூன்ரு பேருமந் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது, இந்த நில அபகரிப்பு புகாரில் போலீஸ் அதிகாரி சிவனாண்டியும் சிக்கி உள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த போது சிவனாண்டி இந்த நிலம் தொடர்பாக என்னை போனில் மிரட்டினார் என்று ஜான்ரோசன் தற்போது தெரிவித்துள்ளார். அவரது இந்த புகார் பதிவு செய்யப்பட்டு , போலீஸ் அதிகாரி சிவனாண்டியிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி தற்போது கும்பக்கோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தலைமை கண்காணிப்பாளராக உள்ளார் என்பது குறி்ப்பிடதக்கது.

கடந்த அதிமுகஆட்சியில், அதிமுகவின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தவர் சிவனாண்டி. இதற்காகவே கடந்த திமுக ஆட்சியின்போது அவர் முக்கியப் பணிகள் ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டார். ஆனால் பின்னர் திமுக பக்கம் அவர் சாய்ந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே தற்போதைய அதிமுக ஆட்சி, சிவனாண்டி மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு : போலீஸ் டி.எஸ்.பி.கைது ; ஐ.ஜி.யும் சிக்குகிறார்.

மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு: போலீஸ் டி.எஸ்.பி.கைது; ஐ.ஜி.யும் சிக்குகிறார்

திருப்பூரில் பாசி போரக்ஸ் என்ற பெயரில் பங்கு முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு பல கோடி மோசடியில் ஈடுபட்ட பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மோசடி செய்து சுருட்டப்பட்ட கோடி கணக்கான பணத்தை அவர்கள் வெளி நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

முதலில் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் பாசி நிறுவன பங்குதாரர் கமலவள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் அவரை கடத்தி சென்று அடைத்து வைத்து பல தவணைகளாக ரூ. 3 கோடி பணம் பறித்தனர்.

போலீசாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்ததால் இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மலைசாமி தலைமையிலான போலீசார்விசாரித்தனர்.கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். சண்முகையா முன் ஜாமீன் பெற்று விட்டதால் அவரை கைது செய்யவில்லை. டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மோசடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முதலீட்டாளர்கள் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பாசி நிறுவன வழக்கு சம்பந்தமான புகார்கள், ஆவணங்கள் அனைத்தும் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தலைமறைவாக இருக்கும் பாசி நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதே வேளையில் மோசடி பெண் கமலவள்ளியை கடத்தி சிறை வைத்து பணம் பறித்து வழக்கை கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அதன்படி திருப்பூரில் டி.எஸ்.பி. ராஜேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் கூறிய தகவல்படி பணத்தை பெற்று கொடுத்த போலீஸ் புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. ராஜேந்திரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.ஒருவருக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேட்டையில் அடுத்ததாக ஐ.ஜி.சிக்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் திடீர் மாற்றம்.



ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து அனைவரையும் அதிசயிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.அனந்தகுமாருக்கு பதிலாக, போக்குவரத்துத்துறை துணை செயலாளர் சி.காமராஜ், அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிகப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மகளை கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கு தனது மகளை சேர்த்து விட்டார் அனந்தகுமார். இது அனைவரையும் வியப்படைய வைத்தது. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து அனைவரது பாராட்டுக்களையும் அப்போது அனந்தகுமார் பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையி்ல் அனந்தக்குமார் மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல மீன்வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் கே. செல்லமுத்து மாற்றப்பட்டு, தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் பி.சந்திரமோகனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா புகார் : நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு.

நித்யானந்தா புகார்: நக்கீரன் கோபால்    முன்ஜாமீன் மனு

நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா சாமியுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த ஆபாச வீடியோ காட்சிகள் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. நக்கீரன் வார இதழிலும் ரஞ்சிதா - நித்யானந்தாவின் ஆபாச படங்கள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் மேலாளர் நித்ய பரமானந்தா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நித்யானந்தாவின் ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ. 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின், சன் டி.வி. சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரது பெயர்கள் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாததால் தற்போது புகார் கொடுத்துள்ளதாகவும் நித்யபரமானந்தா கூறியிருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அணுசக்தி மூலம் மின்சார உறபத்தியை கைவிட ஜப்பான் முடிவு.



ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது. விபத்து 4 ஆண்டுகளான பிறகும், கதிரியக்க கசிவு நின்றபாடில்லை. இதனால் சுவாசிக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கூட கதிரியக்கம் கலந்து உள்ளது.

இதனால் அணுமின் நிலையங்களை மூடுவது என்ற முடிவுக்கு ஜப்பான் பிரதமர் கான் வந்து விட்டார். இதை அவர் புகுஷிமா அணுஉலைக்கூடத்துக்கு சென்றபோது தெரிவித்தார்.

அணுமின் உற்பத்தியை ஜப்பான் கைவிடுவது என்று தீர்மானித்து உள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அணுஉலைக்கூடங்களே இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பானில் மொத்தம் உள்ள 54 அணுஉலைக்கூடங்களில் 35 கூடங்கள் மூடப்பட்டு விட்டன. மீதி நிலையங்களையும் மூடி விட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார். அணுசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது அதில் நிறைய அபாயம் உள்ளது.

அதை பாரம்பரிய பாதுகாப்பு முறைகளை கொண்டு தடுக்க முடியாது. அதனால் நாம் அணுமின்சக்தியை நம்பி இருக்காத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அணுமின்சக்தி இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு கால கெடு எதுவும் விதிக்க முடியாது.என்றும் அதை படிப்படியாக தான் கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்.