திருப்பூரில் பாசி போரக்ஸ் என்ற பெயரில் பங்கு முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு பல கோடி மோசடியில் ஈடுபட்ட பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மோசடி செய்து சுருட்டப்பட்ட கோடி கணக்கான பணத்தை அவர்கள் வெளி நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் பாசி நிறுவன பங்குதாரர் கமலவள்ளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் அவரை கடத்தி சென்று அடைத்து வைத்து பல தவணைகளாக ரூ. 3 கோடி பணம் பறித்தனர்.
போலீசாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்ததால் இதில் தொடர்புடைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மலைசாமி தலைமையிலான போலீசார்விசாரித்தனர்.கமலவள்ளியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். சண்முகையா முன் ஜாமீன் பெற்று விட்டதால் அவரை கைது செய்யவில்லை. டி.எஸ்.பி. ராஜேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மோசடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முதலீட்டாளர்கள் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பாசி நிறுவன வழக்கு சம்பந்தமான புகார்கள், ஆவணங்கள் அனைத்தும் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவாக இருக்கும் பாசி நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதே வேளையில் மோசடி பெண் கமலவள்ளியை கடத்தி சிறை வைத்து பணம் பறித்து வழக்கை கிடப்பில் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அதன்படி திருப்பூரில் டி.எஸ்.பி. ராஜேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் கூறிய தகவல்படி பணத்தை பெற்று கொடுத்த போலீஸ் புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. ராஜேந்திரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.ஒருவருக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேட்டையில் அடுத்ததாக ஐ.ஜி.சிக்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment