Friday, July 15, 2011

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி.



இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி17 ராக்கெட்மூலம் ஜிசாட்-12 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது.

1410 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான செயற்கைக் கோளான ஜிசாட் 12 செயற்கைக் கோள் ரூ. 90 கோடியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக் கோள் 12 டிரான்ஸ்பாண்டர்களுடன் கூடியதாகும். வானிலை முன்னறிவிப்பு, தொலைத் தொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 200 கோடியாகும்.

பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்களில் இது 19வது ராக்கெட்டாகும். இன்றைய தினம் இந்திய விண்வெளித்துறைக்கு முக்கியமானதும் கூட. காரணம், இன்று செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் அதிக எடை கொண்டதாகும்.

இதை சிறிய வகை ராக்கெட் மூலம் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோளை ராக்கெட்டுடன் இணைக்கும் பணி கடந்த 12-ந்தேதி நிறை வடைந்தது.செயற்கை கோளுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை பறக்க விடுவதற்கான 53 மணி நேர கவுண்டவுன் கடந்த 13-ந்தேதி காலை 11.48 மணிக்கு தொடங்கியது. கவுண்டவுனில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. கவுண்டவுன் இன்று மாலை 4.48 மணியுடன் நிறைவு அடைந்தது.

கவுண்டவுன் முடிவடைந்ததும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பறக்க விடப்பட்டது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இன்று ஏவப்பட்ட ஜிசாட்-12 செயற்கை கோளின் ஆயுள் காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

No comments: