Friday, July 15, 2011

நில மோசடி விவகாரத்தில் சிக்கிய ஐஜி சிவனாண்டி.



கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான 4 ஏக்கர் நில அபகரிப்பு விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சிவனாண்டி மீது தற்போது புகார் கூறப்படுகின்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஜான்ரோசன் என்பவர் பராமரித்து வந்தார்.

இவர் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி, போலீஸ் டி.ஜி.பி., முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நான் (ஜான்ரோசன்) பராமரித்து வந்தேன்.

ரூ 10 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டை அபகரித்து சிலர் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நிலம் அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க தனிப்பிரிவு அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து , இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த புகார் தொடர்பாக தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி. பால்ராஜ், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் கொடைக்கானல் நகரசபை தலைவர் முகமது இப்ராகிம், நில புரோக்கர்கள் துலிப்சிங், சேகர் செபாஸ்டியான் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்து, கொடைக்கானல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை ஜூலை 27 ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து மூன்ரு பேருமந் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது, இந்த நில அபகரிப்பு புகாரில் போலீஸ் அதிகாரி சிவனாண்டியும் சிக்கி உள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த போது சிவனாண்டி இந்த நிலம் தொடர்பாக என்னை போனில் மிரட்டினார் என்று ஜான்ரோசன் தற்போது தெரிவித்துள்ளார். அவரது இந்த புகார் பதிவு செய்யப்பட்டு , போலீஸ் அதிகாரி சிவனாண்டியிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி தற்போது கும்பக்கோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தலைமை கண்காணிப்பாளராக உள்ளார் என்பது குறி்ப்பிடதக்கது.

கடந்த அதிமுகஆட்சியில், அதிமுகவின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தவர் சிவனாண்டி. இதற்காகவே கடந்த திமுக ஆட்சியின்போது அவர் முக்கியப் பணிகள் ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டார். ஆனால் பின்னர் திமுக பக்கம் அவர் சாய்ந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே தற்போதைய அதிமுக ஆட்சி, சிவனாண்டி மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: