Saturday, August 13, 2011

சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப்பட்டது ஏன் ? கலைஞர்.



தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விட்டும் சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்து விட்டும் வழங்க வேண்டுமென்று சொல்லி இருக்கிறார்கள்.

முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம். அந்தப் பக்கங்களில் "வண்ணம் தீட்டுவேன்'' என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படமும், அவ்வை, கவுதாரி, பவுர்ணமி, வவ்வால் ஆகிய படங்கள் உள்ளன. இந்தப் பக்கத்தை ஏன் கிழிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று பள்ளிக் கல்வித் துறைக்குத் தான் வெளிச்சம்.

3 வது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 26 வது பக்கத்தில், கடைசி பத்தி நீக்கப்பட வேண்டுமாம். அதிலே என்ன இருக்கிற தென்றால், "உலகத் தமிழ் மாநாடு 2010 ஜுன் மாதம் 23 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது'' என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.

4 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74 வது பக்கத்தில், "செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவி பாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள்.

75 வது பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது "செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்'' இது சுற்றறிக்கை.

4 வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111 வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது குற்றமா என்று தெரியவில்லை.

5 வது வகுப்பு சமூக அறிவியலில் 80 வது பக்கத்தில் 3 வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 6 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 129 ல் "தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் கவிதை தைத்தமிழ்ப் புத்தாண்டே வருக'' என்ற வார்த்தைகள் இடம் பெற்றதற்காக அந்தப் பக்கம் முழுவதையும் நீக்க வேண்டுமாம். அடுத்து 130 வது பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.

6 ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53 ல் இரண்டாவது பத்தியில் உள்ள "தப்பாட்டம்'' என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். தப்பாட்டம் என்றால் என்ன என்பதையும், சிலப்பதிகார காலத்திலே அது இடம் பெற்றிருந்தது என்பதையும் அந்தப் பத்தியில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 6 ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் 81 ம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம்.

6 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பக்கம் 35 ல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம். காரணம் அந்தப் படத்தில் ஒரு பகுதி கறுப்பு சிகப்பு வண்ணம் போல இருப்பதால் அதை முழுமையாக அழிக்க வேண்டுமாம்.

6 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கவிஞர். அப்துல்ரகுமானின் தாகம் என்னும் கவிதை நீக்கப்பட்டிருக்கிறது.

9 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203 ல் "தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா'' என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 89 வது பக்கத்தில் "அறிந்து கொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்'' என்கிறது சுற்றறிக்கை. அந்தப் பகுதியில் நான் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனை முழுவதும் நீக்க வேண்டுமாம்.

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 177 வது பக்கம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமாம். அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்றால், தஞ்சை பெரிய கோவிலில் என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். 10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் பெரிதாக நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தி.மு.க.வை பற்றியும், என்னைப் பற்றியும் பக்கம் பக்கமாக பாராட்டி சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்து விட்டதாகக் கூறி, அந்தப் புத்தகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்கள். சமச்சீர் பாடப் புத்தகங்களில் அப்படி என்னதான் வார்த்தைகள் கடந்த கால அரசையும், என்னையும் பாராட்டி வந்துவிட்டன என்ற விவரம் அனைவருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இங்கே தொகுத்துள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

கட்டுமான தொழிலில் போட்டி : தமிழகத்துக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்.

கட்டுமான தொழிலில் போட்டி: தமிழகத்துக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்; வேலைவாய்ப்பை இழக்கும் உள்ளூர் வாசிகள்

கட்டுமான தொழிலில் கைதேர்ந்தவர்கள் தமிழர்கள். நேர்த்தியான வேலை, கலை நுணுக்கம் ஆகியவற்றால் கட்டுமான தொழிலில் தனி முத்திரை பதித்தார்கள். இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

கட்டுமான வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதே அரிதாகி விட்டது. நாட்டு முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம், பணப்புழக்கம் காரணமாக கட்டுமான பணிகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த தொழிலுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். இதற்காக ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் எந்த பக்கம் கட்டினாலும் அங்கு வட மாநில தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளதை பார்க்கலாம். இதேபோல சென்னை மெட்ரோ ரெயில், பெரிய பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளிலும் வெளிமாநில தொழிலாளர்கள்தான் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கும் வட மாநில தொழிலாளர்கள் படையெடுத்து வருகிறார்கள். போகிற போக்கை பார்த்தால் நம்மூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறி போய்விடுமோ? என்ற அச்சம் உண்மையான தொழிலாளர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்?

ஒரு காலத்தில் மேஸ்திரி, கொத்தனார்கள் முழு திறனையும் காட்டி உழைத்தார்கள். சம்பாதித்தார்கள். அந்த உழைப்புக்கு தனி மரியாதை இருந்தது. இன்று அப்படி இல்லை என்பதுதான் பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.

காலை 9 மணிக்கு பிறகே வேலையை தொடங்குகிறார்கள். மாலை 5 மணிக்கு அலுவலக வேலை போல் வேலையை முடித்து விட்டு கிளம்பி விடுகிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு வேலை நடப்பதில்லை. ஆனால் சம்பளம் மட்டும் எகிறுகிறது.

ஒரு கொத்தனார் சம்பளம் ரூ.550 மதல் 600 வரை உள்ளது. சித்தாள் கூலி ரூ.250 முதல் 300 வரை உள்ளது. வீட்டை கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்... என்று முன்னோர்கள் எந்த சிரமத்தை நினைத்து சொன்னார்களோ? வீடு கட்டுபவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள்.

நேரில் தொழிலாளர்களை அழைத்து இஷ்டம்போல் வீட்டை கட்டலாம் என்று நினைப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே காண்டிராக்டு முறையில் தொழிலாளர்களை நியமித்தார்கள். சதுர அடிக்கு ரூ.450 வரை கொடுக்கிறார்கள்.

அதிலும் இப்போது பிரச்சினை ஏற்படுகிறது. கட்டுமான பொருட்கள் தயாராக இருந்தால், தொழிலாளர்கள் வேலைக்கு வர மாட்டார்கள். தொழிலாளர்கள் வந்தால் கட்டுமான பொருட்கள் இருக்காது. இப்படிப்பட்ட சிரமத்தை தவிர்க்க வீடு கட்டுவது முழுவதையும் காண்டிராக்டு முறையில் ஒப்படைத்து விடுகிறார்கள்.

சதுர அடிக்கு ரூ.1200 முதல் 1300 வரை கட்டணம் வாங்குகிறார்கள். பெரிய கட்டிடங்கள், பல அடுக்குமாடி குடியிருப்புகளை பெரிய நிறுவனங்கள், பில்டர்கள் கட்டுகிறார்கள். குறித்த காலத்துக்குள் கட்டி முடிப்பது, செலவினங்களை குறைப்பது மூலமே லாபம் ஈட்ட முடியும்.

வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை குடிசை கட்டி தங்க வைத்து 3 வேளை உணவு கொடுத்தால் போதும். காலை 7 மணிக்கெல்லாம் வேலையில் இறங்கி விடுகிறார்கள். மாலையில் 6 மணிக்கு பிறகும் வேலை செய்கிறார்கள். சம்பளம் நம்மூர் சம்பளத்தைவிட பாதிதான்.

கல் உடைப்பது, கம்பி வளைப்பது, மண்தோண்டி போடுதல் என்று எதையும் யோசிக்காமல் செய்து விடுகிறார்கள். தொழிலாளர்கள் வரவில்லை என்ற பிரச்சினை இல்லாமல் தடை இல்லாமல் வேலையும் நடக்கிறது. இதனால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் வெளிமாநில கூலி தொழிலாளர்களையே விரும்புகிறார்கள்.

முன்பு சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்னைக்கு வந்தார்கள். இப்போது உள்ளூரிலேயே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தால் தினக்கூலி ரூ.100, அரிசி இலவசம், குடும்பத்தோடு இருக்கும் திருப்தி கிடைப்பதால் வெளியூர் வேலையை விரும்புவதில்லை. சம்பளமும் அதிகம் வேண்டும் வேலையும் கஷ்டம் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற மனோநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஆனால் வடமாநில தொழிலாளர்களோ தினமும் வேலை கிடைக்கிறது. சாப்பாடு செலவு இல்லை. ஓரளவு சம்பாதிக்க முடிகிறது. வெளிநாடு சென்றாலும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

எனவே சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கு வட மாநில தொழிலாளர்கள் படையெடுக்கிறார்கள்.

தெலுங்கானா போராட்டத்தால் ரூ.8,010 கோடிக்கு வர்த்தகம் மற்றும் உற்பத்தி இழப்பு.

தெலுங்கானா போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.530 கோடி இழப்பு:  வர்த்தக சங்கங்கள் கவலை

ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டம் நடந்து வருகிறது. கடையடைப்பு, பேரணி, பொதுக்கூட்டம் மறியல் என்று பலவித போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஒரு வருடமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் குறிப்பாக ஐதராபாத்தில் வர்த்தகம், வேலைவாய்ப்பு, மற்றும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் 60 ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஐதராபாத் நகரம் இழந்துள்ளது.

இது பற்றி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் துணை தலைவர் தேவானந்தா சுரானா கூறியதாவது:-

தெலுங்கானாவை வலியுறுத்தி “பந்த்” நடக்கும்போது, ஐதராபாத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.530 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 முறை முழு அடைப்பு போராட்டங்களை நடந்துள்ளன. இதன் மூலம் ரூ.8,010 கோடி அளவுக்கு வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

உற்பத்தி துறையில் மட்டும் நாள் ஒன்று சராசரியாக ரூ.300 முதல் ரூ.350 கோடி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருள்கள் சப்ளை பிரிவில் ரூ.150 முதல் ரூ.180 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. தவிர, ஐதராபாத்தில் கடந்த ஒரு ஆண்டில் 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் விநியோகம் உள்ளன. சேவை நிறுவனங்களும் நஷ்டத்தை அடைந்து வருகின்றன.

இதுபோல, அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில நிறுவனங்கள் வேறு பகுதிக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ செல்ல முடிவு செய்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

3 நாள் அரசு விடுமுறை திருப்பதி கோவிலில் அலைமோதும் கூட்டம் : தரிசனத்திற்கு 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருப்பு.

3 நாள் அரசு விடுமுறை திருப்பதி கோவிலில் அலைமோதும் கூட்டம்:     தரிசனத்திற்கு 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என்று தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். தரிசனத்திற்கு பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இலவச தரிசனத்திற்கு 14 மணி நேரமும், ரூ.50 கட்டண தரிசனத்திற்கு 11 மணி நேரமும், ரூ.300 கட்டண தரிசனத்திற்கு 6 மணி நேரமும் ஆகிறது. சிலநாட்களுக்கு முன்பு மராமத்து பணிக்காக திருப்பதி 2-வது மலைப்பாதை மூடப்பட்டிருந்தது. தற்போது ஏராளமான வாகனங்கள் வந்ததால் திருப்பதி முதல் மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் 2-வது மலைப்பாதையை திங்கட்கிழமை வரை திறக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து போக்குவரத்து நெரிசல் குறைந்தது. நேற்று காலை கோவிலில் உள்ள அங்கபிரதட்சண டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.

நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள் ; தமிழக அரசு ஏற்பாடு.

நிலம் அபகரிப்பு வழக்குகளை  விசாரிக்க    தமிழ்நாடு முழுவதும்   25 சிறப்பு கோர்ட்டுகள்;    தமிழக அரசு ஏற்பாடு

தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்கள் நிலத்தை அரசியல் வாதிகள் அபகரித்துக் கொண்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்போம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நிலத்தை பறி கொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு துணிச்சலாக வந்து புகார் கொடுத்தனர்.

இந்த புகார்களை பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த பிரிவுகளில் இதுவரை 2400-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் மனுக்களின் மீது தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை பெறப்பட்டுள்ள 2400-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்களில் உரிய ஆவணங்களுடன் தரப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வழக்குகளும் பதிவு செய்யப்படுகிறது. குற்றச்சாட்டு பதிவாகும் பகுதியில் உள்ள கோர்ட்டுகளில் இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் வழக்கமான கோர்ட்டுகளில் நில அபகரிப்பு வழக்கு விசாரணையையும் நடத்தினால் மிகவும் கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நில அபகரிப்பு வழக்கு விசாரணைகள் நடத்த சிறப்பு கோர்ட்டுக்கள் ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, நில அபகரிப்பு வழக்குகளை மட்டும் விசாரிக்க பிரத்யேகமாக 25 சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படும் என்று ஐகோர்ட்டு ஒப்புதலுடன் அறிவித்தது.

சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்க தமிழக அரசு ரூ.5.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சிறப்பு கோர்ட்டுக்கள் செயல்படும். மற்ற 23 கோர்ட்டுக்கள் மற்ற மாவட்ட தலைநகரங்களில் இயங்கும். வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் பதிவாகும் நிலஅபகரிப்பு புகார் விசாரணை பக்கத்து மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் சேர்த்து நடத்தப்படும். இந்த சிறப்பு கோர்ட்டுகள் ஒவ்வொன்றும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு தலைமையில் செயல்படும். 7 அதிகாரிகள் ஒவ்வொரு கோர்ட்டு பணியையும் மேற்கொள்வார்கள்.

ஓராண்டுக்கு இவர்களை தமிழக அரசு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. சிறப்பு கோர்ட்டுகளுக்கு எதிர்கால தேவைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கோர்ட்டுக்களை விரைவாக அமைத்து பணிகளை தொடங்க ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பு கோர்ட்டுகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகி யோரும் கலெக்டர்களிடம் பேசி சிறப்பு கோர்ட்டுக்களை உருவாக்க ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு கோர்ட்டு நடவடிக்கை மூலம் அவர்களது நிலம் விரைவில் திரும்ப கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மம்மூட்டி, மோகன்லால் ரூ.30கோடிக்கு வரி ஏய்ப்பு !



நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30கோடி கணக்கில் காட்டப்படாத சொத்துகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு சொந்தமாக சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2 வாரத்துக்கு முன் ஓரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இருவரின் தொழில் பங்குதாரர்கள் சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த சோதனையில் மம்மூட்டியும், மோகன்லாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. ஆனால் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தனர்.

வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடந்தால் ஒரு சில நாட்களில் சோதனை குறித்த விபரங்கள் வெளியிடப்படும். ஆனால் மம்மூட்டி, மோகன்லால் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின் விபரங்கள் 3 வாரங்களாக வெளியிடப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொச்சி வருமான வரித்துறை இயக்குனர் லூக்கோஸ் நேற்று வேளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இதுவரை நடந்த சோதனையில் மம்மூட்டி, மோகன்லால் அதிகமாக வைத்திருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மோகன்லாலின் வீட்டில் கண்டிபிடிக்கப்பட்ட ஓவியங்கள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு கண்டறிய தனிகுழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பழங்கால பொருட்களின் மதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.