Saturday, August 13, 2011

மம்மூட்டி, மோகன்லால் ரூ.30கோடிக்கு வரி ஏய்ப்பு !



நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30கோடி கணக்கில் காட்டப்படாத சொத்துகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு சொந்தமாக சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2 வாரத்துக்கு முன் ஓரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இருவரின் தொழில் பங்குதாரர்கள் சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த சோதனையில் மம்மூட்டியும், மோகன்லாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. ஆனால் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தனர்.

வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடந்தால் ஒரு சில நாட்களில் சோதனை குறித்த விபரங்கள் வெளியிடப்படும். ஆனால் மம்மூட்டி, மோகன்லால் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின் விபரங்கள் 3 வாரங்களாக வெளியிடப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொச்சி வருமான வரித்துறை இயக்குனர் லூக்கோஸ் நேற்று வேளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இதுவரை நடந்த சோதனையில் மம்மூட்டி, மோகன்லால் அதிகமாக வைத்திருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மோகன்லாலின் வீட்டில் கண்டிபிடிக்கப்பட்ட ஓவியங்கள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு கண்டறிய தனிகுழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பழங்கால பொருட்களின் மதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: