‘உண்ணாவிரதத்தின் போதோ அல்லது அதற்கு முன்போ என்னை கைது செய்தால், அதன் பிறகு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்’ என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகளை கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் வரும் 16ம் தேதி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்க உள்ளார்.
இதற்கு முதலில் அனுமதி மறுத்த டெல்லி போலீசார், பெரோஸ்ஷா கோட்லாவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஹசாரே திருப்தி தெரிவித்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி, டெல்லியில் சிவில் சொசைட்டி நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், இதன் நிர்வாகிகளில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா பலமாக இல்லை. இதை திரும்பப் பெற்று, வலிமையான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டப்படி 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை, எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டோம்.
உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்போ அல்லது உண்ணாவிரதத்தின் போதோ போலீசார் கைது செய்தாலோ, கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க முயன்றாலோ, அதன் பிறகு தண்ணீரை கூட குடிக்க மாட்டேன் என்று ஹசாரே எச்சரித்துள்ளார். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
‘இரவு 8 முதல் 9 வரை விளக்கை அணையுங்கள்’
கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், ‘ஊழலுக்கு எதிராக 16ம் தேதி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்கும்படி சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஹசாரே அழைப்பு விடுப்பார். மேலும், ஊழலை ஒழிக்க வலியுறுத்தும் விதமாக வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை மக்கள் விளக்கை அணைக்க வேண்டும். ஊழல், வறுமை, கல்வியறிவு இல்லாமை போன்ற விஷயங்களில் நமது சுதந்திரம் இன்னும் முழுமை பெறவில்லை. எனவே, ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவே, விளக்கை அணைக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.
No comments:
Post a Comment