ஜெயலலிதா 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை முதலில் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. 2001-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுவை விசாரித்து, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. அடுத்த குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 313-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாக்குமூலம் அளிக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு பெங்களூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் ஒரு மனுவில் அவர், நான் தமிழ்நாட்டு முதல்-அமைச்சராக இருப்பதாலும், தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதாலும், மேலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாலும் கோர்ட்டில் நேரில் ஆஜராக இயலாது எனவே வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மற்றொரு மனுவில், எனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக ஏற்கப்பட முடியாத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஜெயலலிதாவின் மனுக்கள் மீது பெங்களூர் கோர்ட்டில் 3 நாட்கள் விவாதங்கள் நடந்தன. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் பி.குமார் வாதாடுகையில், வாக்குமூலம் கொடுப்பது என்பது குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைதான் தவிர கோர்ட்டின் அதிகாரம் அல்ல என்றார்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில் சுப்ரீம் கோர்ட்டு 2003-ல் அளித்த உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்டவர், கோர்ட்டில் நேரில் ஆஜராகி, நேரில் வாக்குமூலம் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றார். இருதரப்பு வாதங்கள் முடிந்ததும் 12-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று பகல் 12 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி மல்லிகா ஜூனையா தீர்ப்பை வாசித்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் ஜெயலலிதா எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தை நீதிபதி வெளியிடவில்லை. முன்னதாக அவர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-
என் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நல்லம்மா நாயுடு என்பவர் விசாரணை அதிகாரியாக இருந்தார். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளை அவர் மறுபடியும் விசாரித்தார். மறுவிசாரணையில் பல சாட்சிகள் பல்டி அடித்தனர். பலர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டனர். சாட்சிகள் திடீரென அப்படி மாறியதற்கு என்ன காரணம்? இது தொடர்பாக பழைய விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடுவை கோர்ட்டுக்கு நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா தன் மனுவில் கூறி உள்ளார்.
சசிகலா மனுவை பெங்களூர் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த மனு மீது வரும் செவ்வாய்க்கிழமை (16-ந்தேதி) விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடிந்த பிறகே ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது தெரியவரும்.
No comments:
Post a Comment