Friday, August 12, 2011

பத்மநாபசாமி கோவிலின் 6-வது அறையை திறப்பவரின் வம்சம் அழிந்துபோகும்.திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழிந்து போகும் என, தேவ பிரசன்னத்தில் தெரிய வந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் கூறினர்.

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறந்து பார்க்கப்பட்டன. அப்போது அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம் கோடிக்கும் அதிகமான அரிய பொற்குவியல் இருப்பது தெரிய வந்தது. பி என்று பெயரிடப்பட்ட 6-து அறையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த அறைகள் திறப்பு மற்றும் பொற்குவியல் பட்டியலிடும் பணிகள் தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் எனும் ஜோதிட நிகழ்ச்சி நடத்த திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 8-ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், கோவில் தந்திரி தரணநல்லூர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, ஜோதிட பண்டிதர்கள் மதூர் நாராயண ரங்கபட், இரிங்காலக்குடை பத்மநாப சர்மா, அரிதாஸ், தேவிதாஸ் மற்றும் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேவபிரசன்னத்தின் முதல் நாள் காலையில் சோழிகள் உதவியுடன் ராசி பூஜையும், தொடர்ந்து தங்க ஆரூடம் பார்த்தலும், அதன் பிறகு 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 வெற்றிலைகள் உதவியுடன் தாம்பூல ஜோதிடமும் பார்க்கப்பட்டது.

முதல் நாளில் இருந்தே பல அபசகுன அறிகுறிகள் தோன்றியதாகவும், இதனால் நாட்டுக்கும், ராஜ குடும்பத்தினருக்கும் கெடுதல் ஏற்படும் என்பது உள்பட பல விளக்கங்கள் கூறப்பட்டன. இதில், 12 வெற்றிலைகள் பயன்படுத்தி ஜோதிடம் கூறும் தாம்பூல பிரசன்னம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

நேற்று 4-வது நாளாக காலை 8 மணிக்கு தேவபிரசன்னம் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக கணித்து கூறப்பட்ட சம்பவங்கள் மற்றும் பார்க்கப்பட்ட சகுனங்கள் பற்றியும் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுவரை தோராயமாக கூறப்பட்ட பல விஷயங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன. நேற்று, குத்துவிளக்கு மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி தேவபிரசன்னம் பார்க்கப் பட்டது. குத்துவிளக்கில் போடப்பட்டுள்ள திரிகள், அவற்றின் திசை, ஒளிரும் ஜோதியின் தன்மை- வடிவம் ஆகியவை மூலம் ஜோதிடர்கள் கணித்து கூறினார்கள். நேற்று தேவபிரசன்ன முடிவில் அதிர்ச்சி தரும் தகவல்களை ஜோதிட பண்டிதர்கள் வெளியிட்டனர்.

தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள்,

’’பத்மநாப சாமி கோவிலில் பரிகாரமாக செய்யப்பட்டு வந்த சில பூஜைகள்- நிகழ்ச்சிகள் தடைபட்டதால் சாமி கோபத்துக்கு உள்ளானது, நாட்டுக்கும் ராஜ குடும்பத்துக்கும் கெடுதல் ஏற்படுத்தி உள்ளதாக தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. இதனால் ராஜ குடும்பத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கோவில் நம்பிகள் புறப்படா சாந்திகளாக கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படவில்லை. கோவிலுக்குள் ரத்தம் சிந்தப்பட்டு உள்ளதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதற்கு பரிகாரமாக, கோவில் மற்றும் நாட்டின் ஐஸ்வர்யத்துக்காக பத்ர தீபம் ஏற்ற வேண்டும். (5 திரிகள் போட்டு தீபம் ஏற்றுவது தான் பத்ர தீபம் அல்லது பஞ்சாக்னி ஆகும்.)

பிராயசித்தமாக நடத்தி வந்த இந்த தீபம் ஏற்றும் வழக்கத்தை கோவில் ஆசாரப்படி, மீண்டும் தொடங்கி, தடைபடாமல் செய்வதாக கோவில் நிர்வாகிகள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. பத்ர தீபம் ஏற்றுவதற்கு இந்த கோவிலில் தனி அறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் கொள்ளை முயற்சி நடக்கலாம் என்றும் பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. நேபாள நாட்டின் கண்டகா நதியில் இருந்துதான், பத்மநாபசாமி மூலவர் சிலை அமைப்பதற்கு தேவையான சாளகிராமங்கள் திருவனந்தபுரத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இதில் தொடர்பு உடையவர்களை கவுரவிப்பது சம்பந்தமான பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும்.

பத்மநாபசாமி கோவிலில் பணம் செலவிடுவதில் மோசடி நடந்துள்ளது. வரவு-செலவு கணக்குகளிலும், வழிபாடுகள் தொடர்பான கணக்குகளிலும் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது.

கோவில் நீண்ட காலம் சிறப்பாக செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனந்தன்காடு உள்பட கோவிலுடன் தொடர்புடைய இடங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். கோவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் தேவபிரசன்னத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தெய்வீக காரியங்களுக்காக, தகுந்த ஆட்களையே நியமிக்க வேண்டும்.

திறக்கப்படாத 6-வது பாதாள அறைக்குள்(`பி' அறை) செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதனால் இந்த அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது.

இந்த அறையை திறந்தால், திறப்பவருக்கு விரைவில் மரணம் நிச்சயமாக ஏற்படும். அறையை திறப்பவரின் வம்சம் அழிந்து போகும்.

அறையை திறப்பவரின் குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி-அமைதியான நிலை தொடர்ந்து காணப்படும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்று கூறினர்.

No comments: