Friday, August 12, 2011

மனசாட்சி இல்லாத மாறன்கள்.



தயாநிதி மற்றும் கலாநிதி மாறனை இத்தனை நாளாக தழுவியிருந்த அதிர்ஷ்ட தேவதை சுத்தமாக கைகழுவி விட்டதாக தெரிகிறது.

2004 பாராளுமன்றத் தேர்தலின் போது, முரசொலி மாறனின் மறைவால், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு, கருணை அடிப்படையில் நியமிக்கப் பட்டவர்தான் தயாநிதி மாறன். அந்தப் பதவியே கனிமொழி போட்ட பிச்சைதான். முதலில் அந்தத் தொகுதிக்கு கனிமொழியை வேட்பாளராக நியமிக்கலாம் என்று, கருணாநிதி எடுத்த முடிவு, கனிமொழி அரசியலில் இறங்க அப்போது மறுத்ததால் தயாநிதிக்கு அந்த யோகத்தை அளித்தது.

அதற்குப் பிறகு, மாறன்களின் நடத்தையால் தான் அவர்கள் சிஐடி காலனியின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எம்.பி பதவியை பெறுவதற்கு முன்பாக, ராசாத்தி அம்மாளின் தயவு வேண்டி, அவர்கள் வீட்டிற்கு நடையாக நடந்தவர்கள், பதவி கிடைத்து மந்திரியானதும், சிஐடி காலனியை சுத்தமாக புறக்கணித்ததாக தெரிகிறது. இந்தப் புறக்கணிப்பும் உதாசீனப்படுத்தலுமே, ராசாத்தி அம்மாளை கனிமொழிக்கும், அரசியல் அதிகாரம் இருந்தால் தான், குடும்பத்தில் கவுரவமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும், வெறுமனே கருணாநிதியின் பாசம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.

2004ல் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு, கணிசமான செல்வாக்கை பெற்றுத் தந்ததும், தொலைத் தொடர்புத் துறையை கேட்டுப் பெற்றால் தங்களின் தொழில்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று மாறன்கள் உணர்ந்தே, அந்தத் துறையை பெற வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. மாறன் சகோதரர்களின் உள்நோக்கத்தை அறியாத கருணாநிதியும், அவர்கள் விருப்பத்தின் படியே, தொலைத் தொடர்புத் துறையை மத்திய அரசோடு மல்லுக் கட்டி பெற்றுத் தந்தார்.

தொலைத் தொடர்புத் துறை தங்களது கையில் வந்த நாள் முதலாகவே, மாறன்கள், அந்தத் துறையை தங்களின் தனிப்பட்ட தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள். எப்.எம் லைசென்ஸ், நேரடியாக வீட்டுக்கு வரும் டிடிஎச் சேவை, ஆகியவற்றில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல கோடிகளை சம்பாதித்தது கருணாநிதிக்குத் தெரியும் என்றாலும், இப்போது வெளியில் வந்திருக்கும் அளவுக்கு சம்பாதித்திருப்பார் என்று அவரே நினைக்கவில்லை.

மத்திய அமைச்சராக தயாநிதி ஆன பிறகு, அவர்களின் சொத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மாறன்களின் வாழ்க்கை முறையும் மாறத் தொடங்கியது. 2006ல் அதிகாரத்துக்கு வந்த பின்னால், அழகிரி மற்றும் ஸ்டாலினிடம் ஏராளமான அதிகாரம் இருந்தாலும், மாறன்களின் லைப் ஸ்டைலைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலே வந்தது. மிக மிக பகட்டான வாழ்க்கை முறை, ஏழு பென்ஸ் கார்கள் என்று ஆடம்பரமும், பகட்டும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

2006க்கு முன்பாக, கருணாநிதி குடும்பத்தினர் சன் டிவியில் வைத்திருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு தொகையை அளித்தனர். அது வரை சன் டிவி பங்குச் சந்தையில் வெளியிடப்படவில்லை என்பதால், உத்தேசமாக ஒரு விலையை நிர்ணயித்து, தயாளுவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு பத்து கோடியை அளித்ததாக நினைவு.

ஆனால், பங்குச் சந்தையில் ஆகஸ்ட் 2006ல் மாறன் சகோதரர்கள் சன் டிவியின் பங்குகளை வெளியிடுகிறார்கள். வெறும் பத்து சதவிகித பங்குகளை வெளியிடுகிறார்கள். இந்த 10 சதவிகித பங்குகள் மொத்தம் 68 லட்சத்து 89 ஆயிரம் பங்குகள். இந்தப் பங்குக்கு மாறன் சகோதரர்கள் நிர்ணயித்த விலை 875 ரூபாய். இவ்வாறு சந்தைக்கு வந்த சன் டிவியின் பங்கு, சந்தையில் வெளியிடப் பட்ட அன்று, 1466 ரூபாய்க்கு முடிந்தது.

இவ்வாறு மாறன் சகோதரர்கள் இந்தப் பங்கு வெளியீட்டில் சம்பாதித்த பெரும் தொகை, கருணாநிதி குடும்பத்தினரை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அப்போது முதலே, மாறன்கள் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.

நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபம், தினகரன் நாளேட்டில் சர்வே வெளியானதும் வெளிப்படையாக வெடித்தது. அந்நாளேட்டில் பணியாற்றிய 3 ஊழியர்கள் எரித்துக் கொல்லப் பட்டாலும், அது, மாறன் சகோதரர்களின் கொட்டத்தை அடக்க ஒரு வாய்ப்பாக கருணாநிதி குடும்பத்தாரால் பார்க்கப் பட்டது.

அப்போது ஏற்பட்ட பிரிவால் உருவானதுதான், கலைஞர் டிவி உதயம். பிரிந்து போன மாறன் சகோதரர்கள், மீண்டும் கருணாநிதியோடு இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து, மோதிப் பார்த்து விடலாம் என்ற வழியையே தேர்ந்தெடுத்தனர். சன் டிவி மூலமாக தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான செய்திகளை போட்டுத் தாக்கினர். ஸ்பெக்ட்ரம் விவகாரம் அரசல் புரசலாக கசியத் தொடங்கியதும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கண்ணாடி போல தெளிவான முடிவுகள் எடுத்ததாகவும், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து நீக்கியதாலேயே ஊழல் நடைபெற்றது என்றும், தவறாக எடுக்கப் பட்ட அனைத்து முடிவுகளுக்கும் ராசாவே காரணம் என்றும் வளைத்து வளைத்து செய்தி போட்டனர்.

சன் டிவியின் வளர்ச்சி என்பது, திமுக தொண்டனின் ரத்தத்தில் கிடைத்தது. திமுக தொண்டனின் போராட்டத்தாலும் திமுக வின் ஆட்சி அதிகார பலத்தாலும், அந்தக் கட்சியின் சொத்தான அறிவாலயத்திலும் வளர்ந்தது. அப்படிப் பட்ட வளர்ச்சியை மொத்தமாக மறந்து விட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சன் குழுமத்தின் தினகரன் நாளேட்டில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டார்கள் மாறன் சகோதரர்கள். இதுதான் இவர்களின் மனசாட்சி.

திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கிடைத்த அதிகாரத்தை கட்சியின் வளர்ச்சிக்கும், ஓரளவுக்கு தங்கள் சுயலாபத்திற்கும் பயன்படுத்தினார்கள் என்றால், மாறன் சகோதரர்கள் முழுக்க முழுக்க தங்களது, சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள்.

பேரப்பிள்ளைகள் ஏதோ தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கருணாநிதிக்கு, 2006ல் சன் டிவி பங்கு வெளியிட்ட போதுதான், நூற்றுக்கணக்கான தொழில்களை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை தொழில்களை மாறன்கள் நடத்தி வருவது தெரிந்ததும் தான், தனது சொந்தப் பிள்ளைகளுக்கு எதுவுமே சேர்த்து வைக்கவில்லையே என்பதை கருணாநிதி உணர்ந்தார். இந்த விரக்தியின் வெளிப்பாடே, மகன்களையும், மகள்களையும் கண் மண் தெரியாமால் சம்பாதிக்க விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

ஏற்கனவே, மாறன்கள் மீது பொறாமையில் இருந்த அழகிரி, தயாநிதி மற்றும், மந்திரியானதும் தங்களை கண்டுகொள்ளமால் ஒதுக்கி உதாசீனப்படுத்தினார்கள் என்று எரிச்சலில் இருந்த ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆகியோர், அவர்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கும் மாறன்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டுமென்றால், உழைத்தா சம்பாதிக்க முடியும் ?

அப்போது கிடைத்த வரப்பிரசாதம் தான், தொலைத் தொடர்புத் துறை என்ற அட்சயப் பாத்திரம். இந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஆ.ராசா, தயாளு, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெகதரட்சகன், காமராஜ், ஜாபர்சேட், போலிப் பாதிரி என்று அள்ளித் தின்னாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு, அந்த அட்சயப் பாத்திரம் அள்ளிக் கொடுத்தது.

மாறன்கள், தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதை கவனமாக கூர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார் கருணாநிதி. ஆரம்பத்தில், ஏமாற்றி விட்டார்கள் என்று மாறன்கள் மேல் இருந்த கடும் கோபம், நாளுக்கு நாள், அவர்களின் பலத்தைப் பார்த்ததும் அச்சமாக மாறத் தொடங்கியது. மற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரத்தில் என்ன நடந்தது என்று அப்போது தெரியாமல் இருந்தாலும், கருணாநிதிக்கு தெரியுமல்லவா ?

இது தவிரவும், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தவர் செல்வி. இந்த செல்வி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வித் தொடரில் வருபவர்களை விட, அபாரமாக நடிக்கும் திறமை படைத்தவர். இரண்டு குடும்பங்களும் மோதலில் இருந்த காலத்தில், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றது போல, நடித்தவர் இந்த செல்வி.

சொந்த மகள் இறந்தாலும், தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவர் தான் கருணாநிதி. ஆனாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டால், கட்சிக்கு ஆபத்து, தனக்கும் ஆபத்த என்பதை உணர்ந்ததாலேயே, மாறனை மந்திரிப் பதவியை விட்டு நீக்க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியவர், இணைப்புக்கு கோபாலபுரம் குடும்பத்தோடே முடித்துக் கொண்டு, “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்” என்று பதிலளித்தார்.

அதற்குப் பிறகு, மாறன்களோடு இணைந்தது போல வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், உடைந்த பானை ஒட்டாது என்பது போலவேதான், கட்டாயம் மற்றும் வசதியின் அடிப்படையிலான உறவாக (Relationship of convenience) அந்த உறவு தொடர்ந்தது.

ராசா மீது வட இந்திய ஊடகங்களில் குற்றச் சாட்டுகள் மெள்ள எழுந்த போதெல்லாம் கோபம் கொள்ளாத கருணாநிதி, மாறன்களுக்கு மிக மிக நெருக்கமான விகடன் குழுமமே, ராசாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கடுமையாக எழுதியதிலும், மாறன்களைப் பற்றி அமைதி காத்ததிலும் கடும் கோபம் அடைந்தார். இதன் பின்னணியில் இருப்பது மாறன்களே என்று கருணாநிதி சமீப காலத்தில் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

திமுக மிக மிக பலவீனமாக இருக்கும் இந்தச் சூழலில், மாறன்களை கட்சியை விட்டு நீக்குவது என்ற கடினமான முடிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று கருணாநிதி உணர்ந்தாலும், மந்திரி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லலாமா என்று ஆலோசித்துள்ளார். ஆனால், திடீர் திருப்பமாக, அழகிரி, மாறன்களுக்கு ஆதரவாக, ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எந்நேரம் வேண்டுமானாலும் சிறை செல்லலாம் என்ற அச்சத்தில், மந்திரி பதவியும் இல்லாவிட்டால், குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் போய் விடும் என்று அழகிரி நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் காரணத்தாலேயே அழகிரி, இப்போதைக்கு ஆதரவு வாபஸ் வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.

ஒரு சர்வே வெளியிட்டதால், மாறன் சகோதரர்கள் மேல் கடும் கோபம் கொண்டு, மூன்று பேரை எரித்துக் கொன்று, அந்தக் கோபத்தை தணித்துக் கொண்ட அழகிரியும், மாறன்களும், இன்று ஒரே அணியில் இருப்பது காலத்தின் கோலமே…

ஆனால் இது போல எந்த நெருக்கடிகளும் இல்லாத ஸ்டாலின் மாறன்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தயாநிதி மாறனிடம், தேவையின்றி வீட்டுக்கு வர வேண்டாம் என கடுமையாக சொல்லியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது. கருணாநிதியை தயாநிதி சந்தித்த போது கூட, “தாத்தா என்னை திஹாருக்கு அனுப்ப நிறைய பேர் வேலை செய்யிறாங்க தாத்தா” என்று சொன்னதற்கு “போயிட்டு வாப்பா” என்று சொன்னதோடு கருணாநிதி நிறுத்திக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

மற்ற ஊடகங்கள் நெருக்கடி கொடுத்ததையெல்லாம் தங்கள் பண பலத்தால் சமாளித்த மாறன்கள், திமுக தலைவர் கருணாநிதியும் அவர் குடும்பத்தின் ஆதரவும் விட்டுப் போனதில், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரதமர் சிபிஐக்கு தயாநிதி மாறனை விசாரிப்பதற்கான அனுமதி கொடுத்து உள்ளதை அடுத்து, எந்நேரமும் தயாநிதி பதவி விலக வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

ஈழப் போரின் போது, கருணாநிதி கூட ஒரு சமயத்தில் ஏன் ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று யோசித்த போது கூட, மாறன்களே கருணாநிதியை அம்முடிவிலிருந்து தடுத்ததாகவும், இதற்கு அவர்களின் வணிக நோக்கங்களே காரணமாக இருந்துள்ளன என்றும் திமுக வில் உள்ள சில மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

மனசாட்சி என்பது துளி கூட இல்லாத இந்த மாறன்களின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியிருக்கிறது. விரைவில் தயாநிதிமாறன் திஹார்சிறையில் அடைக்கப் படும்போது, நமக்கு அல்ல… கருணாநிதிக்கு “இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்”

No comments: