Saturday, April 2, 2011

இலங்கையை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி...

டோணி தலைமையில் புதிய வரலாறு படைத்தது இந்தியா-2வது உலகக் கோப்பையை வென்றது

மும்பை கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா அபாரமாக வென்றுள்ளது. மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் அடித்துத் துவைத்து வெற்றி பெற்று தனது 2வது உலகக் கோப்பையை வென்றது.
Getty Images

இதுவரை கபில்தேவ் வசம் மட்டுமே இருந்து வந்த உலகக் கோப்பைப் பெருமையில் டோணி தலைமையிலான வீரர்கள் இணைந்துள்ளனர்.

28 ஆண்டு கால உலகக் கோப்பைக் கனவையும் டோணி தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றி உலகெங்கும் உள்ள இந்தியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

2வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

மிகப் பிரமாதமான சேஸிங்கில் ஈடுபட்ட இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் இன்று ஏமாற்றமளித்தனர். அதிரடியாக ஆரம்பித்த சச்சின் 18 ரன்களில் ஆட்டமிழந்தபோது மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த இழப்பை ஈடுகட்டி விட்டார் கெளதம் கம்பீர். அபாரமாக ஆடிய அவர் மிகுந்த மன வலிமையுடன் பொறுப்பை உணர்ந்து சீராகவும், சிறப்பாகவும் ஆடினார். அவரும் கேப்டன் டோணியும் இணைந்து மிகச் சிறப்பான கட்டத்திற்கு இந்திய அணியை இட்டுச் சென்றனர்.

விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து இருவரும் அணியை வெற்றி இலக்குக்கு அருகில் கொண்டு சென்று விட்டனர்.

கம்பீரின் ஆட்டம் இன்று வெகு சிறப்பாக இருந்தது. சரியான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பி இலங்கைப் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார் கம்பீர். 122 பந்துகளில் 97 ரன்களை எடுத்தார் கம்பீர்.

இருப்பினும் மறு முனையில் கேப்டன் டோணி தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்று புதிய வரலாறு படைத்தார்.

3வது முயற்சியில் 2வது கோப்பை

இந்தியா உலகக் கோப்பையை கடந்த 1983ம் ஆண்டு முதல் முறையாக வென்றது. கபில் தேவ் தலைமையிலான அந்த அணியின் பந்து வீச்சாளளர்கள் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தனர்.

அதன் பின்னர் 2003ம் ஆண்டு 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இருப்பினும் அப்போது பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் சொதப்பியதால் இந்தியா படு தோல்வியுடன் கோப்பைக் கனவைத் தகர்த்துக் கொண்டு தாயகம் திரும்பியது.

2011 உலக்க கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் 3வது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா. இந்த முறை பேட்ஸ்மேன்கள் மூலம் இந்தியாவுக்கு பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது.

3 முறை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்தியா, தனது 3வது முயற்சியில் 2வது உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ளது.

டோணிக்கு 2வது உலகக் கோப்பை

கேப்டன் டோணிக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் விசேஷமானதாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு அவர் முதல் முறையாக நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

தற்போது ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்கள் வரிசையில் இதன் மூலம் அவர் முன்னணிக்கும் உயர்ந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டிப் பிடித்து விட்டார்.

சச்சின் கனவு நனவானது

சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உலகக் கோப்பை பெருமைக்குரியதாக இருந்தாலும் கூட, அவர் சரியாக விளையாடாத நிலையில் இந்த உலகக் கோப்பை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடியும் கூட இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாத நிலை இருந்தது.

22 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் தனது ஆட்டத்தின் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில் கோப்பையை தொட்டிருப்பது நிச்சயம் அவருக்கு சந்தோஷமானதாகவே இருக்கும். இருப்பினும், இன்றைய இறுதிப் போட்டியில் அவரால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாதது கோடானு கோடி ரசிகர்களைப் போலவே அவருக்கும் பெரிய ஏமாற்றமாகவே இருக்கும்.

முன்னதாக ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது.

மஹேளா ஜெயவர்த்தனே சதம் அடித்தார். ஆரம்பத்தில் ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் திக்கித் திணறி ஆடிய இலங்கை, பின்னர் சங்கக்கரா, ஜெயவர்தன உதவியுடன் மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. ரன்களை எடுப்பதை விட, விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர் இலங்கை வீரர்கள். இதனால், இறுதி ஓவர்களில் பவுண்டரி மழை பொழிந்தனர்.

200 ரன்களைத் தாண்டியதும் அடித்து ஆட ஆரம்பித்தனர் இலங்கை வீரர்கள்.

இந்தப் போட்டியில் நிதானமாகவும் உறுதியுடனும் நேரம் வாய்த்த போது அடித்தும் சிறப்பாக ஆடிய ஜெயவர்தன, 85 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 14வது சதம். இந்திய பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கையின் ஸ்கோரை, 250 தாண்ட உதவியது இவரது சதம்தான்.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கான் 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆரம்பத்தில் இவர் தொடர்ந்து 3 மெய்டன் ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்பஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆரம்பத்தில் சிறப்பான பந்து வீச்சு, பீல்டிங் என அசத்திய இந்திய அணி, கடைசி ஓவர்களில் அசட்டையாக இருந்துவிட்டதால், இலங்கை பெரிய ஸ்கோரை எட்டிவிட்டது.

டோணி போட்ட தப்புக் கணக்கு-ஸ்ரீசாந்த்தை சேர்த்தது .

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இலங்கையின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் போய் விட்டது இந்தியாவால். அதிலும், ஸ்ரீசாந்த் ரன் வள்ளலாக மாறி ரன்களை தாறுமாறாக வாரிக் கொடுத்து விட்டார்.
Sreesanth
Getty Images
பாகிஸ்தானை அதிர வைத்த ஆசிஷ் நெஹ்ரா காயமடைந்ததால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப் பந்து வீச்சாளராக இருக்கட்டும் என்று ஸ்ரீசாந்த்தை சேர்த்தார் டோணி. ஆனால் டோணியின் கணக்கு தப்புக் கணக்காகி விட்டது. வெறும் 8 ஓவர்களை மட்டுமே போட்ட ஸ்ரீசாந்த் 52 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்.

அதேபோல ஜாகிர்கானும் ரன்களை வாரி வழங்கினார். 10 ஓவர்கள் போட்ட அவர் 3 மெய்டன் போட்டு 60 ரன்களைக் கொடுத்தார். இருப்பினும் 2 விக்கெட்களை எடுத்தார்.

மற்ற பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் 10 ஓவர்கள் போட்டு 50 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பரவாயில்லை. 10 ஓவர்களைப் போட்ட அவர் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இன்றைய போட்டியில் கடைசி நேரத்தில்தான் இலங்கை ரன்களைக் குவித்து விட்டது. இந்த இடத்தில்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச வேண்டியது அவசியம். ஆனால் அந்த சமயத்தில்தான் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்துகளை தாறுமாறாக போட்டனர்.

ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சச்சின், விராத் கோலி என 7 பேர் பந்து வீசியும், இலங்கையின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் போய், இந்தியாவின் ஓட்டைப் பந்து வீச்சு மீண்டும் ஒருமுறை பல்லைக் காட்டி விட்டது.

தற்கொலைக்கு தூண்டப்பட்ட மதுரை தேர்தல் அதிகாரி


மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போட வற்புறுத்துகிறார்; மதுரை கலெக்டர் மீது கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி புகார்

மதுரை கோட்டாட்சியரும், மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியுமான சுகுமாறன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் மதுரை கோட்டாட்சியராகவும், கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறேன். இந்த தொகுதியில் நேர்மையாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைத்து இருந்த என்னை மதுரை கலெக்டர் சகாயம் கடந்த 3 நாட்களாக என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் நேரில் அழைத்தும் பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சகாயம் என்னை வற்புறுத்தினார்.

ஆனால் நான் அவரிடம் தேர்தல் விதிமுறையை மீறாத அவர்களிடம் எப்படி வழக்கு போட முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் பொய் வழக்காவது போடுங்கள் என்று என்னை வற்புறுத்தினார். இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கடந்த 3 நாட்களாக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சுவலியும் வந்து விட்டது.தொடர்ந்து இதேநிலை நீடித்தால் நான் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக நான் பணி செய்ய விரும்ப வில்லை. என்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் சுகுமாறன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் அதிகாரி சுகுமாறன் நெஞ்சுவலி காரணமாக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சுகுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரை கலெக்டர் சகாயம் நேர்மையாக தேர்தல் பணி செய்ய விடாமல் என்னை டார்ச்சர் செய்து வருகிறார். மு.க. அழகிரியை சந்தித்தீர்களா? மூர்த்தியுடன் என்ன பேசினீர்கள் என்று கேட்கிறார். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்தது முதல் நான் அழகிரியை சந்திக்கவில்லை.

மூர்த்தியை வேட்பு மனு தாக்கலின் போதுதான் அதிகாரி என்ற முறையில் மனுவை பெற்றுக் கொண்டேன். ஆனால் இவர்களுக்கு எதிராக செயல்படும்படி வற்புறுத்துகிறார். அவர் சொல்லும்படி நடக்கா விட்டால் தலைமை தேர்தல் கமிஷனிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுகிறார். இதனால் நான் தற்கொலை செய்ய தூண்டப்பட்டு உள்ளேன்.

எனக்கு ஏதாவது ஏற்பட்டு என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற பயம் வந்துள்ளது. எனவே கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை கலெக்டர் மீது தேர்தல் அதிகாரியே புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது





மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பணம்-லஞ்சம் பெற்றுக் கொண்டு வாக்கு அளிக்க கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சகாயம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தேர்தல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த வரையில் தேர்தல் அதிகாரியுமான நான், போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு, வருவாய் அலுவலர்கள் ஆகியோர் சிறப்பாக தேர்தல் பணியை செய்து வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள்.

பணம், லஞ்சம் பெறாத வாக்களிப்பு உரிமையை இந்த முறை மக்கள் சந்திக்க வேண்டும். இந்திய நாட்டின் மிகவும் சிறப்பானது ஜன நாயகம்தான். அச்சாணியாக உள்ள தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும். மதுரை மக்கள் நேர்மையானவர்கள். பணம் வாங்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மீதும் பொய் வழக்கு போடச் சொல்லி தேர்தல் அதிகாரி சுகுமாறனிடம் நீங்கள் நிர்பந்தம் செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளாரே?

பதில்:- அப்படி நான் செய்வேனா? அவர் கூறுகிற மாதிரி நான் அவரிடம் பேசவில்லை. தேர்தல் பணியை கவனிக்க கூட நேரம் இல்லாத நிலை எனக்கு உள்ளது.

கே:- தேர்தல் அலுவலர் சுகுமாறனை நீங்கள் டார்ச்சர் செய்ததாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறியும் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாரே?

ப:- அவர் சொல்வது முழுக்க ... முழுக்க பொய். அரசு ஊழியராக இருந்து கொண்டு மேல் அதிகாரி மீது புகார் கூறுவது ஒரு மோசமான நிலை.

கே:-தேர்தல் அதிகாரி பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சுகுமாறன் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாரே?

ப:-எப்போது கடிதம் அனுப்பினார் என்பது எனக்கு தெரியாது.

கே:- ஆளும் கட்சிக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் கூறுகிறார்களே?

ப:- என் மீது கட்சி சாயம் பூசாதீர்கள். நேர்மையாகவும், நடுநிலையோடும், நியாய மாகவும் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

கே:- தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதா?

ப:-இதுவரை எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பத்து பிரச்னைகளை பத்துப் பேர் அலசுகிறார்கள்!

கூட்டணிக் கணக்குகள், கவர்ச்சித் திட்டங்கள், இலவச அறிவிப்புகள் என அரசியல்வாதிகள் ஆயிரமாயிரம் கணக்குகள் போட்டாலும், பிரச்னைகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. தி.மு.க அரசின் 5 ஆண்டு கால நிர்வாகம் எப்படி? எந்தெந்தப் பிரச்னைகள் இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கும்? பத்து பிரச்னைகளை பத்துப் பேர் அலசுகிறார்கள்!

"விவசாயி கையில் விவசாயம் இல்லை!"
நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

''தமிழக விவசாயிகளைப் பொறுத்த அளவில், தொடர்ந்து அமையும் எல்லா அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த ஆட்சியிலும் அது தொடர் கதை தான்!

ஜீவாதார நதி நீர்ப் பிரச்னைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இருக்கும் நீர்நிலைகளும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என்ற பெயரில் மேற்கொண்டு வரும் ராட்சசத் திட்டங்களுக்காக ஏரி, குளங்களைக் காவு வாங்கிவிட்டார்கள். சாலை ஓரம் இருந்த விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆசாமிகளால் சூறையாடப்பட்டு, வடிநிலங்களான தரிசுகளும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன.

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,737 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. அரசாங்கம், இந்த எண்ணிக்கையை வெறும் '3’ என்று சொல்கிறது. எண்ணிக்கையை மறைக்கலாம்... பிரச்னையை?

எந்த விஷயத்தையும் இந்த அரசாங்கம் விவசாயிகள் நலக் கண்ணோட்டத்தோடு பார்க்காது என்பதற்கு பனையேறிகள் பிரச்னையே உதாரணம். கோடிக்கணக்கான தென்னை, பனை மரங்கள் இருக்கின்றன தமிழகத்தில். தென்னம்பால், பனம்பால் (கள்) எடுக்க அனுமதித்தால், லட்சக்கணக்கான விவசாயிகள், பனையேறிகள் பயனடைவார்கள். ஆனால், விவசாயிகளின் நலனைவிட, சாராய அதிபர்களின் நலன்தான் முக்கியமாகப் படுகிறது ஆட்சியாளர்களுக்கு!

இயற்கைச் சீற்றங்களில் பறிகொடுத்து, உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பறிகொடுத் தது போக, இப்போது நிலத்தையும் பறி கொடுத்துக்கொண்டு இருக்கிறான் விவசாயி. போராடிப் போராடி அவன் ஓய்ந்துவிட்டான். இப்போது அவன் மௌனமாக இருக்கிறான். அது புரட்சியாக வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை!''

"இலவசங்கள் இழுக்கு!"
எம்.ஆர்.வெங்கடேஷ், தணிக்கையாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆய்வாளர்.

''அத்தியாவசியப் பொருட்களை வாங்க வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியோ அல்லது கலர் டி.வி-யோ, பெரிய உதவியாகத் தான் இருக்கும். நல்லாட்சிக்கு இடையே இலவசங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 'இலவசம்’ என்ற போர்வை யில் ஜனநாயகத்தையே பாழாக்கிவிட்டது அரசு. 4,000 கோடிகளை கலர் டி.வி-க்கென ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தப் பணத்தை நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வேனும் எட்டப்பட்டு இருக்கும்.

ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறது அரசு. சுதந்திரத்துக்குப் பிறகு, 65 ஆண்டுகளாக இன்னும் தங்களை ஏழைகளாகவே வைத்திருப்பதால் மக்களின் கோபம் அரசின் மேல் திரும்பி விடாமல் இருக்க, வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துகிறது அரசு. இதனால் நிகழ்ந்த தீமையின் விளைவு... வாக்களிப்பதற் குக்கூடப் பொதுமக்கள் அன்பளிப்பை எதிர்பார்க்கிறார்கள். தேசத்தை சுபிட்சம் ஆக்குவதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. சட்டம் - ஒழுங்கு, விவசாயம், தொழில், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு இடம் இல்லாத தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் மட்டுமே பிரதான இடம் பிடித்து இருப்பதைச் சாபக்கேடு என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வது?

2007 தேர்தலின்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை வைத்தே தனது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்து இருந்தது. ஆனால், அங்கே மக்கள் தெளிவாக காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் மண்ணைக் கவ்வ வைத்தார்கள். அந்தத் தெளிவு இங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறதா? தொலை நோக்குடன் மக்களின் துயர் துடைப்பதற்கென அறிவிக் கப்படும் திட்டமாக இருந்தால், பொருளாதாரச் சுமையையும் கருதாமல், அதை வரவேற்கலாம். ஆனால், வாக்குகளை மட்டுமே குறி வைத்து அளிக்கப்படும் இலவசங் களால் ஜனநாயகத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுவதோடு, அந்தப் பொருளாதாரச் சுமை பிற்காலத்தில் பொதுமக்களின் மீதேதான் சுமத்தப் படுகிறது.

ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். அரசிடம் இலவசம் பெற்ற 'நன்றி உணர்ச்சி’யினால், மக்களும் ஊழல்வாதிகள் ஆவது, தேசத்துக்கே பெரும் அவமானம்!''

"விலைவாசியைக் குறைப்பதில் அக்கறை இல்லை!"
த.வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர்.

''விலைவாசி உயர்வுக்கான காரணம் மத்திய அரசுதான் என்று மாநில அரசும், மாநில அரசு தான் என்று மத்திய அரசும் மாறி மாறிக் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் இரண்டு அரசுகளுக்கும் அக்கறை இல்லை என்பதே உண்மை. உணவு உற்பத் தியை முறையாகத் திட்டமிடவில்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுச் சக்திகளும், உள்நாட்டுப் பண முதலைகளும் கொள்ளை அடிக்க வழிவகை செய்து கொடுக் கின்றன மத்திய-மாநில அரசுகள்.

பூண்டு ஒரு கிலோ 30-க்கு விற்ற சமயத்தில், அதை விளைவித்த விவசாயிகள் பூண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அப்போதே அரசு தக்க நடவடிக்கைகள் மூலம் நிலைமையைச் சீர் செய்யாததால், இந்த ஆண்டு பூண்டு விலை ஒரு கிலோ 300. இப்போதும் அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை. ஆன்லைன் வர்த்தக சூதாட்டத்தினால்தான், இப்படி விலைவாசி விண்ணைத் தொடுகிறது என்பது ஆட்சியாளர் களுக்கும் தெரியும்.

வெங்காயத்தை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அரசு ஏற்றுமதி செய்தது. அதன் பின் இங்கே வெங்காயத்துக்குத் தட்டுப் பாடு வந்தவுடன், மீண்டும் அதிக விலை கொடுத்து அதே வெங்காயத்தை அங்கே இருந்து இங்கு இறக்குமதி செய்கிறது. நாம் இளிச்சவாயத்தனமாக சாலை வழியாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்தால், பாகிஸ்தான் விவரமாகக் கப்பலில் நமக்கு அனுப்புகிறது.

முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதால் பருப்புக்கு மட்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் தடை விதித்தது மத்திய அரசு. அதனால், பருப்பு விலை மட்டும் இன்று வரை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதேபோல, மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை போன்றவற்றுக்கும் ஆன்லைன் வர்த் தகத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பிரதமருக்கு ஏன் நம் முதல்வர் கடிதம் எழுதவில்லை?

உள்நாட்டில் தேவைக்கு அதிகமான உற்பத்தி இருக்கும்போது, வெளிநாட்டில் இருந்து அதே பொருளை விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக இறக்குமதி செய்வதும், வெளிநாட்டில் அதிக விலைக்குக் கேட்கிறார்கள் என்பதற்காக, நமக்கே தட்டுப்பாடாக இருக்கும் ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதும் கூடாது என்றார் மகாத்மா காந்தி. ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது. அதற்கு மாநில அரசும் ஒத்திசைவாக இயங்கி,, தனது அதிகார வெள்ளாமைக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது?''

"கொடுமைகளின் ஆணிவேர் குடும்ப அரசியல்!"
பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரவை.

''இந்திய அரசியலுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி அளித்திருக்கும் மிகப் பெரிய கொடை, குடும்ப அரசியல் சூட்சுமம்!

மக்கள் இங்கு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்பது வேறு, குடும்ப அரசியல் என்பது வேறு. வாரிசு அரசியல் என்பது, தனக்கென ஒரு வாரிசை நியமித்து, அவருக்கு அதிகாரம் அளிப்பது.குடும்ப அரசியல் என்பது அப்படி அல்ல. குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரையும் அதிகார மையங்களாக்கி, அவரவர் விருப் பப்படி செயல்பட அனுமதிப்பது. ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் மிக மோசமான எதிரி.

தமிழகத்தில் இன்றைக்கு அதுதான் நடப்பில் இருக் கிறது. குடும்ப ஆதிக்கச் சக்திகள் இடையேயான போட்டி, பொறாமையால் -பதவி வெறியால், அரசியலும் அரசு நிர்வாகமும் முற்றிலும் சீரழிந்துவிட்டன. மண்ணில் இருந்து அலைக்கற்றை வரை நாட்டின் அரிய வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் ஆள்வோரின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பங்கு இருக்கிறது. அரசு அதிகாரிகள் யார் உத்தரவுக்கு அடிபணிவது எனத் தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள். 'மதுரை தினகரன் சம்பவம்’ முதல் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ வரை ஒவ்வொரு விவகாரத்தின் ஆணி வேரும் குடும்ப அரசியலில்தான் புதைந்துகிடக்கிறது.

முதலில் முதல்வர் கருணாநிதிதான் இதைத் தன் குடும்பத்திலிருந்து தொடங்கிவைத்தார். பிறகு, அவருடைய அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் அவரைப் பின்பற்றினார்கள். இப்போது தி.மு.க-வின் கிளை அமைப்பு கள் வரை இந்தக் குடும்ப அரசியல் புரையோடி இருக்கிறது. கருணாநிதியால் இதைத் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது. சூத்திரதாரியே அவர்தானே?

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இந்த நிலை உண்டா? தமிழகத்தை இதற்கு முன் ராஜாஜி, ஓமந்தூரார், காமராஜர், அண்ணா என எத்தனையோ பேர் ஆண்டு இருக்கிறார்கள். இதற்கு முன் இதுபோல முன்னுதாரணம் உண்டா? தன்னுடைய தாய் சென்னைக்குத் தன் வீட்டுக்கு வந்தால்கூட, ஓரிரு நாட்களுக்கு மேல் அவரைத் தங்க அனுமதித்தது இல்லை காமராஜர். தன்னுடைய குடும்பத்தின் நிழல்கூட அரசியல் அதிகாரத்தின் மீது படும்படி நடந்துகொண்டது இல்லை அண்ணா. ஆனால், இன்றைக்கு நாட்டுக்கே மோசமான முன்னுதாரணமாக மாறி இருக்கிறார் கருணாநிதி. தமிழகத்தின் கடைக்கோடி கிராம அதிகாரம் வரை தி.மு.க நிர்வாகிகளின் குடும்பஅரசியல் ஊடுருவி இருக்கிறது. மக்கள்வெறுப் பில் இருக்கிறார்கள். வெறுப்புக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வடிகால் இருக்கும்தானே!''

"இருட்டறையில் இருக்கிறது தமிழகம்!"
சாவித்திரி கண்ணன், பத்திரிகையாளர்.

''ஐந்து முறை ஆளும் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் ஒழுங்கில்லாத நிர்வாக மேலாண்மையே, இன்று தமிழகம் மின்தடை காரணமாகப் பெரும்பாலும் இருளில் மூழ்கி இருப்பதற்கு முழுக் காரணம். காமராஜர் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் மின் உற்பத்தி அதிகரித் தது. ஆனால், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அத்தகைய ஏற்றம் இல்லை. காரணம், காமராஜரின் தொலைநோக்குச் சிந்தனை கருணாநிதியிடம் இல்லாததுதான். மின் உற்பத்திக்கான செயல்பாடுகளைத் தொடங்கிய உடனேயே, அதற்கான பலன்கள் கிடைத்துவிடாது. ஐந்தாறு ஆண்டுகள் கழித்துதான் அதன் விளைவுகளை நாம் அனுபவிக்க முடியும்.

மின்சாரத் துறை அமைச்சராக கடந்த ஐந்து ஆண்டுகள் 'செயல்பட்டு’ வந்த ஆற்காடு வீரா சாமியிடம், துறை தொடர்பாக எந்தக் கேள்வியைக் கேட்டாலும், 'தெரியாது’ என்ற பதிலைத்தான் பெற முடியும். மின்சார நிர்வாகத்தைப் பொறுத்த வரை இரண்டு விஷயங்கள் முக்கியமானவை மின் உற்பத்தி மற்றும் மின் பராமரிப்பு. ஆனால், ஐந்து ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் எந்த மின் பராமரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. மின்சாரத் துறையில் நடந்த கரை கடந்த ஊழலும் மின்வெட்டுக்குக் காரணம்.

மின் துறையானது ஊழியர்கள் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. ஆனால், கருணாநிதி 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்’, 'இலவச பம்புசெட்’ ஆகிய கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதிலேயே குறியாக இருக்கிறார். மின்சாரமே இல்லை என்னும்போது, இலவச மின்சாரத்தால் என்ன நன்மை? விவசாய சங்கங்கள், 'எங்களுக்கு இலவச மின்சாரம் தேவை இல்லை. சீரான மின்சாரம் இருந்தாலே போதும்’ என்று தீர்மானம் போட்டு இருக்கின்றன. ஆனால், கருணாநிதி அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

தனியார் வசம் மின் உற்பத்தி விடப்பட்டு இருக்கிறது. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தனியாரும் அரசும் சேர்ந்து செய்யும் மின் உற்பத்திகூட நமக்குப் போதுமானதாக இல்லாமல் இருப்பது ஏன்?

தனியார் மின் உற்பத்தி செய்து அதிக விலைக்கு அரசிடம் விற்பனை செய்யும் அவல நிலை. இதுவரை தமிழக அரசின் மின் வாரியத்தில் இழப்பு மட்டும் 38,000 கோடி. அது போக, மாதாமாதம் 1,550 கோடி இழப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. சுமார் 3,000 மெகாவாட் மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் இருளில் தத்தளிக்கிறது!''

"ஊழலை ஊக்குவிக்கிறது அரசு!"
என்.முருகன், ஐ.ஏ.எஸ்.

''தமிழர்களுக்கு ஊழல் பழக்கமானது அல்ல. காலங்காலமாக ஒழுக்கத்துக்கும் அறநெறிகளுக் கும் முன்னுதாரணமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆனால், இன்றைக்குத் தமிழர்களுக்கு ஊழல் பழக்கமானது அல்ல என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இதற்கு யார் காரணம்?

தமிழ்நாட்டு அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் என்கிற வார்த்தைகள் எல்லாம் புழக்கத்துக்கு வந்ததே, தி.மு.க-வின் வருகைக்குப் பிறகுதான். அதற்கு முன் லஞ்சம், ஊழல் எல்லாம் இல்லவே இல்லையா என்று கேட்டால், இருந்தது! எங்கோ ஓர் இடத்தில், யாருக்கும் தெரியாமல் மிக மிக நுண்ணிய அளவில் இருந்தது. லஞ்சத்தை அதிகாரமாகக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால், கூச்சத்துடன் வாங்கிக்கொள்வார்கள். அப்படி வாங்குவோரும் சமூகத்தில் மிகக் கேவலமாகப் பார்க்கப்பட்டார்கள். இழிவாக நடத்தப்பட்டார்கள். அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிக்க நேர்மையே முதல் தகுதியாக இருந்தது. யாராவது லஞ்சப் புகார் கூறினாலோ, பத்திரிகைகளில் செய்தி வந்தாலோ, கடுமையான நடவடிக்கை இருந்தது. அந்தச் சூழ்நிலைகளை இப்போது கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா?

இன்றைய சூழலில் அரசாங்கம் ஊழல் அதிகாரிகளையே விரும்புகிறது. தாங்கள் சம்பாதிக்க அவர்கள்தான் உதவியாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள் என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். நேர்மையானவர்கள் மதிக்கப்பட்ட காலம் மறைந்து, அவர்கள் கையாலாகாதவர்களாக, கைவிடப்பட்ட வர்களாகப் பார்க்கப்படும் காலமாகிவிட்டது. சட்டம் இயற்றும் இடத்தில் தொடங்கி, ஊடகங்கள் வரை விலைக்கு வாங்கக் கூடியவையாக மாற்றப் பட்டுவிட்டன. இதன் உச்சபட்சம்தான் மக்களையே ஊழல்வாதிகளாக மாற்றியது. கடந்த 5 ஆண்டு கால அரசின் உச்சபட்ச சீர்கேடு இதுதான்!

கிரேக்கத் தத்துவ மேதையான அரிஸ்டாட்டில் ஜனநாயக முறையைக் கடுமையாக எதிர்த்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், 'அறிவற்றவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றால், அவர்கள் எளிதில் விலை போய்விடுவார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளும் அவர்களைப்போலவே எதிர் காலத்தைப்பற்றிச் சிந்திக்கத் தெரியாதவர் களாகவே இருப்பார்கள்’ என்பதுதான். கருணாநிதி அதை உண்மையாக்க முயன்று கொண்டு இருக்கிறார்.

ஆனாலும், தமிழக மக்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை!

"மனித உரிமையின் மறக்க முடியாத களங்கம்!"
ஹென்றி டிபேன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

'' 'ஈரல் கெட்டுவிட்டது’ என்று முன்னர் காவல் துறையைக் காட்டமாக விமர்சித்தவர் கருணாநிதி. இன்று அவரது ஆட்சிக் காலத்தில், காவல் துறை யின் அத்துமீறல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு விட்டது. இவ்வளவுக் கும் காவல் துறையைச் சீரமைக்கும் வாய்ப்பை, 'புதிய போலீஸ் ஆக்ட் கொண்டு வர வேண்டும்’ என்று பரிந்துரைத்ததின் மூலம் ஏற்படுத்தியது நீதி மன்றம். ஆனால், கருணாநிதி அதை நிறை வேற்றவே இல்லை.

தி.மு.க ஆட்சியில் 29 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றது மனித உரிமைகள் வரலாற்றில் மறக்க முடியாத களங்கம். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையார் மனைவிக்குப் பதவி வழங்கிய கருணாநிதி, மேற்கண்ட 29 என்கவுன்ட்டர்கள் குறித்து வாய் திறக்கவே இல்லை. மாறாக, என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு, குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது கொடுமையிலும் கொடுமை.

என்கவுன்ட்டர் சம்பவங்களின்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் பின் பற்றப்படவே இல்லை. அதேபோல, மனித உரிமை ஆணையத்துக்கான தமிழக அரசின் நியமனங்களும் கேலிக்கூத்து. ஆணையத்தின் உறுப்பினர்களாக மனித உரிமைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் நியமிக்கப் படுகின்றனர். மகளிர் ஆணையத்தின் தலைவியாக தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் நியமிக்கப்பட்டார். எம்.எல்.ஏ-வாக ஆக முடியாதவர்களை ஒப்புக்கு உட்கார்த்திவைக்க மகளிர் ஆணையமா கிடைத்தது!

மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு ஊழியர்கள் கொல்லப்பட்டது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது ஏவப்பட்ட போலீஸ் வன்முறை, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் மீதான போலீஸின் முரட்டுத்தனம், உத்தப்புரம் பிரச்னைக்காகப் போராடிய சி.பி.எம் தலைவர்கள் மீதான தாக்குதல், காவல் துறை அதிகாரி வெட்டப்பட்டு உயிருக்குப் போராடியபோது இரண்டு அமைச்சர்களே வேடிக்கை பார்த்த கொடுமை, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் என சட்டம்-ஒழுங்கைக் கையாண்டதில் தி.மு.க அரசின் தோல்விக்கு எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!''

"ஈழத் தமிழர்களைக் கைவிட்டவர் கலைஞர்!"
கொளத்தூர் மணி பெரியார் திராவிடர் கழகத் தலைவர்

''இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை எட்டிய சமயம், தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சி தோன்றியது. இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கருணாநிதி ஒரு மனிதச் சங்கிலி நடத்தினார். தி.மு.க இளைஞர் அணி சார்பாகவும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. ஆயுதங்களைக் கீழே போடுமாறு போராளிகளுக்கு தி.மு.க அறிவுறுத்தியது. புலிகள் சகோதர யுத்தம் புரிந்தததால்தான், தேவையற்ற அழிவுகள் ஏற்பட்டன என்றெல்லாம்கூட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. கருணாநிதி சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ, கனரக ஆயுதங் களைப் பயன்படுத்துவது. இல்லை என்று மாத்திரமே உறுதிமொழி தரப்பட்டதாகக் கூறினார். அதன் பிறகும் தாக்குதல் தொடர்ந்தது. 'மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லையே!’ என்று சப்பைக்கட்டு கட்டினார் கருணாநிதி. சட்டமன்றத்தில் மூன்று முறை இந்தப் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றினார். 'தமிழினம் அழுகிறது’ என்றெல்லாம்கூட தீர்மானம் இயற்றினார். ஆனால், கடுமையான சொற்கள்கூட அந்தத் தீர்மானங்களில் இல்லை. பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இதுதான் கருணாநிதி இந்தப் பிரச்னைக்குச் செய்தவை.

போர் நடந்தபோது வெளியே தெரியாமல், ராணுவ வல்லுநர்களை அங்கே அனுப்பி மறை முகமாக இலங்கைக்கு உதவியது இந்திய அரசு. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு நிலவிய சமயம், அவற்றை மழுங்கடிக்கும் காரியங்களில் தீவிரமாகச் செயல்பட்டு,நினைத்த தைச் சாதித்தார் கருணாநிதி.

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. புலிகளுக்கு மீனவர்கள் உதவுகிறார்கள் என்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது போர் இல்லாதபோதும், இன்று வரையும்கூட மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இதுவரை, தமிழக அரசோ, இந்திய அரசோ, இலங்கை அரசுக்கு இந்த விஷயத்தில் எந்தவொரு அழுத்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. 'இந்தியா நடத்த வேண்டிய போரை நாங்கள் நடத்தினோம்!’ என்று இலங்கை சொன்னது. ஆக, இலங்கையின் அழிவுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி முழு முதல் காரணம், அதை ஆதரிக்கும் கருணாநிதியும் காரணம்!''

"கட்டணக் கொள்ளைக்கு அரசின் அங்கீகாரம்!"
பேராசிரியர் பிரபா.கல்விமணி, கல்வியாளர்.

''தி.மு.க அரசு கல்வித் துறையில் பல சாதகமான விஷயங்களைச் செய்திருக்கிறது. முதலாவதாக, தொகுப்பூதிய ஊழியர்களாக இருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைக் காலமுறை ஊழியர்களாக மாற்றியது. முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து, சமச்சீர் கல்விக்கான விவாதங்களைத் தொடங்கியது ஆரோக்கியமான விஷயம். சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களும் சிறப்பானவை.

தொடக்கக் கல்வியில் செயல் வழிக் கற்றல் முறை கொண்டுவந்ததும் வரவேற்புக்குரிய திட்டம். பொறியியல் கல்லூரிகளில், தமிழ்வழிக் கல்வி அமல்படுத்தப்பட்டது பாராட்டத்தக்க அம்சம். ஆனால், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்கிற தமிழக அரசின் அறிவிப்புதான் குழப்பமானது. தமிழில் படித்தவர்கள் என்றால், பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவர்களா அல்லது கல்லூரியில் தமிழில் பயின்றவர்களா என்ற கேள்விக்கு இதுவரை தமிழக அரசிடம் தெளிவான விளக்கம் இல்லை!

நீதிமன்ற ஆணையின் பேரால் அமைக்கப்பட்டது என்றாலும் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது பாராட்டுக்கு உரியது. ஆனால், அதன் செயல்பாடு இறுதியில் தோல்வியைத் தழுவியது துரதிர்ஷ்டம். தமிழக அரசு நிர்பந்தங்களுக்குப் பணியாமல் கோவிந்தராஜன் பக்கம்தான் நியாயமாக நின்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளை முறைப்படுத்தாது. காரணம், அவற்றை நடத்துவதே இந்தக் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள்தானே! ஓர் உதாரணம் சொல்கிறேன்... திருவண்ணா மலையில் உள்ள அருணை மெட்ரிகுலேஷன் பள்ளி, அமைச்சர் எ.வ.வேலு வுக்குச் சொந்தமானது. எப்போதும் அந்தப் பள்ளி ப்ளஸ் டூ தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சிபெற்று வந்தது. ஆனால், 2008-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ப்ளஸ் டூ தேர்வின்போது, ஐந்து கல்வி அதிகாரிகள் தலைமையிலான பறக்கும் படை காப்பி அடித்த மாணவர்களைப் பிடித்தது. அந்த ஆண்டு பள்ளியின் தேர்ச்சி விகிதம் 60 சதவிகிதமாகக் குறைந்தது. பிறகு, அந்தக் கல்வி அதிகாரிகள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களுக்குத் தூக்கி அடிக்கப்பட்டனர்!

தி.மு.க ஆட்சிக் காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது மோசமான விஷயம். எல்லா அரசுப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தின் தேர்வுகள் உட்பட, அரசுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆனால், ஆசிரியர் நியமனத்தில் மட்டும் சீனியாரிட்டி முறை ஏன்?''

"மணல் கொள்ளையர்கள்தான் வேட்பாளர்கள்!"
தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

''நம் அண்டை மாநிலங்களால் நாம் நீரியல் முற்றுகைக்கு ஆளாகியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நதி நீருக்கான போராட்டங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, மக்களைத் திரட்டிப் போராடுவது. இரண்டாவது, சட்டரீதியாக நீதிமன்றத்தில் போராடுவது. இரண்டு வகைகளிலும் நமக்குத் தோல்வி!

'காவிரிகொண்ட கலைச்செல்வி’, 'காவிரி கொண்டான்’ என்று பட்டங்கள் மட்டுமே ஆட்சியாளர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.ஆனால், நதி நீர் நமக்குச் சொந்தமாக இல்லை. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கிவைத்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு அதை நிறைவேற்றும் துணிச்சல்இல்லை. இதற்குக் காரணம் தேர்தல் அரசியல்தான்.

கர்நாடகாவில் பெங்களூரு நகரத்தை நிர்மாணித்தவர்கள் தமிழர்கள். அந்த மாநில விவசாயிகளுக்கு உழவு சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், கர்நாடக எல்லையோரப் பாசன நிலங்களை தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவன் வாங்க முடியாது என்று கர்நாடகா சட்டம் இயற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே நிலைமையைப் பாருங்கள். தமிழ்நாட்டில் அதிகம் வாங்கப்படுவது கர்நாடகா பொன்னி அரிசிதான். கர்நாடகாவில் விளையும் அரிசிக்கு தமிழ்நாடு சந்தையாக இருக்கிறது. பாலாற்றில் தடுப்பு அணை பிரச்னை நமக்கும் ஆந்திராவுக்கும். ஆனால், ஆந்திரா நெல்லூர் அரிசி தமிழ்நாட்டில் அதிக அளவில் விற்பனையாகிறது. இதற்கெல்லாம் ஏதாவது செய்ததா தமிழக அரசு? ம்ஹூம்... எதுவும் இல்லை!

ஆற்று நீரில்தான் பிரச்னை என்றால் ஆற்று மணலிலும் பிரச்னை. இயற்கை நமக்கு அளித்த கொடையான மணலை யார் யாரோ இன்று லாரிகளில் கொள்ளையடித்துக்கொண்டு இருக் கிறார்கள். தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அந்தக் கொள்ளயர்களில் பலர் வேட்பாளர் களாக நிற்கிறார்கள். கேரளாவில், சமவெளி ஆறுகள் குறைவு. அங்கு மலைப்பாங்கான பிரதேசம் என்பதால், மணல் கிடைப்பது அரிது. அதனால், இங்கே இருந்து மணலை எடுத்துப் போய், அங்கே பணம் குவிக்கிறார்கள். அதற் கும் இங்குள்ள அரசியல்வாதிகள் உடந்தை!

'ஏன் கொள்ளையடிக்கிறாய்?’ என்று தட்டிக்கேட்கும் அதிகாரிகளையும் பொதுமக்களையும் கூசாமல் கொலை செய்யும் அராஜகம் வேறு! தி.மு.க-அ.தி.மு.க என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குப் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் சட்ட விரோதத் தொழில் இந்த மணற் கொள்ளை!''

தொகுப்பு : ரீ.சிவக்குமார், சமஸ், கவின் மலர்

* ஆனந்த விகடன் ஏப்ரல் 6,2011

வைகோ, : - ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? கொடும்பாவி எரிப்பு, மதிமுகவினர் கைது

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்ப சிறப்புடன் வரவேற்கப்பட்டு எக்களிப்போடு வலம் வருகிறார்.

தமிழ் இனத்தின் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய ராஜபக்சே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர், ராஜபக்சேயின் போர் குற்றங்களை விசாரிக்க குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பாயம், ராஜபக்சே அரசு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக் கூடங்களும், குண்டுவீச்சுக்கு தப்பவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்சேவை காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு அழைத்துவந்து, அவருக்கு பாராட்டு கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்து உள்ளது இந்திய அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் ரத்த சொந்தங்களை ஒருவன் அழித்து விட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக் குரல் எழுப்பிய இந்திய அரசு 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு ஒட்டு மொத்தமாக ஈழத் தமிழர் படுகொலையை எதிர்த்து கண்டனமே தெரிவிக்கவில்லை தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?

இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால் தான், இந்திய அரசு இப்போதும் இலங்கை அதிபரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவ தோடு இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: மதிமுகவினர் கைது

மும்பையில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுகவினர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

கோவை காந்திபுரம்û பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் இலங்கை அதிபருக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சேவின்உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து கிருஷ்ணசாமி உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை கிரிக்கெட் போட்டியை காண்பற்கு இந்திய அரசு அழைத்திருப்பது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் தெரிவிததனர்.

அழகிரி மீது பொய்வழக்கு மாவட்டஆட்சியர் சகாயம் நிர்பந்தம் தேர்தல் அதிகாரி புகார் .

மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு எதிராக பொய் வழக்கு போட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் கெடுபிடி செய்து வருவதாகவும், தொடர்ந்து தன்னை நிர்பந்திப்பதாகவும், மதுரை மாவட்ட கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்தி மீதும் பொய் வழக்கு போட தொடர்ந்து மதுரை மாவட்டஆட்சித் தலைவர் சகாயம் நிர்பந்திக்கிறார். என்றும் மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயத்தின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும், அவரின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்கு, முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று தலைமைச் செயலாளர்க்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - ராஜபக்சே

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

மும்பையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார்.

அவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ராஜபக்சே கோவிலுக்கு சென்றதும் மத்திய போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை அழைத்து சென்றனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராஜபக்சேவுக்காக பக்தர்களை தடுத்து வைத்த கோயில் நிர்வாகம்

வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ராஜபக்சே நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். ராஜபக்சே சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் கருவறையைச் சுற்றி வந்தார். தரிசனத்திற்கு பிறகு ராஜபக்சேவுக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ராஜபக்சே ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ.55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார்.

இந்தியா தோற்க ஏழுமலையானிடம் வேண்டுதல்!

பின்னர் ராஜபக்சே நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை.

இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலையானை வேண்டினேன்.

ஆந்திர முதல்வரும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எனக்கு தேவையான உதவிகளை செய்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...", என்றார்.

பின்னர் அவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் அவருக்கு ஏழுமலையான்- பத்மாவதி தாயார் உருவ படங்களை பரிசாக வழங்கினார். இருவரும் சுமார் 30 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

சென்னையில் 5ம் தேதி கருணாநிதியுடன் சோனியா பிரசாரம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 5ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் சென்னையில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதுவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன் உள்ளிட்டோர் தான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகவும் திமுக கூட்டணிக்காகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சோனியா பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது.

அதேபோல பாஜக தரப்பில் அத்வானியோ அல்லது முக்கிய தலைவர்களோ தமிழகம் பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சுஷ்மா சுவராஜ் மட்டுமே வந்து சென்றனர். அவரது பிரச்சாரமும் தமிழக வாக்காளர்களிடம் எடுபடவில்லை.

இந் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய சோனியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி சென்னை வரும் அவர் அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் கருணாநிதியும் இக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கருணாநிதி இன்று வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார். நாளை ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள் வட சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி தென் சென்னை தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் தென் சென்னையில் சோனியாவுடன் ஒரே மேடையில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா வருகையையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மும்பையில் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் கைது.

மும்பையில் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண வந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவி்த்து அவரது உருவப் படத்தை எரி்த்த நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியைக் காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இன்று திருப்பதியில் இருந்து அவர் மும்பை செல்கிறார்.

இந்த நிலையில் 500 இந்திய, தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மும்பை நாம் தமிழர் கட்சியினர் இன்று பெரிய அளவிளான போராட்டத்தை நடத்த தயாராகி வந்தனர். அதற்கு முன்பாக மும்பை தாராவி பகுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவப்படத்தை எரித்தனர்.

இதனால் மும்பை நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் ராசேந்திரன், சேலம் செல்லதுரை மற்றும் விழித்தெழு இயக்கத்தைச் சேர்ந்த சிரிதர் ஆகியோர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் கைது செயப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போர்குற்றவாளி ராஜபக்சேவை அணைத்து வழிகளிலும் தொடர்ந்து காப்பாற்றி வரும் இந்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கையே இந்த கைது நடவடிக்கை என்று கருதப்படுகிறது. மராட்டிய மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

mass-injection வகை வைரஸ் எச்சரிக்கை.

இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை மீண்டும் mass-injection வகை வைரஸ் மோசமாக தாக்கி வருவதாக computerworld, websense

ஆகியவற்றில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தவிர்ப்பது எப்படி?

1. தேவையில்லாத எந்த இணைப்புக்களையும் கிளிக் செய்ய வேண்டாம்.

2. கணினியை ஸ்கான் செய்ய வேண்டும் என்று கூறும் எந்தவித புதிய டூல் இணையத்தளம், மென்பொருளை இயக்கவேண்டாம். உடனே மூடிவிடுங்கள்.

3. அவ்வாறு செய்ய அனுமதிக்க வில்லையாயின் கணினியின் மின் இணைப்பை துண்டித்து மீண்டும் தொடங்குங்கள்.


http://ww5.4tamilmedia.com/index.php/knowledge/useful-links/3715--mass-injection-

மயங்கி விழுந்த பெண்கள்... கண்டுகொள்ளாமல் போன ஜெயலலிதா!

வேலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்துக்காக பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட பெண்கள் பலர், கொளுத்தும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். ஆனாலும், அதைக் கண்டு கொள்ளாத ஜெயலலிதா, எழுதி வந்ததைப் படித்து முடிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அவரது இந்த செயல் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியைத் தந்தது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ளது கோடியூர். இங்கு ஜெயலலிதா இன்று பகல் 11 மணிக்கு பிரச்சாரத்துக்கு வருவார் என்று கூறியிருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் கடுமையான வெயில். தமிழ்நாட்டிலேயே கோடையில் அதிக வெயில் கொளுத்துவது வேலூர் மாவட்டத்தில்தான்.

எனவே மக்கள் வராமல் போனால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்க வேண்டி வரும் என்று கருதிய அதிமுக நிர்வாகிகள், பணம் கொடுத்து ஏராளமானோரை அழைத்து வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இந்த மாவட்டத்தில் விவசாயம் முற்றாகப் பொய்த்துவிட்டதால், இந்த மாதிரி கட்சி கூட்டங்களுக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் கிராமத்துப் பெண்களும்.

தி்ருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையின் இருபுறத்திலும் கூட்டம் கூட ஆரம்பித்தது. ஆனால் ஜெயலலிதா மட்டும் வரவேயில்லை. நேரமாக ஆக வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. மாலை 4 மணிக்கு ஆடி அசைந்து வந்தது ஜெயலலிதாவின் பிரச்சார வேன். இந்த வேனில் நின்றபடி (தலைக்கு மேல் குட்டி கூரை போடப்பட்ட வேன்... அம்மாவுக்கு வெயில் ஆகாது!) எழுதி வைத்திருந்ததைப் படித்துக் கொண்டே வந்தார்.

ஆனால் பணம் வாங்கிக் கொண்டு ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு ஆள்பலம் காட்ட வந்த பெண்கள் வெயில் தாங்க முடியாமல் மயங்கி சுருண்டு விழ ஆரம்பித்தனர். நெரிசல் தாங்காமல் பல பெண்கள் மயங்கி விழுந்து கூக்குரலிட்டனர். பலரது சேலைகள் கிழிந்தன. ஜெயலலிதாவின் பிரச்சார வேனுக்கு அருகிலேயே இவ்வளவும் நடந்தாலும், எழுதி வைத்ததைப் படிப்பதிலிருந்து கண்களை கடைசிவரை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திருப்பவே இல்லை.

ஒருவழியாக படித்து முடித்தவர், வாக்காளர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், பிரச்சார வேனில் விருட்டென்று போய்விட்டார் அவர். பணம் கொடுத்த கட்சிக்காரர்களும் காணாமல் போக, கூடியிருந்த மக்களே மயங்கிக் கிடந்த பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து தெளியவைத்தனர்.

பிரச்சாரத்துக்கு வந்த பலரும் ஜெயலலிதாவின் இந்த இரக்கமற்ற செயலை நேரில் பார்த்து அதிர்ந்தனர். ஜெயலலிதாவை கண்டபடி அர்ச்சனை செய்தபடி வீடு திரும்பினர்.

தி.மு.க. கூட்டணியை வீழ்த்த சூழ்ச்சி : சேலம் கூட்டத்தில் கலைஞர் பேச்சு.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுகிறது என்று சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் பேசினார்.

01.04.2011 அன்று மாலையில் சேலம் போஸ் மைதானத்தில் பிரமாண்டமான தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த மேடையில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்த மாவட்டத்தில் கழகத்தை கட்டிக்காக்கும் தளபதியாக விளங்கும் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் பேசும்போது நம்முடைய கூட்டணி பயணத்தில் நாம் வெற்றிப்பாதையில் வெற்றியை நெருங்கிவிட்டோம் என்று ஒரு கருத்தை தெரிவித்தனர்.

இந்த நேரத்தில் தி.மு.க. ஒரு எமர்ஜென்சியை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை மீண்டும் வந்துவிட்டது போன்ற சூழ்நிலையை தமிழ்நாட்டில் காண்கிறோம்.

அன்று இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையால் யார், யார் சிறை சென்றார்கள், யார், யார் சித்ரவதையை அனுபவித்தார்கள். எழுத்து உரிமை, பேச்சு உரிமை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்றெல்லாம் விலாவாரியாக இந்திரா காந்தியிடம் எடுத்துக் கூறினோம்.

அதைக்கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவசர நிலையை பிரகடனப்படுத்தியது மட்டும்தான் நான். அந்த கால கட்டத்தில் அதிகாரிகள் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நான் கண்காணிக்கவில்லை. அதற்காக நான் இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் வருத்தம் தெரிவித்தார்.

இன்று அப்படி ஒரு நெருக்கடி நிலை தி.மு.க.வுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இங்கு அமர்ந்துள்ள தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு காவல் துறையினரால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்படுகிறது. அல்லது அறவே விலக்கப்படுகிறது.

அவராவது மாநில அமைச்சர் ஆவார். ஆனால் மத்தியில் அமைச்சராக இருக்கும், மதுரை மாவட்டத்தில் களப்பணியில் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தம்பி மு.க. அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது.

சாதாரணமான ஒரு மனிதன் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று அரசிடமோ, அல்லது மேல்மட்ட அதிகாரிகளிடமோ முறையிட்டால் போதும், அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்தால், அரசும், அதிகாரிகளும் அந்த மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது கடமையாகும்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் மதுரையில் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அறவே விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு அதிகாரிகளை நான் கேட்கிறேன். உங்களுக்கு இந்த உத்தரவை வழங்கியது யார்? நாடாளும் பொறுப்பில் இருப்பவர்களா? நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பிரதமரா? இல்லை. இவர்களுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருப்பது யார் என்று எனக்கு தெரியும்.

நான் பார்க்கின்றேன். ஒரு கூட்டத்துக்கு 100 போலீசார், 200 போலீசார் என்று பாதுகாப்புக்கு வருகிறார்கள். ஒரு முதல் அமைச்சர் எதிர்க்கட்சிக்காரன் பேசுகின்றதுபோல் பேச வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கி இருக்கிறார்கள் என்றால், நான் உங்களை எல்லாம் கேட்கிறேன். என்னை கடந்த காலத்திலே முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தீர்களே. அது தவறு என்றுதான இன்றைக்கு உள்ள அதிகாரிகள், குறிப்பாக போலீஸ் துறை அதிகாரிகள் இத்தகைய நிலையை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகம், தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எடுத்துச் சொன்னதைப்போல், தன்னுடைய கொள்கையை, லட்சியத்தை, யாரிடத்திலும், எவரிடத்திலும், என்றைக்கும் அடமானம் வைத்துவிட்டு தான் வாழ வேண்டும் என்று நினைக்கும் கட்சி அல்ல.

நாங்கள் பார்க்காத எமர்ஜென்சியா? நாங்கள் பார்க்காத நெருக்கடியா? நாங்கள் அனுபவிக்காத சித்ரவதையா? இன்றைக்கும் சேலம் மாவட்டத்தினுடைய செயலாளராக இருக்கின்ற ஆறுமுகத்தை என்னபாடுபடுத்தியது நெருக்கடி கால கொடுமைகள் என்பது எனக்கு தெரியாததா?

இன்றைக்கு துணை முதல் அமைச்சராக பவனி வருகின்ற மு.க.ஸ்டாலின் நெருக்கடி காலத்திலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்னமும் உடல்நலம் குணமாகவில்லை என்று இரவில் புலம்பிக் கொண்டிருக்கிறார். எனவே நெருக்கடிகளோ, சித்ரவதைகளோ எங்களுக்கு புதியது அல்ல.

இந்த நெருக்கடிகளும், சித்ரவதைகளும் எங்களை வளர்த்தது. இன்னமும் எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் தி.மு.கழகத்தை வீழ்த்திவிட பல முனைகளிலும், எல்லா வகையான உபாயங்களிலும், எதிர் அணியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுகூட கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

கருத்துக்கணிப்புகளின் லெட்சணம் என்னவென்று நமக்கு தெரியும். முன்புகூட கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணிக்கு, தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்கள் கூட கிடைக்காது என்றுதான் கணித்தார்கள்.

ஆனால் எத்தனை இடம் கிடைத்தது என்றும், இன்றைக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு அந்த கூட்டணி அன்றைக்கு வெற்றி பெற்றதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

எனக்கு தெரியும், எப்போதும் எந்தெந்த கருத்துக்கணிப்பாளர்கள், இந்த தேர்தலிலே, இந்த புள்ளி விவரங்களை சொல்லி, கருத்துக்கணிப்பு வெளியிடுகிறார்கள் என்று எனக்கு தெரியும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வெளியிட தயாராக இருக்கிறேன்.

தி.மு.க. கூட்டணி, வெற்றி பெறுவதற்கு வழி இல்லை என்று கருத்துக்கணிப்பாளர்களை விட்டு, எழுதச் செய்கிறார்கள், பேசச் செய்கிறார்கள். வெளியிடச் செய்கிறார்கள். நான், அவர்களை நுண்ணிய நிலையில் உணர்ந்துப் பார்த்தேன். யார், யாரை இது சம்பந்தமாக தொடர்பு கொண்டால் உண்மைகள் வெளியில் வரும் என்று அந்த வழிமுறைகளை கையாண்டு பார்த்தேன்.

ஒன்றுமில்லை, தேர்தல் களத்திலே இருக்கின்ற அந்த தலைவர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த நண்பர்கள், தேர்தலில் பணம் செலவழிப்பது ஒரு புறம் இருக்கட்டும். தேர்தலிலே மக்களுக்கு தி.மு.க. கூட்டணி மீது ஒரு நம்பிக்கை இன்மையை உருவாக்குவோம் என்று திட்டமிட்டு, அதற்கான ஆட்களைப் பிடித்து, பெரிய பெரிய பத்திரிகையாளர்கள், ஏற்கனவே பெயர்களை கெடுத்துக்கொண்டவர்கள் ஆகியோர் எல்லாம் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, நாம் ஆட்சிக்கு வந்தால், அடித்தட்டு மக்களுக்கு நன்மைகள் செய்வோம், நாம் ஆட்சிக்கு வந்தால் சாக்கடைகளில் உழன்று கொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு நன்மைகள் செய்வோம், திட்டங்களை நிறைவேற்றுவோம், தீமைகளை வீழ்த்துவோம், நாம் ஆட்சிக்கு வந்தால் உயர்ந்து உயர்ந்து கொண்டே போகின்ற செல்வந்தர்களுக்கு வாழ்வளிக்க மாட்டோம், ஓலைக்குடிசையிலே, ஒண்ணரை சான் பாயிலே படுத்து உறங்குகின்ற உழைப்பாளிகளுக்கு வாழ்வளிப்போம். ஆகவே இவர்களுடைய ஆட்சியில் நம்மைப்போன்ற, பூர்ஷ்வாக்களை காப்பாற்றாது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற இவர்களின் தாரக மந்திரம், இவர்களின் மூல மந்திரமாக இருக்கின்ற காரணத்தால், மக்கள் மனதிலே இவர்கள் பெற்றிருக்கின்ற நம்பிக்கை குலைந்து, வீழ்த்திவிட வேண்டும் என்று பஞ்சாங்கம் பார்க்கிறார்கள். பத்திரிகைகளிலே பொய்கள் எழுதுகிறார்கள்.

தயவு செய்து இங்கே குழுமியிருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்தகைய ஜோசியங்களை, இத்தகைய கருத்துக்கணிப்புகளை நம்பமாட்டீர்கள், நம்ப வேண்டாம் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

திருமணம் முடிவாகி, நாள் பார்த்து, பத்திரிகையும் அடித்து, எல்லோரும் வாருங்கள் மணமக்களை வாழ்த்த என்று அழைப்பும் விடுத்துள்ள நிலையில், யாரோ ஒரு பொறாமை கொண்ட மனிதர், ஒரு அய்யர், இந்த பெண்ணுக்கும், இந்த பையனுக்கும் திருமணம் நடந்தால் அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்காது என்று சொல்லி, திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் இன்றைக்கு கருத்துக்கணிப்புகளை சிலர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என்று, நம்பி கெடாதீர்கள் என்று நான் தமிழ்நாட்டு மக்களை, மிகுந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் நிறைவேற்றி, நிறைவேற்ற இருக்கின்ற திட்டங்களை சொல்லி, உங்களிடத்தில் வாக்குகளை கேட்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் எதை சொல்லி வாக்கு கேட்கிறார்கள். கருணாநிதி யார் தெரியுமா? ஒரு காலத்தில் ஓசி ரெயிலில் சென்னைக்கு வந்தவர் என்று என்னை இகழ்ந்துரைக்கிறார்கள். நான் அதை இகழ்ச்சியாக கருதவில்லை.

ஏனென்றால், ரெயிலிலே ஓசி ரெயிலிலே சென்னைக்கு வந்தவனா, இல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். ஏதோ நான் ஓசி ரெயிலில் பயணித்து வந்தவன் என்பது போலவும், என் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் அந்த அம்மையார் இருந்தவர் போலவும் மக்களிடத்திலே பிரசாரம் செய்வது நாகரீகமாகாது. பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்தால் அதற்கு நான் கூடத் தேவையில்லை. இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒரு சாதாரண தொண்டன் இதற்கு பதில் அளிப்பான்.

ஆனால் இதுபோன்ற தேர்தல் காலங்களில் ஒருவருடைய தனிப்பட்ட நிலைமைகளை இழிவுபடுத்தி பேசுவது முறையல்ல என்பதை, நான் தந்தை பெரியார் இடத்திலே கற்றுக்கொண்டவன். ஆகவேதான் அந்த நிலைக்கு செல்ல விரும்பவில்லை.

நான் சேலத்துக்கு வந்தால், எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் எல்லாம் எடுத்துக் கூறியதைப்போல சேலத்தினுடைய பெருமைகள் என்ன? சேலத்தினுடைய புகழ் என்ன? சேலத்துக்கு தேவையான கோரிக்கைகள் என்ன, அதனை நிறைவேற்ற வழிமுறைகள் என்ன என்பதை உங்களோடு விவாதித்து முடிவுகள் செய்வதுதான் நாகரீகமான அரசியலாகும்.

தயவு செய்து இங்கே அமைதியாக இருந்தால் நான் சொல்ல வேண்டியவைகளை அமைதியாக சொல்ல முடியும்.

ஏனென்றால் நான் இன்றைக்கு இந்த மேடைக்கு வந்திருப்பதே, வரக்கூடிய நிலையில் இல்லை. இருந்தாலும் வந்தேன். காரணம், இன்று மாலை 4 மணிக்கெல்லாம் என்னுடைய மூத்த மகன் மு.க.முத்து, ஒரே கடுமையான நிலையிலே உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையிலே அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் பிழைப்பது கேள்விக்குறி என்ற நிலையிலே மருத்துவர்கள் சொல்லி, அதன்பிறகு நான் என் மனதை திடப்படுத்திக்கொண்டு, உங்களைவிட என் மகன் பெரிதல்ல, உங்களைவிட என் குடும்பம் பெரிதல்ல என்று எண்ணித்தான் இன்றைக்கு மேடைக்கு வந்திருக்கிறேன். எனவே நீங்கள் என்னோடு அமைதிகாத்து, நான் சொல்லுகின்ற செய்திகளையெல்லாம், நெஞ்சிலே தேக்கி வைத்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்று சிலவற்றை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.

சத்துணவில் தி.மு.க. ஆட்சியில் முதலில் ஒருமுட்டை வழங்கப்பட்டது. அடுத்து வந்த அம்மையார் ஆட்சி அதை நிறுத்தி விட்டது. இப்போது சாமானிய குழந்தைகளும் உடல் வலுவாக இருக்க ஒரு முட்டை என்பதற்கு பதிலாக 3 முட்டை, 5 முட்டை என வாழைப்பழமும் சேர்த்து வழங்கப்படுகிறது. முட்டையை நிறுத்திய ஆட்சி வேண்டுமா? என பார்க்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளிவந்தது. அது மக்களின் மனம் கவர்ந்தது. முந்தைய தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டது கதாநாயகன். இந்த தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டது கதாநாயகி. கதாநாயகன் கதாநாயகி இருக்கும்போது, வில்லன்களாக வந்தவர்கள் கழகத்தின் வெற்றியை தடுத்திட என்னென்னவோ செய்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது. அச்சமாக உள்ளது. சட்டசபையில் எனக்கு என்ன நடக்குமோ? என் தலை என்னவாகுமோ?. தம்பி வீரபாண்டி போன்றவர்கள் அருகில் இருக்கும்போது எனக்கு ஏன் அச்சம். அரசியல் நாகரீகம் அசிங்கமாகி விட்டது. இதற்கு அதிகாரிகளும் உடன்படுகிறார்கள்.

அதிகாரிகளை சொல்கிறேன். போலீஸ் அதிகாரிகளை கூறுகிறேன். நான் ஆட்சிக்கு வந்தபோது போலீஸ் இலாகாவில் மாதம் ரூ.80 சம்பளம் பெற்று வந்தனர்.

நான் நடத்திய உதயசூரியன்' என்ற நாடகத்தில் ஓரங்க காட்சி நடத்தப்பட்டது. போலீஸ்காரர் மனைவியிடம் பேசினார். இதுதானா சாப்பாடு?. தொட்டுக்க ஒன்றும் இல்லையா என கேட்டார். இதுதான் இருக்கு என மனைவி சொன்னார்.

இந்த நிலைமாறி இன்றைக்கு எத்தனை ஆயிரங்கள் பெறுகிறார்கள். எங்களை பார்த்து அவர்கள் கம்பை தூக்குகிறார்கள். எங்கள் கார் வழியை மறிக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து உள்ளே வரவும், வெளியே வரவும் எங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதன் முதலில் போலீசாரின் நல்வாழ்வுக்காக கமிஷன் அமைத்தது தி.மு.க. ஆட்சிதான். பின்னர் நாங்கள் மீண்டும் பொறுப்பேற்றதும் போலீஸ் உரிமைகள் பெற 2 வது கமிஷன் அமைத்ததும் தி.மு.க. ஆட்சிதான். இப்போது 3 வதாகவும் கமிஷன் அமைத்து வசதி வாய்ப்புகளை, கேட்பவற்றை வழங்க பரிந்துரைத்தது இந்த கருணாநிதிதான். இதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் பொறுப்பேற்று செய்தது. அந்த போலீஸ் கம்பு என்னையே, என்னுடைய தோழர்களை, எங்களையே தாக்கி சிறையில் தள்ளுகிறது என்றாலும் வருத்தப்பட மாட்டேன், பொறுமை இழக்க மாட்டேன். காலம் மாறும், பதில் கிடைக்கும்.

நான் நம்புவது கடவுளையோ தெய்வத்தையோ அல்ல. நான் நம்புவது உங்களைத்தான். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம் என பேரறிஞர் அண்ணா சொன்னார். அவர்களுக்கு வாழ்வளிப்போம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியதை எதிரொலிப்போம். தொடர்ந்து அதே பாணியில் பாடுபடுவோம்.

எங்கள் கொள்கையில், லட்சியங்களில் சிறு மாசு ஏற்பட்டால் கூட இந்த உயிர் இருக்கிறவரை விடமாட்டேன்... விடமாட்டேன் எனக்கூறி விடைபெறுகிறேன். வணக்கம். இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் பேசினார்.