Saturday, April 2, 2011

தற்கொலைக்கு தூண்டப்பட்ட மதுரை தேர்தல் அதிகாரி


மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போட வற்புறுத்துகிறார்; மதுரை கலெக்டர் மீது கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி புகார்

மதுரை கோட்டாட்சியரும், மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியுமான சுகுமாறன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் மதுரை கோட்டாட்சியராகவும், கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறேன். இந்த தொகுதியில் நேர்மையாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைத்து இருந்த என்னை மதுரை கலெக்டர் சகாயம் கடந்த 3 நாட்களாக என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் நேரில் அழைத்தும் பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சகாயம் என்னை வற்புறுத்தினார்.

ஆனால் நான் அவரிடம் தேர்தல் விதிமுறையை மீறாத அவர்களிடம் எப்படி வழக்கு போட முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் பொய் வழக்காவது போடுங்கள் என்று என்னை வற்புறுத்தினார். இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கடந்த 3 நாட்களாக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சுவலியும் வந்து விட்டது.தொடர்ந்து இதேநிலை நீடித்தால் நான் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக நான் பணி செய்ய விரும்ப வில்லை. என்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் சுகுமாறன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் அதிகாரி சுகுமாறன் நெஞ்சுவலி காரணமாக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சுகுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரை கலெக்டர் சகாயம் நேர்மையாக தேர்தல் பணி செய்ய விடாமல் என்னை டார்ச்சர் செய்து வருகிறார். மு.க. அழகிரியை சந்தித்தீர்களா? மூர்த்தியுடன் என்ன பேசினீர்கள் என்று கேட்கிறார். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்தது முதல் நான் அழகிரியை சந்திக்கவில்லை.

மூர்த்தியை வேட்பு மனு தாக்கலின் போதுதான் அதிகாரி என்ற முறையில் மனுவை பெற்றுக் கொண்டேன். ஆனால் இவர்களுக்கு எதிராக செயல்படும்படி வற்புறுத்துகிறார். அவர் சொல்லும்படி நடக்கா விட்டால் தலைமை தேர்தல் கமிஷனிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுகிறார். இதனால் நான் தற்கொலை செய்ய தூண்டப்பட்டு உள்ளேன்.

எனக்கு ஏதாவது ஏற்பட்டு என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற பயம் வந்துள்ளது. எனவே கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை கலெக்டர் மீது தேர்தல் அதிகாரியே புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது





மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பணம்-லஞ்சம் பெற்றுக் கொண்டு வாக்கு அளிக்க கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சகாயம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தேர்தல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த வரையில் தேர்தல் அதிகாரியுமான நான், போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு, வருவாய் அலுவலர்கள் ஆகியோர் சிறப்பாக தேர்தல் பணியை செய்து வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள்.

பணம், லஞ்சம் பெறாத வாக்களிப்பு உரிமையை இந்த முறை மக்கள் சந்திக்க வேண்டும். இந்திய நாட்டின் மிகவும் சிறப்பானது ஜன நாயகம்தான். அச்சாணியாக உள்ள தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும். மதுரை மக்கள் நேர்மையானவர்கள். பணம் வாங்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மீதும் பொய் வழக்கு போடச் சொல்லி தேர்தல் அதிகாரி சுகுமாறனிடம் நீங்கள் நிர்பந்தம் செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளாரே?

பதில்:- அப்படி நான் செய்வேனா? அவர் கூறுகிற மாதிரி நான் அவரிடம் பேசவில்லை. தேர்தல் பணியை கவனிக்க கூட நேரம் இல்லாத நிலை எனக்கு உள்ளது.

கே:- தேர்தல் அலுவலர் சுகுமாறனை நீங்கள் டார்ச்சர் செய்ததாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறியும் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாரே?

ப:- அவர் சொல்வது முழுக்க ... முழுக்க பொய். அரசு ஊழியராக இருந்து கொண்டு மேல் அதிகாரி மீது புகார் கூறுவது ஒரு மோசமான நிலை.

கே:-தேர்தல் அதிகாரி பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சுகுமாறன் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாரே?

ப:-எப்போது கடிதம் அனுப்பினார் என்பது எனக்கு தெரியாது.

கே:- ஆளும் கட்சிக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் கூறுகிறார்களே?

ப:- என் மீது கட்சி சாயம் பூசாதீர்கள். நேர்மையாகவும், நடுநிலையோடும், நியாய மாகவும் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

கே:- தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதா?

ப:-இதுவரை எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments: