Saturday, April 2, 2011

தேர்தல் பத்து பிரச்னைகளை பத்துப் பேர் அலசுகிறார்கள்!

கூட்டணிக் கணக்குகள், கவர்ச்சித் திட்டங்கள், இலவச அறிவிப்புகள் என அரசியல்வாதிகள் ஆயிரமாயிரம் கணக்குகள் போட்டாலும், பிரச்னைகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. தி.மு.க அரசின் 5 ஆண்டு கால நிர்வாகம் எப்படி? எந்தெந்தப் பிரச்னைகள் இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கும்? பத்து பிரச்னைகளை பத்துப் பேர் அலசுகிறார்கள்!

"விவசாயி கையில் விவசாயம் இல்லை!"
நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

''தமிழக விவசாயிகளைப் பொறுத்த அளவில், தொடர்ந்து அமையும் எல்லா அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த ஆட்சியிலும் அது தொடர் கதை தான்!

ஜீவாதார நதி நீர்ப் பிரச்னைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இருக்கும் நீர்நிலைகளும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என்ற பெயரில் மேற்கொண்டு வரும் ராட்சசத் திட்டங்களுக்காக ஏரி, குளங்களைக் காவு வாங்கிவிட்டார்கள். சாலை ஓரம் இருந்த விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆசாமிகளால் சூறையாடப்பட்டு, வடிநிலங்களான தரிசுகளும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன.

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,737 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. அரசாங்கம், இந்த எண்ணிக்கையை வெறும் '3’ என்று சொல்கிறது. எண்ணிக்கையை மறைக்கலாம்... பிரச்னையை?

எந்த விஷயத்தையும் இந்த அரசாங்கம் விவசாயிகள் நலக் கண்ணோட்டத்தோடு பார்க்காது என்பதற்கு பனையேறிகள் பிரச்னையே உதாரணம். கோடிக்கணக்கான தென்னை, பனை மரங்கள் இருக்கின்றன தமிழகத்தில். தென்னம்பால், பனம்பால் (கள்) எடுக்க அனுமதித்தால், லட்சக்கணக்கான விவசாயிகள், பனையேறிகள் பயனடைவார்கள். ஆனால், விவசாயிகளின் நலனைவிட, சாராய அதிபர்களின் நலன்தான் முக்கியமாகப் படுகிறது ஆட்சியாளர்களுக்கு!

இயற்கைச் சீற்றங்களில் பறிகொடுத்து, உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பறிகொடுத் தது போக, இப்போது நிலத்தையும் பறி கொடுத்துக்கொண்டு இருக்கிறான் விவசாயி. போராடிப் போராடி அவன் ஓய்ந்துவிட்டான். இப்போது அவன் மௌனமாக இருக்கிறான். அது புரட்சியாக வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை!''

"இலவசங்கள் இழுக்கு!"
எம்.ஆர்.வெங்கடேஷ், தணிக்கையாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆய்வாளர்.

''அத்தியாவசியப் பொருட்களை வாங்க வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியோ அல்லது கலர் டி.வி-யோ, பெரிய உதவியாகத் தான் இருக்கும். நல்லாட்சிக்கு இடையே இலவசங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 'இலவசம்’ என்ற போர்வை யில் ஜனநாயகத்தையே பாழாக்கிவிட்டது அரசு. 4,000 கோடிகளை கலர் டி.வி-க்கென ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தப் பணத்தை நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வேனும் எட்டப்பட்டு இருக்கும்.

ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறது அரசு. சுதந்திரத்துக்குப் பிறகு, 65 ஆண்டுகளாக இன்னும் தங்களை ஏழைகளாகவே வைத்திருப்பதால் மக்களின் கோபம் அரசின் மேல் திரும்பி விடாமல் இருக்க, வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துகிறது அரசு. இதனால் நிகழ்ந்த தீமையின் விளைவு... வாக்களிப்பதற் குக்கூடப் பொதுமக்கள் அன்பளிப்பை எதிர்பார்க்கிறார்கள். தேசத்தை சுபிட்சம் ஆக்குவதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. சட்டம் - ஒழுங்கு, விவசாயம், தொழில், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு இடம் இல்லாத தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் மட்டுமே பிரதான இடம் பிடித்து இருப்பதைச் சாபக்கேடு என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வது?

2007 தேர்தலின்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை வைத்தே தனது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்து இருந்தது. ஆனால், அங்கே மக்கள் தெளிவாக காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் மண்ணைக் கவ்வ வைத்தார்கள். அந்தத் தெளிவு இங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறதா? தொலை நோக்குடன் மக்களின் துயர் துடைப்பதற்கென அறிவிக் கப்படும் திட்டமாக இருந்தால், பொருளாதாரச் சுமையையும் கருதாமல், அதை வரவேற்கலாம். ஆனால், வாக்குகளை மட்டுமே குறி வைத்து அளிக்கப்படும் இலவசங் களால் ஜனநாயகத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுவதோடு, அந்தப் பொருளாதாரச் சுமை பிற்காலத்தில் பொதுமக்களின் மீதேதான் சுமத்தப் படுகிறது.

ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். அரசிடம் இலவசம் பெற்ற 'நன்றி உணர்ச்சி’யினால், மக்களும் ஊழல்வாதிகள் ஆவது, தேசத்துக்கே பெரும் அவமானம்!''

"விலைவாசியைக் குறைப்பதில் அக்கறை இல்லை!"
த.வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர்.

''விலைவாசி உயர்வுக்கான காரணம் மத்திய அரசுதான் என்று மாநில அரசும், மாநில அரசு தான் என்று மத்திய அரசும் மாறி மாறிக் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் இரண்டு அரசுகளுக்கும் அக்கறை இல்லை என்பதே உண்மை. உணவு உற்பத் தியை முறையாகத் திட்டமிடவில்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுச் சக்திகளும், உள்நாட்டுப் பண முதலைகளும் கொள்ளை அடிக்க வழிவகை செய்து கொடுக் கின்றன மத்திய-மாநில அரசுகள்.

பூண்டு ஒரு கிலோ 30-க்கு விற்ற சமயத்தில், அதை விளைவித்த விவசாயிகள் பூண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அப்போதே அரசு தக்க நடவடிக்கைகள் மூலம் நிலைமையைச் சீர் செய்யாததால், இந்த ஆண்டு பூண்டு விலை ஒரு கிலோ 300. இப்போதும் அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை. ஆன்லைன் வர்த்தக சூதாட்டத்தினால்தான், இப்படி விலைவாசி விண்ணைத் தொடுகிறது என்பது ஆட்சியாளர் களுக்கும் தெரியும்.

வெங்காயத்தை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அரசு ஏற்றுமதி செய்தது. அதன் பின் இங்கே வெங்காயத்துக்குத் தட்டுப் பாடு வந்தவுடன், மீண்டும் அதிக விலை கொடுத்து அதே வெங்காயத்தை அங்கே இருந்து இங்கு இறக்குமதி செய்கிறது. நாம் இளிச்சவாயத்தனமாக சாலை வழியாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்தால், பாகிஸ்தான் விவரமாகக் கப்பலில் நமக்கு அனுப்புகிறது.

முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதால் பருப்புக்கு மட்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் தடை விதித்தது மத்திய அரசு. அதனால், பருப்பு விலை மட்டும் இன்று வரை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதேபோல, மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை போன்றவற்றுக்கும் ஆன்லைன் வர்த் தகத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பிரதமருக்கு ஏன் நம் முதல்வர் கடிதம் எழுதவில்லை?

உள்நாட்டில் தேவைக்கு அதிகமான உற்பத்தி இருக்கும்போது, வெளிநாட்டில் இருந்து அதே பொருளை விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக இறக்குமதி செய்வதும், வெளிநாட்டில் அதிக விலைக்குக் கேட்கிறார்கள் என்பதற்காக, நமக்கே தட்டுப்பாடாக இருக்கும் ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதும் கூடாது என்றார் மகாத்மா காந்தி. ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது. அதற்கு மாநில அரசும் ஒத்திசைவாக இயங்கி,, தனது அதிகார வெள்ளாமைக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது?''

"கொடுமைகளின் ஆணிவேர் குடும்ப அரசியல்!"
பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரவை.

''இந்திய அரசியலுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி அளித்திருக்கும் மிகப் பெரிய கொடை, குடும்ப அரசியல் சூட்சுமம்!

மக்கள் இங்கு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்பது வேறு, குடும்ப அரசியல் என்பது வேறு. வாரிசு அரசியல் என்பது, தனக்கென ஒரு வாரிசை நியமித்து, அவருக்கு அதிகாரம் அளிப்பது.குடும்ப அரசியல் என்பது அப்படி அல்ல. குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரையும் அதிகார மையங்களாக்கி, அவரவர் விருப் பப்படி செயல்பட அனுமதிப்பது. ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் மிக மோசமான எதிரி.

தமிழகத்தில் இன்றைக்கு அதுதான் நடப்பில் இருக் கிறது. குடும்ப ஆதிக்கச் சக்திகள் இடையேயான போட்டி, பொறாமையால் -பதவி வெறியால், அரசியலும் அரசு நிர்வாகமும் முற்றிலும் சீரழிந்துவிட்டன. மண்ணில் இருந்து அலைக்கற்றை வரை நாட்டின் அரிய வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் ஆள்வோரின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பங்கு இருக்கிறது. அரசு அதிகாரிகள் யார் உத்தரவுக்கு அடிபணிவது எனத் தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள். 'மதுரை தினகரன் சம்பவம்’ முதல் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ வரை ஒவ்வொரு விவகாரத்தின் ஆணி வேரும் குடும்ப அரசியலில்தான் புதைந்துகிடக்கிறது.

முதலில் முதல்வர் கருணாநிதிதான் இதைத் தன் குடும்பத்திலிருந்து தொடங்கிவைத்தார். பிறகு, அவருடைய அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் அவரைப் பின்பற்றினார்கள். இப்போது தி.மு.க-வின் கிளை அமைப்பு கள் வரை இந்தக் குடும்ப அரசியல் புரையோடி இருக்கிறது. கருணாநிதியால் இதைத் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது. சூத்திரதாரியே அவர்தானே?

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இந்த நிலை உண்டா? தமிழகத்தை இதற்கு முன் ராஜாஜி, ஓமந்தூரார், காமராஜர், அண்ணா என எத்தனையோ பேர் ஆண்டு இருக்கிறார்கள். இதற்கு முன் இதுபோல முன்னுதாரணம் உண்டா? தன்னுடைய தாய் சென்னைக்குத் தன் வீட்டுக்கு வந்தால்கூட, ஓரிரு நாட்களுக்கு மேல் அவரைத் தங்க அனுமதித்தது இல்லை காமராஜர். தன்னுடைய குடும்பத்தின் நிழல்கூட அரசியல் அதிகாரத்தின் மீது படும்படி நடந்துகொண்டது இல்லை அண்ணா. ஆனால், இன்றைக்கு நாட்டுக்கே மோசமான முன்னுதாரணமாக மாறி இருக்கிறார் கருணாநிதி. தமிழகத்தின் கடைக்கோடி கிராம அதிகாரம் வரை தி.மு.க நிர்வாகிகளின் குடும்பஅரசியல் ஊடுருவி இருக்கிறது. மக்கள்வெறுப் பில் இருக்கிறார்கள். வெறுப்புக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வடிகால் இருக்கும்தானே!''

"இருட்டறையில் இருக்கிறது தமிழகம்!"
சாவித்திரி கண்ணன், பத்திரிகையாளர்.

''ஐந்து முறை ஆளும் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் ஒழுங்கில்லாத நிர்வாக மேலாண்மையே, இன்று தமிழகம் மின்தடை காரணமாகப் பெரும்பாலும் இருளில் மூழ்கி இருப்பதற்கு முழுக் காரணம். காமராஜர் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் மின் உற்பத்தி அதிகரித் தது. ஆனால், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அத்தகைய ஏற்றம் இல்லை. காரணம், காமராஜரின் தொலைநோக்குச் சிந்தனை கருணாநிதியிடம் இல்லாததுதான். மின் உற்பத்திக்கான செயல்பாடுகளைத் தொடங்கிய உடனேயே, அதற்கான பலன்கள் கிடைத்துவிடாது. ஐந்தாறு ஆண்டுகள் கழித்துதான் அதன் விளைவுகளை நாம் அனுபவிக்க முடியும்.

மின்சாரத் துறை அமைச்சராக கடந்த ஐந்து ஆண்டுகள் 'செயல்பட்டு’ வந்த ஆற்காடு வீரா சாமியிடம், துறை தொடர்பாக எந்தக் கேள்வியைக் கேட்டாலும், 'தெரியாது’ என்ற பதிலைத்தான் பெற முடியும். மின்சார நிர்வாகத்தைப் பொறுத்த வரை இரண்டு விஷயங்கள் முக்கியமானவை மின் உற்பத்தி மற்றும் மின் பராமரிப்பு. ஆனால், ஐந்து ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் எந்த மின் பராமரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. மின்சாரத் துறையில் நடந்த கரை கடந்த ஊழலும் மின்வெட்டுக்குக் காரணம்.

மின் துறையானது ஊழியர்கள் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. ஆனால், கருணாநிதி 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்’, 'இலவச பம்புசெட்’ ஆகிய கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதிலேயே குறியாக இருக்கிறார். மின்சாரமே இல்லை என்னும்போது, இலவச மின்சாரத்தால் என்ன நன்மை? விவசாய சங்கங்கள், 'எங்களுக்கு இலவச மின்சாரம் தேவை இல்லை. சீரான மின்சாரம் இருந்தாலே போதும்’ என்று தீர்மானம் போட்டு இருக்கின்றன. ஆனால், கருணாநிதி அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

தனியார் வசம் மின் உற்பத்தி விடப்பட்டு இருக்கிறது. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தனியாரும் அரசும் சேர்ந்து செய்யும் மின் உற்பத்திகூட நமக்குப் போதுமானதாக இல்லாமல் இருப்பது ஏன்?

தனியார் மின் உற்பத்தி செய்து அதிக விலைக்கு அரசிடம் விற்பனை செய்யும் அவல நிலை. இதுவரை தமிழக அரசின் மின் வாரியத்தில் இழப்பு மட்டும் 38,000 கோடி. அது போக, மாதாமாதம் 1,550 கோடி இழப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. சுமார் 3,000 மெகாவாட் மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் இருளில் தத்தளிக்கிறது!''

"ஊழலை ஊக்குவிக்கிறது அரசு!"
என்.முருகன், ஐ.ஏ.எஸ்.

''தமிழர்களுக்கு ஊழல் பழக்கமானது அல்ல. காலங்காலமாக ஒழுக்கத்துக்கும் அறநெறிகளுக் கும் முன்னுதாரணமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆனால், இன்றைக்குத் தமிழர்களுக்கு ஊழல் பழக்கமானது அல்ல என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இதற்கு யார் காரணம்?

தமிழ்நாட்டு அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் என்கிற வார்த்தைகள் எல்லாம் புழக்கத்துக்கு வந்ததே, தி.மு.க-வின் வருகைக்குப் பிறகுதான். அதற்கு முன் லஞ்சம், ஊழல் எல்லாம் இல்லவே இல்லையா என்று கேட்டால், இருந்தது! எங்கோ ஓர் இடத்தில், யாருக்கும் தெரியாமல் மிக மிக நுண்ணிய அளவில் இருந்தது. லஞ்சத்தை அதிகாரமாகக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால், கூச்சத்துடன் வாங்கிக்கொள்வார்கள். அப்படி வாங்குவோரும் சமூகத்தில் மிகக் கேவலமாகப் பார்க்கப்பட்டார்கள். இழிவாக நடத்தப்பட்டார்கள். அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிக்க நேர்மையே முதல் தகுதியாக இருந்தது. யாராவது லஞ்சப் புகார் கூறினாலோ, பத்திரிகைகளில் செய்தி வந்தாலோ, கடுமையான நடவடிக்கை இருந்தது. அந்தச் சூழ்நிலைகளை இப்போது கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா?

இன்றைய சூழலில் அரசாங்கம் ஊழல் அதிகாரிகளையே விரும்புகிறது. தாங்கள் சம்பாதிக்க அவர்கள்தான் உதவியாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள் என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். நேர்மையானவர்கள் மதிக்கப்பட்ட காலம் மறைந்து, அவர்கள் கையாலாகாதவர்களாக, கைவிடப்பட்ட வர்களாகப் பார்க்கப்படும் காலமாகிவிட்டது. சட்டம் இயற்றும் இடத்தில் தொடங்கி, ஊடகங்கள் வரை விலைக்கு வாங்கக் கூடியவையாக மாற்றப் பட்டுவிட்டன. இதன் உச்சபட்சம்தான் மக்களையே ஊழல்வாதிகளாக மாற்றியது. கடந்த 5 ஆண்டு கால அரசின் உச்சபட்ச சீர்கேடு இதுதான்!

கிரேக்கத் தத்துவ மேதையான அரிஸ்டாட்டில் ஜனநாயக முறையைக் கடுமையாக எதிர்த்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், 'அறிவற்றவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றால், அவர்கள் எளிதில் விலை போய்விடுவார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளும் அவர்களைப்போலவே எதிர் காலத்தைப்பற்றிச் சிந்திக்கத் தெரியாதவர் களாகவே இருப்பார்கள்’ என்பதுதான். கருணாநிதி அதை உண்மையாக்க முயன்று கொண்டு இருக்கிறார்.

ஆனாலும், தமிழக மக்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை!

"மனித உரிமையின் மறக்க முடியாத களங்கம்!"
ஹென்றி டிபேன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

'' 'ஈரல் கெட்டுவிட்டது’ என்று முன்னர் காவல் துறையைக் காட்டமாக விமர்சித்தவர் கருணாநிதி. இன்று அவரது ஆட்சிக் காலத்தில், காவல் துறை யின் அத்துமீறல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு விட்டது. இவ்வளவுக் கும் காவல் துறையைச் சீரமைக்கும் வாய்ப்பை, 'புதிய போலீஸ் ஆக்ட் கொண்டு வர வேண்டும்’ என்று பரிந்துரைத்ததின் மூலம் ஏற்படுத்தியது நீதி மன்றம். ஆனால், கருணாநிதி அதை நிறை வேற்றவே இல்லை.

தி.மு.க ஆட்சியில் 29 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றது மனித உரிமைகள் வரலாற்றில் மறக்க முடியாத களங்கம். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையார் மனைவிக்குப் பதவி வழங்கிய கருணாநிதி, மேற்கண்ட 29 என்கவுன்ட்டர்கள் குறித்து வாய் திறக்கவே இல்லை. மாறாக, என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு, குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது கொடுமையிலும் கொடுமை.

என்கவுன்ட்டர் சம்பவங்களின்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் பின் பற்றப்படவே இல்லை. அதேபோல, மனித உரிமை ஆணையத்துக்கான தமிழக அரசின் நியமனங்களும் கேலிக்கூத்து. ஆணையத்தின் உறுப்பினர்களாக மனித உரிமைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் நியமிக்கப் படுகின்றனர். மகளிர் ஆணையத்தின் தலைவியாக தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் நியமிக்கப்பட்டார். எம்.எல்.ஏ-வாக ஆக முடியாதவர்களை ஒப்புக்கு உட்கார்த்திவைக்க மகளிர் ஆணையமா கிடைத்தது!

மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு ஊழியர்கள் கொல்லப்பட்டது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது ஏவப்பட்ட போலீஸ் வன்முறை, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் மீதான போலீஸின் முரட்டுத்தனம், உத்தப்புரம் பிரச்னைக்காகப் போராடிய சி.பி.எம் தலைவர்கள் மீதான தாக்குதல், காவல் துறை அதிகாரி வெட்டப்பட்டு உயிருக்குப் போராடியபோது இரண்டு அமைச்சர்களே வேடிக்கை பார்த்த கொடுமை, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் என சட்டம்-ஒழுங்கைக் கையாண்டதில் தி.மு.க அரசின் தோல்விக்கு எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!''

"ஈழத் தமிழர்களைக் கைவிட்டவர் கலைஞர்!"
கொளத்தூர் மணி பெரியார் திராவிடர் கழகத் தலைவர்

''இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை எட்டிய சமயம், தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சி தோன்றியது. இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கருணாநிதி ஒரு மனிதச் சங்கிலி நடத்தினார். தி.மு.க இளைஞர் அணி சார்பாகவும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. ஆயுதங்களைக் கீழே போடுமாறு போராளிகளுக்கு தி.மு.க அறிவுறுத்தியது. புலிகள் சகோதர யுத்தம் புரிந்தததால்தான், தேவையற்ற அழிவுகள் ஏற்பட்டன என்றெல்லாம்கூட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. கருணாநிதி சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ, கனரக ஆயுதங் களைப் பயன்படுத்துவது. இல்லை என்று மாத்திரமே உறுதிமொழி தரப்பட்டதாகக் கூறினார். அதன் பிறகும் தாக்குதல் தொடர்ந்தது. 'மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லையே!’ என்று சப்பைக்கட்டு கட்டினார் கருணாநிதி. சட்டமன்றத்தில் மூன்று முறை இந்தப் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றினார். 'தமிழினம் அழுகிறது’ என்றெல்லாம்கூட தீர்மானம் இயற்றினார். ஆனால், கடுமையான சொற்கள்கூட அந்தத் தீர்மானங்களில் இல்லை. பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இதுதான் கருணாநிதி இந்தப் பிரச்னைக்குச் செய்தவை.

போர் நடந்தபோது வெளியே தெரியாமல், ராணுவ வல்லுநர்களை அங்கே அனுப்பி மறை முகமாக இலங்கைக்கு உதவியது இந்திய அரசு. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு நிலவிய சமயம், அவற்றை மழுங்கடிக்கும் காரியங்களில் தீவிரமாகச் செயல்பட்டு,நினைத்த தைச் சாதித்தார் கருணாநிதி.

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. புலிகளுக்கு மீனவர்கள் உதவுகிறார்கள் என்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது போர் இல்லாதபோதும், இன்று வரையும்கூட மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இதுவரை, தமிழக அரசோ, இந்திய அரசோ, இலங்கை அரசுக்கு இந்த விஷயத்தில் எந்தவொரு அழுத்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. 'இந்தியா நடத்த வேண்டிய போரை நாங்கள் நடத்தினோம்!’ என்று இலங்கை சொன்னது. ஆக, இலங்கையின் அழிவுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி முழு முதல் காரணம், அதை ஆதரிக்கும் கருணாநிதியும் காரணம்!''

"கட்டணக் கொள்ளைக்கு அரசின் அங்கீகாரம்!"
பேராசிரியர் பிரபா.கல்விமணி, கல்வியாளர்.

''தி.மு.க அரசு கல்வித் துறையில் பல சாதகமான விஷயங்களைச் செய்திருக்கிறது. முதலாவதாக, தொகுப்பூதிய ஊழியர்களாக இருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைக் காலமுறை ஊழியர்களாக மாற்றியது. முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து, சமச்சீர் கல்விக்கான விவாதங்களைத் தொடங்கியது ஆரோக்கியமான விஷயம். சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களும் சிறப்பானவை.

தொடக்கக் கல்வியில் செயல் வழிக் கற்றல் முறை கொண்டுவந்ததும் வரவேற்புக்குரிய திட்டம். பொறியியல் கல்லூரிகளில், தமிழ்வழிக் கல்வி அமல்படுத்தப்பட்டது பாராட்டத்தக்க அம்சம். ஆனால், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்கிற தமிழக அரசின் அறிவிப்புதான் குழப்பமானது. தமிழில் படித்தவர்கள் என்றால், பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவர்களா அல்லது கல்லூரியில் தமிழில் பயின்றவர்களா என்ற கேள்விக்கு இதுவரை தமிழக அரசிடம் தெளிவான விளக்கம் இல்லை!

நீதிமன்ற ஆணையின் பேரால் அமைக்கப்பட்டது என்றாலும் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது பாராட்டுக்கு உரியது. ஆனால், அதன் செயல்பாடு இறுதியில் தோல்வியைத் தழுவியது துரதிர்ஷ்டம். தமிழக அரசு நிர்பந்தங்களுக்குப் பணியாமல் கோவிந்தராஜன் பக்கம்தான் நியாயமாக நின்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளை முறைப்படுத்தாது. காரணம், அவற்றை நடத்துவதே இந்தக் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள்தானே! ஓர் உதாரணம் சொல்கிறேன்... திருவண்ணா மலையில் உள்ள அருணை மெட்ரிகுலேஷன் பள்ளி, அமைச்சர் எ.வ.வேலு வுக்குச் சொந்தமானது. எப்போதும் அந்தப் பள்ளி ப்ளஸ் டூ தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சிபெற்று வந்தது. ஆனால், 2008-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ப்ளஸ் டூ தேர்வின்போது, ஐந்து கல்வி அதிகாரிகள் தலைமையிலான பறக்கும் படை காப்பி அடித்த மாணவர்களைப் பிடித்தது. அந்த ஆண்டு பள்ளியின் தேர்ச்சி விகிதம் 60 சதவிகிதமாகக் குறைந்தது. பிறகு, அந்தக் கல்வி அதிகாரிகள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களுக்குத் தூக்கி அடிக்கப்பட்டனர்!

தி.மு.க ஆட்சிக் காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது மோசமான விஷயம். எல்லா அரசுப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையத்தின் தேர்வுகள் உட்பட, அரசுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆனால், ஆசிரியர் நியமனத்தில் மட்டும் சீனியாரிட்டி முறை ஏன்?''

"மணல் கொள்ளையர்கள்தான் வேட்பாளர்கள்!"
தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

''நம் அண்டை மாநிலங்களால் நாம் நீரியல் முற்றுகைக்கு ஆளாகியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நதி நீருக்கான போராட்டங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, மக்களைத் திரட்டிப் போராடுவது. இரண்டாவது, சட்டரீதியாக நீதிமன்றத்தில் போராடுவது. இரண்டு வகைகளிலும் நமக்குத் தோல்வி!

'காவிரிகொண்ட கலைச்செல்வி’, 'காவிரி கொண்டான்’ என்று பட்டங்கள் மட்டுமே ஆட்சியாளர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.ஆனால், நதி நீர் நமக்குச் சொந்தமாக இல்லை. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கிவைத்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு அதை நிறைவேற்றும் துணிச்சல்இல்லை. இதற்குக் காரணம் தேர்தல் அரசியல்தான்.

கர்நாடகாவில் பெங்களூரு நகரத்தை நிர்மாணித்தவர்கள் தமிழர்கள். அந்த மாநில விவசாயிகளுக்கு உழவு சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், கர்நாடக எல்லையோரப் பாசன நிலங்களை தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவன் வாங்க முடியாது என்று கர்நாடகா சட்டம் இயற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே நிலைமையைப் பாருங்கள். தமிழ்நாட்டில் அதிகம் வாங்கப்படுவது கர்நாடகா பொன்னி அரிசிதான். கர்நாடகாவில் விளையும் அரிசிக்கு தமிழ்நாடு சந்தையாக இருக்கிறது. பாலாற்றில் தடுப்பு அணை பிரச்னை நமக்கும் ஆந்திராவுக்கும். ஆனால், ஆந்திரா நெல்லூர் அரிசி தமிழ்நாட்டில் அதிக அளவில் விற்பனையாகிறது. இதற்கெல்லாம் ஏதாவது செய்ததா தமிழக அரசு? ம்ஹூம்... எதுவும் இல்லை!

ஆற்று நீரில்தான் பிரச்னை என்றால் ஆற்று மணலிலும் பிரச்னை. இயற்கை நமக்கு அளித்த கொடையான மணலை யார் யாரோ இன்று லாரிகளில் கொள்ளையடித்துக்கொண்டு இருக் கிறார்கள். தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அந்தக் கொள்ளயர்களில் பலர் வேட்பாளர் களாக நிற்கிறார்கள். கேரளாவில், சமவெளி ஆறுகள் குறைவு. அங்கு மலைப்பாங்கான பிரதேசம் என்பதால், மணல் கிடைப்பது அரிது. அதனால், இங்கே இருந்து மணலை எடுத்துப் போய், அங்கே பணம் குவிக்கிறார்கள். அதற் கும் இங்குள்ள அரசியல்வாதிகள் உடந்தை!

'ஏன் கொள்ளையடிக்கிறாய்?’ என்று தட்டிக்கேட்கும் அதிகாரிகளையும் பொதுமக்களையும் கூசாமல் கொலை செய்யும் அராஜகம் வேறு! தி.மு.க-அ.தி.மு.க என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குப் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் சட்ட விரோதத் தொழில் இந்த மணற் கொள்ளை!''

தொகுப்பு : ரீ.சிவக்குமார், சமஸ், கவின் மலர்

* ஆனந்த விகடன் ஏப்ரல் 6,2011

1 comment:

Anonymous said...

அக்கிரஹாரத்து விகடன், தினமலம்,சோமாரி,வைத்தியநாத அய்யர் மணி எல்லோரும் சேர்ந்து ஸ்ரீரங்கத்து மாமிக்காக ஒத்தூதுவது வெளிப்படை.

அதற்குத் தமிழர்களையே பயன் படுத்துவதுதான் நரித்தனம்.

இவர்கள் கூறியுள்ளவை, இவையனைத்தும் தொடரும். விவசாயிகள் "விரும்பி" எலிக்கறி சாப்பிடுவார்கள். அரசு ஊழியர்கள் ஆனந்தமாக வீட்டிலே கூண்டோடு கைலாசம் போகலாம். அனைவரும் காலில் விழுந்து வணங்கி நாமம் போட்டுக் கொண்டு செல்லலாம், ஏதாவது பேசினால் வேலை போகும்,சிறைச்சாலை அழைக்கும்,அடி உதையும் கிடைக்கும். வேண்டுமா ?