Tuesday, July 19, 2011

டீசல் சேமிப்பு : 108 ஆம்புலன்ஸ்களுக்கு வேகத்தடை- புலம்பும் டிரைவர்கள்



உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களில் டீசலை சேமிக்க 50கிமீ வேகத்திற்கு மேல் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிரைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

8 மணி வேலை நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பெற்று வருகிறோம். கூடுதல் வேலை நேரத்திற்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இதனால் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.

வேலைக்கு சேரும்போது சொந்த ஊரிலோ, அல்லது சொந்த ஊருக்கு அருகிலோ தான் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஊரில் பணிபுரிய வேண்டியுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகன டயர்களின் ஆயுட்காலம் 40 ஆயிரம் கிமீ வரைதான் என சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன. ஆனால் அதிகாரிகள் 80 ஆயிரம் கிமீ ஓட்ட நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் உயிருக்கு போராடும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது டயர்கள் பழுதாகி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். தொடர்ந்து எரிபொருள் சிக்கனம் என்று கூறி 50 கிமீ வேகத்திற்கு அதிகமாக ஆம்புலன்ஸை ஓட்ட அனுமதிப்பதில்லை.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். எனவே ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

சமச்சீர் கல்வித் திட்டத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது தமிழக அரசு.



சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது தமிழக அரசு.

சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் 22ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு வசதியாக, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்தக் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் படி பெஞ்ச் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மாலை நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் மீண்டும் ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய வேண்டியதிருப்பதால், உத்தரவின் நகலை உடனடியாக தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உத்தரவின் நகலை உடனடியாக தரமுடியாது என்றாலும், இன்றைக்குள் (18.07.2011) கொடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவரிடம் தெரிவித்தார். மேலும் உத்தரவின் நகலை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாகவும் அப்பீல் செய்யலாமே என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பீல் செய்வது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் நேற்றுஇரவே டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் அமைச்சர் குழு தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் இன்று மேல் முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அதில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு புதன் அல்லது வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.

5 பேர் கேவியட் மனு

இதற்கிடையே, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது தங்களையும் விசாரிக்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று கோரி 5 பேர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

என் முதலாளி கலாநிதி மாறன், அவர் சொன்னதைச் செய்தேன் - சக்சேனா பரபரப்பு வாக்குமூலம்.



நான் ஒரு சாதாரண தொழிலாளிதான். எனது முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன் என்று சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாப்பிள்ளை என்ற படத்தை ஹிதேஸ் ஜபக் தயாரித்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது. பெரிய அளவில் விளம்பரமும் செய்தார்கள். ஆனால் படம் ஓடவில்லை.

இந்த நிலையில் ஹிதேஸ் ஜபக் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் சக்சேனா தன்னை மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்சேனாவை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகையில்,

பல சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு சாதாரண தொழிலாளி என்றும், முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாகவும் சக்சேனா கூறியுள்ளார்.

எந்த ஒரு விஷயத்திலும் தன்னிச்சையாக தான் எதையும் செய்யவில்லை. தன்னுடைய மேல் அதிகாரிகள் சொன்னதை தான் தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளாராம்.

இதையடுத்து சக்சேனா சொன்ன தகவல்கள் உண்மைதானா என்பதை அறிய கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தி ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே அவரை விசாரணைக்கு வருமாறு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதற்கு அவர் காலஅவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து ஜூலை 29ம் தேதி வரை டைம் கொடுக்கப்பட்டிருப்பது நினைவு கூறத்தக்கது.

சேலம் மாநராட்சி மேயர் மீது ஊழல் புகார்.



சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி மீது, முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால் ஊழல் புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி 12-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு வழங்கினார். மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாநகராட்சி மேயராக உள்ள ரேகா பிரியதர்ஷினி, 2006ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது, வேட்பு மனுவோடு, சொத்து விபரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 800 கிராம் தங்க நகையும், 3,200 சதுர அடி நிலமும், ஒரு மொபைல் போனும், தனது கணவர் பெயரில், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேயரான பின், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஏற்காட்டில், பல கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். வெள்ளாளகுண்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் டிப்ளமோ பார்மஸி கல்லூரி கட்டி வருகிறார். பல இடங்களில் வீடுகளும், மனைகளும் இவரால் பினாமி பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பெற்ற லஞ்சத்தின் மூலம் இவைகள் வாங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியின் கருத்தாய்வு கூட்ட ஆய்வுக்கு மின் விளக்குகள், நாற்காலிகள், ஒலி பெருக்கிகள் மற்றும் புரொஜக்டர்கள் அமைக்கும் பணிக்காக, 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த 2007-08ம் ஆண்டு பொன்னன் பூசாரி என்பவருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக முறையாக விலைப்புள்ளிகள் பெறப்படவில்லை. விலை புள்ளிகளில் உள்ள விலை விபரத்தை மதிப்பீட்டில் சேர்க்கவில்லை. இதன் மூலம், மாநகராட்சிக்கு ஏழு லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்டில், ஐந்து கடைகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடைகளை வைக்க லட்சக்கணக்கான ரூபாய், மாநகராட்சி அதிகாரிகள் பெற்றுள்ளனர். பனமரத்துப்பட்டி ஏரிக்கரையை மண்கொட்டி வலுப்படுத்தும் பணிக்காக டெண்டர் விடப்பட்டதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருமணி முத்தாறு திட்டப்பணியில் ஆற்றின் தரைப்பகுதியை சேண்டல் கிராவல் மிக்ஸிங் மூலம் வலுப்படுத்த டெண்டர் விடப்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து, ஊழல் பேர் வழிகளை சடடத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் குறித்து மேயர் ரேகா பிரியதர்ஷினி கூறியதாவது:-

எனக்கு 100 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதை நிரூபிக்காவிட்டால், ராஜகோபால் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் மிகப் பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு.



ஆந்திர மாநிலத்தில் துலப்பள்ளி அருகே யுரேனிய சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தற்போது உறுதி செய்யப்பட்ட தகவல் படி, சுமார் 49,000 டன் அளவு யுரேனியம் கிடைக்கும் என்றும், சுரங்கத்தை மேலும் ஆய்வு செய்தால் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் டன் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது. என்று அணு சக்தி ஒழுங்கு வாரியம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இதுவே உலகின் மிகப் பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கும்.

அணு சக்தி மற்றும் அணு மின் உற்பத்திக்கு யுரேனியம் இன்றியமையாதது. இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து அணு மின் ஆலைகளும், தனது யுரேனிய தேவைக்கு, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளையே நம்பி வருகின்றன.

தற்போது யுரேனிய சுரங்கம் கிடைத்து இருப்பது மூலம், இந்தியாவின் மின் உற்பத்தி தேவையை வெகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, இந்த புதிய சுரங்கம் மூலம் கிடைக்கும் யுரேனியத்தை கொண்டு சுமார் 8000 மெகா வாட் உற்பத்தி செய்யும் மின் ஆலை ஒன்றை அமைத்து 40 வருடங்களுக்கு இயக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அணு சக்தி ஒழுங்கு வாரியத்தின் செயலர் பானர்ஜி, சுரங்கம் தோண்டும் பணிகள் இன்னும் 6 மாதத்தில் ஆரம்பிக்க்படும் என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “ஆன்லைன்” மூலம் பதிவு செய்யும் வழிமுறைகள் : நேரில் போக தேவையில்லை.



வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய தளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள், பட்டதாரிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தால் கால விரயம், அலைச்சல், பணச்செலவினை மிச்சப்படுத்தலாம்.

தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக மனுதாரர்கள் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதிகள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து, அடை யாள அட்டை மற்றும் வேலை வாய்ப்பு பதிவு எண் பெற்ற மனுதாரர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது கல்வி சான்றினை அனுப்ப தேவையில்லை.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை.

தாங்கள் சார்ந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலோ, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரிலோ, இண்டர்நெட் மையங்களிலோ, புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு ஆகிய பணியினை மேற்கொள்ளலாம்.

மனுதாரர்களின் அடையாள அட்டை தொலைந்து போக நேரிட்டால் தங்கள் பதிவெண்ணை பயன்படுத்தி அடையாள அட்டையினை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் மனு தாரர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆன்லைன் பதிவு செய்வோரும் உடனடியாக அடையாள அட்டை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். மனுதாரர் விரும்பினால் பதிவெண்ணை மட்டும் "சேவ்" செய்துகொண்டு தேவைப்படும்போது பதிவட்டை எடுத்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்ய விரும்புவர்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் "அப்டேட் டிரோபைல்" சென்று "சேவ்" செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே இடமாற்றம், முகவரி மாற்றம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். பிற மாவட்டங்களுக்கு மாறி சென்றால் அதற்கு ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய இயலாது. நேரில்தான் வரவேண்டும்.

மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் ரேஷன் கார்டு எண்ணை மட்டும் குறிப்பிட வேண்டும். உலகின் எந்த மூளையில் இருந்தும் பதிவை புதுப்பித்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதியை மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அபகரிப்பு நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு ! சேலம் காவல்துறையின் முதல் தீர்வு !

சேலம் நகரத்தில் உள்ள வீராணம் பகுதியில் மன்னார்பளையம் பிரிவு ரோட்டில் சுசிலாதேவிக்கும் அவரது சகோதரி சந்திரவதனி என்பவருக்கும் தங்களின் தாயார் வழி சொத்தாக ஐந்தாயிரம் சதுர அடி நிலம் இருந்தது.

அதில் தன்னுடைய பங்கு நிலத்தை சந்திரவதனி, கடந்த 1996 ம் ஆண்டு சேலம் சிங்க மெத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரின் மனைவி பத்த்மாவதி என்பவருக்கு விற்றுவிட்டார். அந்த இடம் சமீபகாலம் வரை காலி நிலமாகவே கிடந்தது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது தி.மு.க உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய ஆதாரவாளரான ஆட்டோ மாணிக்கம் என்பவர் இந்த இடம் நாராயணராவ், கிருஸ்ணமூர்த்தி, மோகன், குப்புத்தாயம்மாள் ஆகியோருக்கு சொந்தாமானது என்று ஒரு போலியான பத்திரம் தயார் செய்து, அதை தனது பினாமி, ராஜா என்பவர் பெயருக்கு கிரையம்செய்து பின்னர் அவரிடமிருந்து துரைசாமி என்பவருக்கு கிரையம் செய்து துரைசாமியிடமிருந்து தனது பெயருக்கு கிரையம் வாங்கிய ஆட்டோ மாணிக்கம், இப்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டி அதை அரசு மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வாடகைக்கு விட்டுள்ளார்.

இடம் ஆட்டோ மாணிக்கத்திடம் இருந்தாலும் அந்த இடத்துக்கான நிலவரியை இப்போதும் சுசீல தேவியும், பத்மாவதியும் தான் கட்டிவருகிரார்கள்.

ஆட்டோ மாணிக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பத்மாவதிக்கு சாதகமாக இந்த இடம் பத்மாவதிக்கு சொந்தம் என 15.3.2001ல், தீர்ப்பு கொடுத்தது நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த, பத்மாவதிக்கு துணையாக அரசு அலுவலர்கள் யாரும் முன் வராததால், சேலம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்தார் பத்மாவதி.

18.7.2007, அன்று விசாரணை செய்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்த இடம் சுசீலாதேவி மற்றும் பத்மாவதிக்கே சொந்தமானது என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுத்தார்.

அதையும் யாராலும் நடை முறைபடுத்த முடியவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தார் பத்மாவதி. நடவடிக்கை இல்லை. தமிழக ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரிக்க காவல் துறையால் தொடங்கப்பட்ட தனிப்பிரிவில் கடந்த மாதம் புகார் கொடுத்தார் பத்மாவதி.

விசாரணைக்கு கூப்பிட்ட காவல்துறையினர் ஆட்டோ மாணிக்கத்தின் பத்திரங்கள் போலியானது என்பதை உறுதி செய்துகொண்டு, அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.

சிறைக்குள் இருந்தபடியே, வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்தார் ஆட்டோ மாணிக்கம், வழக்கை நடத்தினால் நிச்சயம் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று ஆலோசனை சொன்னார்கள் வழக்குறைஞர்கள்.

தப்பிக்க முடியாது என முடிவு செய்த மாணிக்கம் சிறையிலிருந்து பிணையில் வந்ததும் நிலத்தை விட்டு விடுகிறேன் எண்ணை விட்டு விடுங்கள் என்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் போனார்.

தான் கட்டிய கட்டிடத்தை இடிக்க ஒப்புக்கொண்ட ஆட்டோ மாணிக்கம் தான் அனுபவித்து வந்த நிலைத்த பத்மாவதிக்கும், சுசீலாதேவிக்கும் விட்டுவிடுவதாக எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார்

பத்து வருடங்களுக்கு பின்னர் தங்கள் நிலம் தாங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் காவல்துறைக்கு நன்றி சொன்னார்கள் பத்மாவதியும், சுசீலாதேவியும்.

படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்.



2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.

இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.

இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,

எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.

நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.

தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.

அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

சென்னையில் கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு .



சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது.

'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப் படுகின்றது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை மூத்த பத்திரிக்கை யாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தி.சு.கிள்ளிவளவன் வெளியிடுகின்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதல் கடந்த சில வாரங்களாக சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தகம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என எதி்ர்பார்க்கப் படுகின்றது.

சமச்சீர் கல்வி வழக்கில் மேல்முறையீடு : தமிழக கல்வி அமைச்சர் டெல்லி பயணம்.


சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட்டில் 18.07.2011 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

நீதிபதிகள் தீர்ப்பு கூறியதும், சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று, அரசுத் தரப்பில் தலைமை வக்கீல் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார். ஆனால், அது குறித்து தனி மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து 18.07.2011 அன்று மாலையில் நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் மீண்டும் ஆஜரானார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டியதிருப்பதால், உத்தரவின் நகலை உடனடியாக தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். "உத்தரவின் நகலை உடனடியாக தரமுடியாது என்றாலும், இன்றைக்குள் (18.07.2011) கொடுக்கப்படும்'' என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவரிடம் தெரிவித்தார். உத்தரவின் நகலை ஸ்கேன்' செய்து ஆன்லைன்' மூலமாக மேல்முறையீடு செய்ய வசதி இருப்பதாகவும், தலைமை நீதிபதி கூறினார்.

இதற்கிடையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு (அப்பீல்) செய்யும்' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

"சமச்சீர் கல்வி பாடங்களில் ஏராளமான திருத்தங்கள் செய்ய வேண்டியது உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, நிபுணர் குழு அமைத்து கல்வியின் தரம் ஆராயப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது என்ற நிபுணர் குழுவின் கருத்தை ஐகோர்ட்டில் கூறினோம். அதை ஐகோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்தத் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்' என்றார்.

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ள தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையடுத்து, இதற்காக தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், கல்வித்துறை செயலாளர் சபீதா, தமிழக அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் 18.07.2011 அன்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.