Tuesday, July 19, 2011

சேலம் மாநராட்சி மேயர் மீது ஊழல் புகார்.



சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி மீது, முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால் ஊழல் புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி 12-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு வழங்கினார். மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாநகராட்சி மேயராக உள்ள ரேகா பிரியதர்ஷினி, 2006ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது, வேட்பு மனுவோடு, சொத்து விபரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 800 கிராம் தங்க நகையும், 3,200 சதுர அடி நிலமும், ஒரு மொபைல் போனும், தனது கணவர் பெயரில், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேயரான பின், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஏற்காட்டில், பல கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். வெள்ளாளகுண்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் டிப்ளமோ பார்மஸி கல்லூரி கட்டி வருகிறார். பல இடங்களில் வீடுகளும், மனைகளும் இவரால் பினாமி பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பெற்ற லஞ்சத்தின் மூலம் இவைகள் வாங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியின் கருத்தாய்வு கூட்ட ஆய்வுக்கு மின் விளக்குகள், நாற்காலிகள், ஒலி பெருக்கிகள் மற்றும் புரொஜக்டர்கள் அமைக்கும் பணிக்காக, 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த 2007-08ம் ஆண்டு பொன்னன் பூசாரி என்பவருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக முறையாக விலைப்புள்ளிகள் பெறப்படவில்லை. விலை புள்ளிகளில் உள்ள விலை விபரத்தை மதிப்பீட்டில் சேர்க்கவில்லை. இதன் மூலம், மாநகராட்சிக்கு ஏழு லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்டில், ஐந்து கடைகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடைகளை வைக்க லட்சக்கணக்கான ரூபாய், மாநகராட்சி அதிகாரிகள் பெற்றுள்ளனர். பனமரத்துப்பட்டி ஏரிக்கரையை மண்கொட்டி வலுப்படுத்தும் பணிக்காக டெண்டர் விடப்பட்டதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருமணி முத்தாறு திட்டப்பணியில் ஆற்றின் தரைப்பகுதியை சேண்டல் கிராவல் மிக்ஸிங் மூலம் வலுப்படுத்த டெண்டர் விடப்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து, ஊழல் பேர் வழிகளை சடடத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் குறித்து மேயர் ரேகா பிரியதர்ஷினி கூறியதாவது:-

எனக்கு 100 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதை நிரூபிக்காவிட்டால், ராஜகோபால் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: