Tuesday, July 19, 2011

டீசல் சேமிப்பு : 108 ஆம்புலன்ஸ்களுக்கு வேகத்தடை- புலம்பும் டிரைவர்கள்



உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களில் டீசலை சேமிக்க 50கிமீ வேகத்திற்கு மேல் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிரைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

8 மணி வேலை நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பெற்று வருகிறோம். கூடுதல் வேலை நேரத்திற்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இதனால் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.

வேலைக்கு சேரும்போது சொந்த ஊரிலோ, அல்லது சொந்த ஊருக்கு அருகிலோ தான் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஊரில் பணிபுரிய வேண்டியுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகன டயர்களின் ஆயுட்காலம் 40 ஆயிரம் கிமீ வரைதான் என சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன. ஆனால் அதிகாரிகள் 80 ஆயிரம் கிமீ ஓட்ட நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் உயிருக்கு போராடும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது டயர்கள் பழுதாகி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். தொடர்ந்து எரிபொருள் சிக்கனம் என்று கூறி 50 கிமீ வேகத்திற்கு அதிகமாக ஆம்புலன்ஸை ஓட்ட அனுமதிப்பதில்லை.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். எனவே ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

No comments: