சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட்டில் 18.07.2011 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதிகள் தீர்ப்பு கூறியதும், சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று, அரசுத் தரப்பில் தலைமை வக்கீல் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார். ஆனால், அது குறித்து தனி மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து 18.07.2011 அன்று மாலையில் நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் மீண்டும் ஆஜரானார்.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டியதிருப்பதால், உத்தரவின் நகலை உடனடியாக தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். "உத்தரவின் நகலை உடனடியாக தரமுடியாது என்றாலும், இன்றைக்குள் (18.07.2011) கொடுக்கப்படும்'' என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவரிடம் தெரிவித்தார். உத்தரவின் நகலை ஸ்கேன்' செய்து ஆன்லைன்' மூலமாக மேல்முறையீடு செய்ய வசதி இருப்பதாகவும், தலைமை நீதிபதி கூறினார்.
இதற்கிடையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு (அப்பீல்) செய்யும்' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
"சமச்சீர் கல்வி பாடங்களில் ஏராளமான திருத்தங்கள் செய்ய வேண்டியது உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, நிபுணர் குழு அமைத்து கல்வியின் தரம் ஆராயப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது என்ற நிபுணர் குழுவின் கருத்தை ஐகோர்ட்டில் கூறினோம். அதை ஐகோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்தத் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்' என்றார்.
சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ள தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையடுத்து, இதற்காக தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், கல்வித்துறை செயலாளர் சபீதா, தமிழக அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் 18.07.2011 அன்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment