Tuesday, July 19, 2011

சமச்சீர் கல்வித் திட்டத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது தமிழக அரசு.



சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது தமிழக அரசு.

சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் 22ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு வசதியாக, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்தக் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் படி பெஞ்ச் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மாலை நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் மீண்டும் ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய வேண்டியதிருப்பதால், உத்தரவின் நகலை உடனடியாக தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உத்தரவின் நகலை உடனடியாக தரமுடியாது என்றாலும், இன்றைக்குள் (18.07.2011) கொடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவரிடம் தெரிவித்தார். மேலும் உத்தரவின் நகலை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாகவும் அப்பீல் செய்யலாமே என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பீல் செய்வது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் நேற்றுஇரவே டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் அமைச்சர் குழு தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் இன்று மேல் முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அதில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு புதன் அல்லது வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.

5 பேர் கேவியட் மனு

இதற்கிடையே, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது தங்களையும் விசாரிக்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று கோரி 5 பேர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

No comments: