Friday, July 22, 2011

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு போலீஸ் காவல்.நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளி மாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் கூறுகையில், வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரைப்பற்றிய தகவல்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்றார்.

இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் பெங்களூர் புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் கிருஷ்ணகிரி அருகே கிராணைட் குவாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் தேடுவதை அறிந்த வீரபாண்டி ஆறுமுகம் வேறு இடத்துக்கு தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.

வீரபாண்டி ஆறுமுகம், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் ஆஜரான வக்கீல் என்.ஜோதி வாதிடுகையில்,

வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அந்தக் கட்சியின் செயற்குழு 23ம் தேதியன்றும், பொதுக்குழு 24ம் தேதியன்றும் கோவையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்களில் மனுதாரர் கலந்து கொள்ள வேண்டும்.

ஆதனால் இந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டுகின்றது. எனவே அவரை கைது செய்யக்கூடாது என்றார்.

இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் நடந்தது.

அப்போது சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் நிலங்களை அபகரித்த புகார் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், முன்ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ராஜசூர்யா, வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் சரண் அடைய வேண்டும் என்றும், மேலும் வீரபாண்டி ஆறுமுகத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

ஆக, திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வரும் திங்கள் முதல் புதன் வரையிலான 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் கடுங்குளிர் : சுற்றுலா பயணிகள் அவதி - தேயிலை உற்பத்தி பாதிப்பு.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 1100 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 269 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குறைந்த பட்ச வெப்ப நிலை 12 டிகிரி செல்சியசாக உள்ளது.

இதனால் ஊட்டி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவுகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை யும் கணிசமாக குறைந்து விட்டது. நீலகிரியின் இயற்கை எழிலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அடர்த்தியான மேக மூட்டம் காணப்படுவதால் ஊட்டியின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகளால் ரசிக்க முடியவில்லை.

காலை 7 மணிக்கு பிறகு கூட வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்ட படியே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கனரக வாகனங்களில் டீசல் உறைந்து விடுவதால் வாகனங்களை இயக்க முடியாக நிலையும் ஏற்பட்டுள்ளது.

வால்பாறை பகுதிகளில் தேயிலை உற்பத்தி குறையத் தொடங்கி விட்டது.

வால்பாறை வட்டாரப் பகுதிகளில் 12 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது. இந்தத் தேயிலைச் செடிகளில் நவம்பர் முதல் ஜூன் மாதம் வரை தேயிலை இலைகள் உற்பத்தி அதிகரித்து காணப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும்.

பின்னர் தேயிலை உற்பத்தி சற்று குறையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்தபோதும் அவ்வப்போது நல்ல வெயில் அடித்துக் கொண்டு இருந்ததால் ஜூலை மாதம் 10-ம் தேதி வரை தேயிலை உற்பத்தி அதிகம் கிடைத்து வந்தது.

தற்போது வால்பாறை வட்டாரப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக நல்ல பனிபொழிவும், மழையும் இருந்து வருவதால் கடந்த 1 வார காலமாக தேயிலை உற்பத்தி குறையத் தொடங்கி விட்டது.

மேலும் தேயிலை இலை களை கொப்புள நோய் மற்றும் தேயிலை கொசு தாக்கி வருவதாலும், தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு டிவிசன்களிலும் குறைந்தபட்சம் 300 கிலோ வரை தேயிலை உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தேயிலை தூள் உற்பத்தி குறைவதோடு தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதும் குறையத் தொடங்கும்.

சுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.வானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை பேசினார்.

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் பேசியதாவது :-

இந்தியாவில் விவசாயம் பெருக வேண்டும். ஏனென்றால் சுற்று சூழல் பாதுகாக்க வேண்டும். பூமி என்பது தாய் மாதிரி தாயை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் தான் பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும். அதேபோல் தான் நிலமும், நிலத்தில் உள்ள மண் இவற்றை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் தான் ஆரோக்கியமான விவசாயம் கிடைக்கும்.

இந்தியாவில் மட்டும் விவசாய நிலங்களில் சின்ன ஓட்டை, பெரிய ஓட்டை என கூறுவார்கள். சின்ன ஓட்டை என்பது காற்று செல்லக் கூடிய பகுதி, பெரிய ஓட்டை என்பது தண்ணீர் இருக்கும் பகுதி என குறிப்பிடுவார்கள். சின்ன ஓட்டையில் மழை காலங்களில் மண்புழுக்கள் சென்று உரமாக மாறுகின்றது. கரையான் உமிழ் நீரில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் அது உரமாக பயன்படுகிறது.

இது வெயில் காலங்களில் சிறிய ஓட்டை வழியாக சென்று விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுகிறது. இந்த முறையை பிரான்ஸ்சை சேர்ந்த ஒரு வேளாண் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இந்த முறையின் மூலம் விவசாய பணிகளை செய்து வருகிறார். நம் நாட்டை பின்பற்றி தான் வெளிநாடுகள் விவசாயம் செய்கின்றன. ஆனால் நம் விவசாயிகள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய ரசாயன மருந்துகளை வாங்கி நிலத்தை பாழ்படுத்துகின்றனர். அமெரிக்காவில் ராபர்ட் ஓவார்டு என்பவர் மிகச் சிறப்பாக விவசாயம் செய்து வருகிறார்.

அவர் எம்முறை விவசாயம் செய்து வருகிறார் என்றால் இந்தியாவில் வந்து சில வருடங்களில் விவசாய பணிகளை கற்றுக் கொண்டு அங்கு சிறப்பாக விவசாயங்களை செய்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகள் நிலையான கொள்கை கிடையாது பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த வேளாண் அறிஞர்கள் இந்தியாவில் செய்யப்படும் விவசாயங்களை கற்றுக் கொண்டு அவர்கள் நாடுகளுக்கு சென்று கற்று தருகின்றனர். அதனால் முன்னேறி செல்கின்றனர். இந்திய மக்களின் நிலமை மோசமாகி கொண்டே செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு முறையாக இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் என நபார்டு வங்கி மூலம் அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது திருச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சியால் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பின்பற்றுவார்கள்.

மேலும் அனைத்து விவசாயிகளும் ஒரே பயிரை சாகுபடி செய்வதால் அதன் விலை குறைந்து விடுகிறது. மற்ற விவசாய பொருட்கள் விலை ஏற்றப்படுகிறது. அதனால் அனைத்து விவசாயிகளும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தால் விலைவாசியினை கட்டுப்படுத்த முடியும். அதற்காக நபார்டு வங்கி பல்வேறு வசதிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது. என்று நபார்டு வங்கி மேலாளர் பார்த்திபன் பேசினார்.

சமச்சீர் கல்விக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன் ; கருணாநிதி பேட்டி.தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கொடுக்க மறுத்ததோடு - ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறதே?

பதில்:-அந்தவழக்கினை 26-ந் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார் கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க் கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

கேள்வி:-ஆகஸ்ட் 2-ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?

பதில்:- மகிழ்ச்சி.

கேள்வி:- அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?

பதில்:- நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப் படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கிறேன்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் ``பாலாபிஷேகம்'' செய்துவிட்டு - தி.மு.க.வினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?

கேள்வி:-கோவை பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது?

பதில்:-இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேள்வி:-தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங் களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?

பதில்:-அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக்காட்டி னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

கேள்வி:-நித்தியானந்தா, அந்தரத்தில் பறக்க வைக்கப்போவதாக தெரிவித்தது, பகுத்தறிவாளர்களையெல்லாம் முகம் சுளிக்க வைத்திருக்கிறதே?

பதில்:-எந்தச் சாமியார்களுடைய லீலைகளும், அற்புதங்களும் - தி.மு.க.வின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகளின் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க. எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி !இன்று ஆடி முதல் வெள்ளி. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது.

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான்.

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஔவை நோன்பு:

ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

மகாலட்சுமி வழிபாடு:

ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சண்டி ஹோமம்:

ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

`ஆன்ம விசாரணை ' - கண்களை மூடினால்... எடை குறையும் ! - தியானம் விளக்கம்.

உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை'
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை'

`கடவுள் இருக்கிறாரா? இல்லையா?' என்று நமக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால், `நாம் இருக்கிறோம்' என்பது நமக்கு நன்கு தெரியும். அதனால், முதலில் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நம் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்.

அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, `நான் யார்?, எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது குறிக்கோள் என்ன? அதை அடைய நான் செய்து கொண்டிருக்கும் முயற்சி என்ன?' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை! இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் போது இறுதியில், அந்த `நான்' என்பதற்கான விடை உங்களுக்கு கிடைக்கிறது.

அப்போதுதான் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரோடு நாம் ஒன்றாயிருக்கிறோமா, அவருடைய அம்சமாக இருக்கிறோமா அல்லது வேறாக தனித்து இருக்கிறோமா என்று தெரியவரும். எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம்.

ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாக எண்ணத்தில் வைத்து, அப்படியே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால், மற்ற நினைவுகள் அகன்று விடும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மனவலிமையை பெற்று விடலாம். ஒவ்வொருவருடைய இயல்புக்கு தக்கவாறு தியான முறைகள் மாறுபடுகின்றன.

அகப்பயிற்சி செய்து வருபவர்கள் நேரடியாக ஆன்ம விசாரணையைத் தொடங்கலாம். இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், வேறு எந்த எண்ணங்களும் மனதில் எழுவதில்லை. ஒவ்வொரு வருடைய எண்ண அலைகளின் ஆற்றலானது அவற்றின் முக்கிய விருப்பத்திற்கேற்ப, நன்மை அல்லது தீமையை உண்டாக்கும்.

அதேபோல், அந்த எண்ணங்களைப் பற்றிய நினைப்பில் உள்ளவர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார், ரமணர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவன் செயல்களில் மட்டும் அல்லாது எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். "ஒரு பெண்ணைக் காமம் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் பாவம்.

அது அந்தப் பெண்ணுடன் கூடா ஒழுக்கம் கொள்வதற்குச் சமம்'' என்கிறார், இயேசு. நேரடியான ஆன்மவிசாரணைக்கு சிறந்த வழி, அதற்கு முதலில் நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்வது தான். நாம் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உலகம் மறைந்து விடுகிறது. எழும்போது மனம் விழித்துக் கொள்கிறது. அதனால், உலகம் வந்து விடுகிறது.

அதனால், உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகிறது. ஆனால், மனமற்ற ஆழ்ந்த தூக்க நிலையிலும் நாம் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த நிலையில் இருப்பதைப் போல நாம் எல்லா நிலைகளிலும், தொடர்ந்து இருக்கும்போது தான் தன்னை உணர முடியும்.

கண்களை மூடினால்... எடை குறையும்!

கண்களை மூடினால்... எடை குறையும்!

கண்களை மூடினால் உடல் எடை எப்படி குறையும்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஆனால் இது மனோதத்துவ முறை சிகிச்சையில் சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். இப்படி ஒரு புது மருத்துவ தெரபி, மும்பை, பெங்களூர், டெல்லி என பரவி, தற்போது சென்னையில் கால் பதித்துள்ளது.

மனோதத்துவ ரீதியான பயிற்சியினால், கண்களை மூடும்போது உள்ளத்தில் மாற்றம் நிகழும். அதுவே உடலில் வெளிக்காட்டப்பட்டு, எடை தானாக குறையும். மனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர். நாம் விழித்திருக்கும்போது மனது ஒரு மாதிரியாகவும், தூங்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும்.

ஆனால் மெய்மறந்த நிலையில் நாம் ஆழ்நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும். மருத்துவ ரீதியாக செய்யப்படும் இந்த ஹிப்னோதெரபியில் மனிதனின் இயல்பான மனம் விசுவரூபம் எடுக்கும்போது, அதன் விளைவுகளால் உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன.

இதை நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்ய வேண்டும். மன அழுத்தம் குறையும்போது உடல் சீராகி, எடையும் சீராகும்.

தியானம் விளக்கம்
தியானம் விளக்கம்

தியானம் செய்தல், உடல் நலத்தையும், மன அமைதியையும் தருகிறது. இதில் மிக முக்கியமானது ஆழ்நிலை தியானம்.ஆழ்நிலை தியானம் பதட்டத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு நினைவு திறனைக் கூட்டுகிறது.

புத்த சமயத்தில் புத்தரே வடிவமைத்த விபாசனா தியானம் தான், முதன்மையாக உள்ளது. சமண சமயத்தில் ஆழ்காட்சி தியானம் எனப்படும் பிரேக்ஷா தியானம் இன்றும் சிறப்பாக பேசப்படுகிறது.

இது மனதில் உள்ள வன்முறை எண்ணங்களை நீக்க உதவுகிறது. இப்பொழுது உள்ள வாழ்க்கை முறையில் தியான மற்றும் யோகா பயிற்சிகள் செய்வது உடலுக்கும்,மனதிற்கும் மிகவும் நல்லது