Monday, October 31, 2011

மழையால் வீடு இடிவதற்கு முன்பு குரைத்து நான்கு பேரை காப்பாற்றிய நாய்.

கோத்தகிரியில் நாய் ஒன்று 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் சங்கர். நேற்று முன்தினம் தாயும், மகனும் மண் சுவர் கொண்ட குடிசை வீட்டுக்குள் படுத்து தூங்கினர். கடந்த ஒரு வாரமாக கோத்தகரியில் கனமழை பெய்து வருவதால் அந்த குடிசை மழையில் நனைந்து வலுவிழந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 2 மணியளவில் கன மழை கொட்டித் தீர்த்தது.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த சரஸ்வதி வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து குரைத்தது. நாய் ஏன் இப்படி குரைக்கிறது என்று பார்க்க சரஸ்வதியும், அவரது மகனும் வீட்டுக்கு வெளியே வந்தனர். அப்போது வீ்ட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. தக்க நேரத்தில் வெளியே வந்ததால் தாயும், மகனும் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.

நாய் குரைத்திருக்காவிட்டால் 2 பேரும் வீட்டின் உள்ளே இருந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும். சரஸ்வதி வீட்டு நாய் குரைத்ததால் தூக்கம் கலைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன் மற்றும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது.

நாய் நன்றியுள்ள ஜீவன் என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

உலகின் 700வது கோடி குழந்தைகள் பிலிப்பைன்ஸிலும், இந்தியாவிலும் பிறந்தது.உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது.

முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.

2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி.

உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது!

இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை   திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்: வாழப்பாடியில் பரபரப்பு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களும் கூட ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் 500 வரை வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியையொட்டி, கல்ராயன்மலை கருமந்துறை சாலையில் துக்கியாம்பாளையம் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. மாரியம் மன்புதூர், மேலூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமத்தை உள்ளடக்கிய எஸ்.சி., இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கலைச் செல்வி, ராஜாமணி, ராமாயி, கலைமணி, பழனியம்மாள் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

அதில் மக்கள் நலப்பணியாளர் தனபால் மனைவி கலைச்செல்வி 1089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.100 வீதம் பணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அந்த வேட்பாளரின் கணவர், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று, எனக்கு யாரும் ஓட்டுபோட வில்லை அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் எனக்கூறி, வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை தோல்வியடைந்த வேட்பாளர் வீடு வீடாக சென்று வசூலித்து வருவதால், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் பீதியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இனி வரும் தேர்தல்களில் எந்த வேட்பாளரிடமும் பணம் வாங்கக்கூடாது எனவும் புலம்பி வருகின்றனர். அச்சம்பவம் துக்கியாம்பாளையம் மட்டுமின்றி வாழப்பாடி வட்டாரம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.