Monday, October 31, 2011

ஓட்டுக்குகொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை   திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்: வாழப்பாடியில் பரபரப்பு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களும் கூட ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் 500 வரை வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியையொட்டி, கல்ராயன்மலை கருமந்துறை சாலையில் துக்கியாம்பாளையம் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. மாரியம் மன்புதூர், மேலூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமத்தை உள்ளடக்கிய எஸ்.சி., இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கலைச் செல்வி, ராஜாமணி, ராமாயி, கலைமணி, பழனியம்மாள் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

அதில் மக்கள் நலப்பணியாளர் தனபால் மனைவி கலைச்செல்வி 1089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.100 வீதம் பணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அந்த வேட்பாளரின் கணவர், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று, எனக்கு யாரும் ஓட்டுபோட வில்லை அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் எனக்கூறி, வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை தோல்வியடைந்த வேட்பாளர் வீடு வீடாக சென்று வசூலித்து வருவதால், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் பீதியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இனி வரும் தேர்தல்களில் எந்த வேட்பாளரிடமும் பணம் வாங்கக்கூடாது எனவும் புலம்பி வருகின்றனர். அச்சம்பவம் துக்கியாம்பாளையம் மட்டுமின்றி வாழப்பாடி வட்டாரம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: