Wednesday, July 13, 2011

எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலம்.

’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற!


அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் எடுத்துக் கொள்ளும் சர்ச்சைக்குரிய கதை. இரண்டாவது அவரது தனித்துவமான சுவாரஸ்யமான திரைக்கதை.

’வாலி’ என்ற ரணகளமான படத்தின் மூலமே தன் கலையுலக வாழ்வைத் தொடங்கினார் சூர்யா. படத்தின் ஷூட்டிங்கின்போது தினமும் அஜித்-சிம்ரன் காம்பினேசனிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டன. உடன் பணியாற்றிய அனைவருக்குமே ஆச்சரியம் இது என்னடா படம் என்று. ‘அஜித் தெரியாமல் வந்து மாட்டிவிட்டார்’ என்றே பலரும் நினைத்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அண்ணன் அஜித்-சிம்ரன் - தம்பி அஜித்தே வருவார்கள். தனது வேகமான திரைக்கதையாலும் சுவாரஸ்யமான கேரக்டர்களாலும் அது நம்மை உறுத்தாமல் மறைத்தார் சூர்யா. ஜோதிகாவின் அறிமுகக்காட்சி போன்றவற்றில் வித்தியாசங்களைப் புகுத்தினார். படம் சூப்பர் ஹிட் ஆகியது.

தொடர்ந்து தோல்விகளால் சுருண்டு கிடந்த விஜய்யை வைத்து குஷி எடுத்தார். தமிழ்சினிமாவில் முதல்முறையாக ‘இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணப்போறாங்க. கடைசில சேரப் போறாங்க’ என்ற அரதப்பழசான கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தைக் கொண்டு சென்றார். கதையை கவட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு பலரும் திரிந்த நேரத்தில் தைரியமாக தியேட்டரில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸ்க்கு ‘இதான் கதை’யென்று சொல்லி திரைக்கதையில் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா.


எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்த முக்கியமான திறமை ரொமாண்டிக் & செக்‌ஷூவல் காமெடி. கே.பாக்கியராஜ் தவிர்த்து வேறு யாருமே தொடத் தயங்கிய, தொட்டு ஜெயிக்கமுடியாத விஷயம் செக்‌ஷூவல் காமெடி. அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்களை வைத்துக்கொண்டு, காமத்தைப் பிண்ணனியாக வைத்து குடும்பக் கதை சொல்வதில் வல்லவராய் திகழ்ந்தவர் பாக்கியராஜ். அதிர்ஷ்டவசமாக எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் கேஸ் போடும் கெட்ட பழக்கம் அவர் காலத்தில் இல்லாததால் தொடர்ந்து ஜெயித்தார் பாக்கியராஜ். அவரை விட செக்‌ஷுவல் காமெடியில் பல அடி பாய்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

உண்மையில் செக்‌ஷுவல் காமெடி என்பது கம்பி மேல் நடப்பது போன்று கடினமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அருவறுப்பாகி விடும்.

தமிழில் அத்தகைய முயற்சியைச் செய்யக்கூடிய திறமையும் தைரியமும் சூர்யாவிடம் இருந்தது. அதற்கான நிரூபணமாக ‘நியூ’ எடுத்தார். அதை ஒரு சயின்ஸ் ஃபிக்சனாக எடுத்தார். முதலில் அஜித்-ஜோதிகா நடிப்பதாக இருந்து, பயந்து போய் பின்வாங்கிய படம் நியூ. அதன்பிறகு அவரே கதாநாயகனாக ஆனார். அவரது தோழியான சிம்ரன் கதாநாயகியாக நடித்து அவருக்கு கை கொடுத்தார்.


’காமம் என்பது பெண்களை இழிவுபடுத்தும் விசயம். காமத்தைப் பற்றிப் பேசுபவன் பெண்ணிய விரோதி’ என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்ட காலகட்டம் இது. ஆனால் செக்‌ஷுவல் காமெடி என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல. நமது பண்டைய கலைகளான கரகாட்டம், குறவன் -குறத்தி ஆட்டம் போன்றவை காமத்தை அடிப்படையாகக் கொண்டவையே.

இரட்டை அர்த்த வசனங்களும் செக்‌ஷுவல் காமெடியும் நிறைந்த கலைகளையே எளிய மனிதர்கள் வாழும் கிராமங்கள், தங்கள் திருவிழாக்களில் கண்டு மகிழ்ந்தனர். இன்றும் அது தொடரவே செய்கின்றது. ஆனால் நாகரீக மனிதர்களான நமக்கு காமத்தைக் கண்டால் வெறுப்பே வருகின்றது!

எஸ்.ஜே.சூர்யா தமிழ்ச்சமுதாயத்தின் கலைகளும், ஹாலிவுட் படங்களும் சொன்ன அதே விசயத்தை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றார். அதனாலேயே கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தார். அநேகமாக இந்திய சினிமா வரலாற்றில் சென்சார் சர்ட்டிஃபிகேட் ரத்து செய்யப்பட்ட ஒரே படம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ தான். ஆனால் தமிழ்சினிமாவில் வெளிவந்த முழுநீள செக்‌ஷுவல் காமெடிப் படமான நியூ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கெடுப்பதாக கூக்குரல் எழுந்தது. நீதிமன்றதிற்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா.

அதனை அடுத்து அவர் எடுத்த ‘அன்பே ஆருயிரே’வில் அவரது ஃபிட்னெஸ் கொஞ்சம் குறைந்தது. அதிலும் வித்தியாசமான திரைக்கதையை எடுத்தார், வழக்கம்போல் கதையைச் சொல்லிவிட்டு.

எஸ்.ஜே.சூர்யா என்ற சிறந்த இயக்குநர், திரைக்கதையாசிரியர் செய்த ஒரே தவறு, ஹீரோவாக தொடர்ந்து நடித்தது தான். அதனால் அற்புதமான இயக்குநரை இழந்தோம் நாம். கள்வனுன் காதலி, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி; போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், ஒரு நடிகராக அவர் பரிணமிக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக ‘புலி’ என்ற தெலுங்குத் தோல்விப்படத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நிற்கின்றது இந்த திரைக்கதைப் புலி.

ஷங்கரின் ‘நண்பன்(த்ரீ இடியட்ஸ்)’ படத்தில் கெஸ்ட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அவரே நடித்து ஒரு படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. இடையே விஜய்யை வைத்து அடுத்த படம் செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் உறுதியாக, தெளிவாகத் தெரியவில்லை.


ஹீரோவாக நடிக்காமல், வெறும் இயக்குநராக மட்டும் களம் இறங்கினால் பல வித்தியாசமான படங்களைத் தர எஸ்.ஜே.சூர்யாவால் முடியும். எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு திறமை இசை பற்றிய நுண்ணறிவு. அவரது படங்களின் பாடல்களில் இது நன்றாக வெளிப்படும்.

திரைப்படம் என்பது ’தாத்தா-பாட்டி-அப்பா-அம்மா-சித்தப்பா-சித்தி-பெரியப்பா-பெரியம்மா-மகன்-மகள்-அண்ணன் -தம்பி-அக்கா-தங்கச்சி-வீட்டு நாய்க்குட்டி’ என குடும்பம் சகிதம் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்று இன்னும் நம்பும் ஒரு முன்னேறிய சமுதாயத்தால் எஸ்.ஜே.சூர்யாவை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இழப்பு தமிழ்சினிமாவிற்கே.இன்னும் பல எக்ஸ்பரிமெண்ட்களை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பார். அதற்கு முன் அவரது படைப்புணர்வு காயடிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவிற்கு எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பு என்னவென்றால் ஒரு கமர்சியல் படத்துக்குக் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையே உயிர்நாடி என்று பொட்டில் அடித்தாற்போல் தன் படங்களின் மூலம் நிரூபித்ததும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு செக்‌ஷுவல் காமெடிப் படத்தை நமக்குக் கொடுத்ததுமே!

sengovi.blogspot.com

ஸ்பெக்ட்ரம் வழக்கு:தயாநிதிமாறனுக்கு எதிராக 12 சாட்சியங்கள் பதிவு.



ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. தயாநிதி மாறனுக்கு எதிராக ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ. முன் ஆஜராகி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

தயாநிதிமாறன் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்த போது ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும், இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும் குறுகிய காலத்தில் ஏர்செல்லுக்கு லைசென்ஸ்கள் வழங்கப் பட்டதாகவும், இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதிமாறன் குடும்பத்தினர் நடத்தும் சன் டைரக்டில் முதலீடு செய்ததாகவும் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாநிதி மாறனையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது. இதனால் தயாநிதிமாறன் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியதையடுத்து தயாநிதி மாறன் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகினார். நேற்று அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதில் சி.பி.ஐ. தீவிரமாக இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக தயாநிதி மாறனுக்கு எதிராக சாட்சியங்களை சி.பி.ஐ. பதிவு செய்து வருகிறது. 2004 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றிய அதிகாரிகள், தொலை தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் உள்பட 12-க்கும் மேற்பட்ட சாட்சியங்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றச் சாட்டுகளை கூறியுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் ஏரியாக்களுக்கு லைசென்ஸ் கேட்டு எப்போது விண்ணப்பங்கள் வந்தன? அதற்கு எவ்வளவு காலம் தாமதப் படுத்தப்பட்டது. அதன் பிறகு எப்போது லைசென்ஸ் வழங்கப்பட்டது என்பது போன்ற பைல்களை கையாண்ட தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் அதுபற்றிய முழு விவரங்களை சி.பி.ஐ.யிடம் தெரிவித்துள்ளனர்.

ஏர் செல்லுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக தங்களது சிபாரிசுகளை தயாநிதிமாறன் நிராகரித்து தன்னிச்சையாக செயல்பட்டதாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் சி.பி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 2001-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சிவராஜ்பட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. அதில் தயாநிதிமாறன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. எனவே இது தொடர்பாக விரைவில் தயாநிதி மாறனுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்.

ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு    எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்;    டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய்கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப்பாதையில் அதிக தொலைவில் அமைந்துள்ளது. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்களைப் போலவே, நெப்டியூன் கோளும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண்காணித்து கணக்கிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு கோளும், தொடக்க புள்ளியில் இருந்து சூரியனை சுற்றி அதே புள்ளியை வந்தடைய குறிப்பிட்ட காலங்களை எடுத்துக் கொள்ளும். பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து, இன்னும் முதல் சுற்றையே பூர்த்தி செய்யவில்லை.

வருகிற டிசம்பருக்குள் தனது முதல் சுற்றை நெப்டியூன் பூர்த்தி செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில் சூரியனை ஒருமுறை சுற்றிவர இந்த கோளுக்கு 1,168 ஆண்டுகள் பிடித்துள்ளது உறுதிப்படுத்தப்படும்.

இந்த கோள் 1846-ல் ஜூலை 13-ம் தேதி, இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இதன் கண்டு பிடிப்பு தினம், நாளை உலகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பவர் ஆப் அட்டர்னிக்கான கட்டணம் 10 மடங்காக உயர்த்தப்பட்டது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பவர் ஆப் அட்டர்னி வழங்கும் ஆவணத்திற்கான கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஒரு சொத்தின் உரிமையாளர் தனது சொத்தை விற்கவோ அல்லது பராமரிக்கவோ குடும்ப உறுப்பினர் அல்லது வேறு யாருக்காவது உரிமை அளிப்பது தான் பவர் ஆப் அட்டர்னி. இதற்கான கட்டணத்தை தற்போது அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது,

இதுவரை குடும்ப உறுப்பினர்களுக்கு பவர் ஆப் அட்டர்னி வழங்குவதற்கு வெறும் ரூ. 100 தான் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பவர் ஆப் அட்டர்னி வழங்க இதுவரை ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது இனி ரூ. 10 ஆயிரமாக வசூலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உரிமை ஆவணங்கள் வைப்பு உடன்படிக்கை ஆவணம் (டெபாசிட் ஆப் டைட்டில்ஸ்) பதிவுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

குத்தகை ஆவணம் (லீஸ்) அதிகபட்ச பதிவுக்கட்டணம் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

திமுகவுக்காக அமைச்சரவையில் 2 இடங்களை ஒதுக்கி வைத்துள்ளேன் - பிரதமர்.



லோக்சபா தேர்தலை நாங்கள் சந்திப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டுள்ள கடைசி பெரிய அமைச்சரவை மாற்றம் இது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இதுதான் லோக்சபா தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கடைசி பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றமாக இருக்கும் என நம்புகிறேன்.

மாநில பிரதிநிதித்துவம், திறமை ஆகியவற்றுக்கு சம அளவிலான வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

திமுகவுக்காக 2 இடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் தங்களது முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.