Wednesday, July 13, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கு:தயாநிதிமாறனுக்கு எதிராக 12 சாட்சியங்கள் பதிவு.



ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. தயாநிதி மாறனுக்கு எதிராக ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ. முன் ஆஜராகி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

தயாநிதிமாறன் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்த போது ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும், இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும் குறுகிய காலத்தில் ஏர்செல்லுக்கு லைசென்ஸ்கள் வழங்கப் பட்டதாகவும், இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதிமாறன் குடும்பத்தினர் நடத்தும் சன் டைரக்டில் முதலீடு செய்ததாகவும் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாநிதி மாறனையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது. இதனால் தயாநிதிமாறன் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியதையடுத்து தயாநிதி மாறன் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகினார். நேற்று அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதில் சி.பி.ஐ. தீவிரமாக இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக தயாநிதி மாறனுக்கு எதிராக சாட்சியங்களை சி.பி.ஐ. பதிவு செய்து வருகிறது. 2004 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றிய அதிகாரிகள், தொலை தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் உள்பட 12-க்கும் மேற்பட்ட சாட்சியங்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றச் சாட்டுகளை கூறியுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் ஏரியாக்களுக்கு லைசென்ஸ் கேட்டு எப்போது விண்ணப்பங்கள் வந்தன? அதற்கு எவ்வளவு காலம் தாமதப் படுத்தப்பட்டது. அதன் பிறகு எப்போது லைசென்ஸ் வழங்கப்பட்டது என்பது போன்ற பைல்களை கையாண்ட தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் அதுபற்றிய முழு விவரங்களை சி.பி.ஐ.யிடம் தெரிவித்துள்ளனர்.

ஏர் செல்லுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக தங்களது சிபாரிசுகளை தயாநிதிமாறன் நிராகரித்து தன்னிச்சையாக செயல்பட்டதாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் சி.பி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 2001-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சிவராஜ்பட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. அதில் தயாநிதிமாறன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. எனவே இது தொடர்பாக விரைவில் தயாநிதி மாறனுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

No comments: