Sunday, June 26, 2011

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய சிங்களப் படை - தடுத்த இந்திய கடற்படை.கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க வந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்து அவர்களைப் பிடிக்கவும் முயன்றனர். ஆனால் அப்போது இந்தியக் கடற்படை ரோந்துக் கப்பல் அங்கு வரவே பின்வாங்கிச் சென்று விட்டனர் சிங்களப் படையினர்.

தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்தபடி உள்ளது இலங்கைக் கடற்படை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய முறையில் செய்யாமல் மெத்தனமாக இருக்கிறது மத்திய அரசு.

சமீபத்தில் 23 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று விட்டது. இதனால் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சிகள் காரணமாக 23 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 600 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்து தமிழக மீனவர்கள் பீதியடைந்தனர். அங்கு வந்த இலங்கைப் படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். அவர்களைப் பிடிக்கவும் முயற்சித்தனர். அந்த சமயம் பார்த்து இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பல் ரோந்து வரவே, சிங்களப் படையினர் பின்வாங்கி திரும்பிச் சென்றனர்.

சிங்களப் படை சென்றதும், இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்தனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலையில் கரைக்குத் திரும்பினர். இந்தியக் கடற்படைக் கப்பல் தங்களுக்கு தக்க சமயத்தி்ல பேருதவியாக வந்ததாக மீனவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நான்கு நாட்களாக கடலுக்குள் போகாமல் இருந்து சென்றதால் பெருமளவில் மீன்கள் கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.

பேப்பர் பயன்பாட்டை குறைக்க எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் : மத்திய அரசே வழங்குகிறது.

பேப்பர் பயன்பாட்டை குறைக்க பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: மத்திய அரசே வழங்குகிறது

பாராளுமன்ற கூட்டத் தொடர்களின் போது, பாராளுமன்ற பணிகள், அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் போன்றவை காகிதத்தில் அச்சிடப்பட்டு எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகிறது. பெரிய கட்டுகளாக இவை இருப்பதால், எம்.பி.க்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், பேப்பர் செலவுகளும் அதிகமாகிறது.

பேப்பர் பயன்பாட்டை குறைத்து சீரமைக்கவும், செலவையும் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதில் எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் வாங்குவதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பம் கொண்ட இந்த கம்ப்யூட்டரில், கீ-போர்டை பயன்படுத்த தேவை இல்லை. தொடுதிரை மூலம் அன்றைய தினத்தின் கேள்விகள் பட்டியலை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். எம்.பி.க்கள் பாராளுமன்ற செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என, ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான் தெரிவித்தார். கையடக்க கம்ப்யூட்டரை இயக்க எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தடுப்பு சுவரை இடித்து தனியார் பஸ் மீது மோதிய ஆம்னி பஸ் - 9 பேர் பலி.

தடுப்பு சுவரை இடித்து    தனியார் பஸ் மீது மோதிய    ஆம்னி பஸ்-9 பேர் பலி

சேலம் புதிய பஸ் நிலை யத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு 10-15 மணியளவில் ஒரு தனியார் பஸ் தர்மபுரி நோக்கி சென்றது. பண்ணப்பட்டி என்ற ஊருக்கு அருகே சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, எதிரே பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ராஜேந்திரன் என்பவர் மொபட்டில் பிரிவு ரோட்டில் இருந்து அதிவேமாக மெயின் ரோட் டிற்கு வந்தார்.

இதைப் பார்த்த ஆம்னி பஸ் டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது தனியார் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. 2 பஸ்களின் முன்பகுதியும் ஒன்றுடன் ஒன்று சிக்கி கொண்டது. இந்த பயங்கர விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த 9 உடல்களையும் போலீசார் மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை சேலம், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகள், மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். விபத்தில் இறந்த 9 பேரில் 8 பேரின் அடையாளம் தெரியவந்ததுள்ளது.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. பிஜூவில்சன் (42) கர்நாடகா பஸ் டிரைவர். கேரள மாநிலம் திருச்சூர்.
2. பாக்கியராஜ் (25), சேலம் - தர்மபுரி, தனியார் பஸ் டிரைவர். தீவட்டிப்பட்டி.
3. சின்னத்தம்பி (40) தொப்பூர்.
4. கமலக்கண்ணன் (38) தாசசமுத்திரம், தீவட்டிப்பட்டி.
5. கமல்பாட்சா (60) பெங்களூர்.
6. தில்சா பேகம். (கமல் பாட்சாவின் மனைவி)
7.சண்முகசுந்தரம் (37) தர்மபுரி,
8. ராஜா (16) கஞ்சநாயக்கன்பட்டி
9. 50 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்று தெரியவில்லை. மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டது. விபத்து பற்றி அறிந்ததும் அமைச்சர்கள் இடைப்பாடி பழனிச்சாமி, உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லி, எம்.எல்.ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், பாஸ்கரன் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஊழல், கறுப்பு பணம் விவகாரம் : அன்னாஹசாரே, ராம்தேவ் மீண்டும் போராட்டம் ; மாநிலம் வாரியாக செல்ல முடிவு.

ஊழல், கறுப்பு பணம் விவகாரம்: அன்னாஹசாரே, ராம்தேவ் மீண்டும் போராட்டம் ; மாநிலம் வாரியாக செல்ல முடிவு

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூட்டுக் குழு அமைத்தது. 9 தடவை இந்த குழு கூடியும் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

அதுபோல கறுப்பு பணத்தை மீட்க யோகாகுரு பாபாராம்தேவ் டெல்லியில் கடந்த 4-ந்தேதி நடத்திய உண்ணாவிரதமும் முறியடிக்கப்பட்டது. ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக அன்னாஹசாரே, பாபாராம்தேவ் இருவரும் மீண்டும் போராட்டத்தில் குதிக்க தீவிரமாகி வருகிறார்கள்.

அடுத்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி முதல் டெல்லியில் கறுப்பு பணத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாபாராம்தேவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது என்னுடைய சட்டரீதியான, ஜனநாயக கடமை. அந்த மாற்றத்தை செய்வது தர்மமாகும். எனது இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டேன். எனது திட்டத்தில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளேன் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், யோகாவும், ஆன்மீகமும் நிச்சயம் அரசியலை மாற்றும். கறுப்பு பணம் நிச்சயம் மீட்கப்படும் என்றார். ஜூலை 26-ந்தேதி போராட்டத்துக்கு திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காந்தியவாதி அன்னா ஹசாரே ஆகஸ்டு 16-ந்தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். வரும் 5, 6-ந்தேதிகளில் டெல்லியில் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலுக்கு எதிராக நடத்த வேண்டிய தொடர் போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.

அதன்பிறகு அன்னா ஹசாரே ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட உள்ளார். முக்கிய நகரங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இது நாடெங்கும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இதற்கிடையே முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சிகளில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பா.ஜ.க. தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ்கரத்தை சந்தித்து பேசி உள்ளனர்.

அடுத்தக்கட்டமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ஏ.பி.பரதன் ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

பல லட்சம் தமிழர்களை கொன்றழித்த ராஜபக்சே கொல்லப்பட வேண்டும் - வைகோ.பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றழித்த ராஜபக்சே கொல்லப்பட வேண்டும் என்று மதிமுக வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் கூறப்பட்டது.

திருச்சியில் மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் அணி மாநாடு நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். பலர் பேசினர். 21 தலைப்புகளில் வழக்கறிஞர்கள் பேசினர். ஈழப் பிரச்சினை குறித்துதான் அதிகம் பேசப்பட்டது.

வைகோ பேசுகையில்,

நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம் இழைக்கப் பட்டபோது கழக வழக்கறிஞர்கள் நீங்கள் தான் தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னீர்கள் மிக துணிவான முடிவு உங்களால் தான் எடுக்க முடிந்தது.நமது இயக்கத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டது.

நாம் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளம். ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். எத்தனையோ கஷ்டங்களை சந்தித்துவிட்டோம்...இனி நமக்கு வசந்தம் வீசும்.

தனி நாடு கேட்டார் பெரியார், சுயாட்சி கேட்டார் அண்ணா, நாங்கள் அப்படி கேட்கவில்லை..ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்.

ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன் , இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது. நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிர குரல் கொடுக்கவில்லையே . எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான். ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.

குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு . என் தமிழக மீனவன் இலங்கை சிங்கள அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு.

சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது. பல கொடுமைகள் நடத்தப்படும் காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது..இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா..?

இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொள்கிறார்கள் .அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள். ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள். இதற்க்கு தீர்வு என்ன. சுதந்திரமான தனி ஈழம் தான்..அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும். என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்..

உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாக்கினீர்கள். ஈழம் எப்போது....?

சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள். நாம் என்ன தவறு செய்தோம், தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா ? என்றார்.

மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசுகையில், ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை. புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும் ..... தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.

இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா. எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும்....பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும் என்றார்.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம் : மருத்துவர்கள் தகவல்.தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை (ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.

புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு !
சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.

கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.

சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பின்னர் மறைவதற்கும் அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும். மறைய ஆரம்பிக்கும் கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.

கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிக்குள் கூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.

சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.

சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.

இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.

இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.

இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.

1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.

பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.

பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸ 2011-ம் ஆண்டு சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.

நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.

உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.

சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.

சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.

அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.

சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.

விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.