Monday, December 19, 2011

சனி பெயர்ச்சி சசி பெயர்ச்சியாகிவிட்டது : எஸ்.வி.சேகர் .



அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகரும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அதிமுக உறுப்பினருமான எஸ்.வி.சேகரிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்து கேட்டது.


இதற்கு பதில் அளித்துப் பேசிய அவர், ஜெயலலிதா அவர்கள் உற்ற தோழி, நெருங்கிய தோழி என்ற பதவியை எடுக்கவில்லை. உற்ற தோழியாக இருக்கலாம். நெருங்கிய தோழியாக இருக்கலாம். அவர்கள் அறிவித்திருப்பது என்னவென்றால், அதிமுகவில் இருக்கக் கூடிய பதவியை பறித்திருக்கிறார்கள். இல்லத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற்றப்படவில்லை. இல்லத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பே வெளியே போய்விட்டதாக சொல்லுகிறார்கள். அதைப்பற்றி பேசத்தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரை அதிமுகவில் இருந்து ஒரு பவர் செக்டராக இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இது என்றைக்கோ நடக்கும் என்று பலபேர் எதிர்பார்த்தார்கள். பலபேர் சாபமிட்டார்கள். பலபேர் இதுநடக்காதா என ஏங்கினார்கள். அது இன்று நடந்திருக்கிறது. நாளைக்கு சனி பெயர்ச்சி. அது சசி பெயர்ச்சியாகிவிட்டது என்றார்.

சசிகலா நீக்கப்பட்டதிற்காக, பட்டாசு வெடித்துக் கொண்டாடுபவர்கள் யார்?


சசிகலா மற்றும் குடும்பத்தினர் கூண்டோடு அதிரடியாக நீக்கப்பட்டது, அ.தி.மு.க.-வில் பெரிய உற்சாக அலையையே ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அ.தி.மு.க.-வினரில் மனநிலை எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட அதே மனநிலையுடன் வீதிகளில் அ.தி.மு.க.-வினரைக் காணக்கூடியதாக உள்ளது.

அநேக நகரங்களில் நிலைமை அப்படித்தான் உள்ளது. போயஸ் கார்டனுக்கு வெளியேயும் ஆனந்தத்துடன் கோஷம் எழுப்பும் தொண்டர்களை இன்று மாலைவரை காணக்கூடியதாக இருந்தது.

மொட்டை போடும் தொண்டர்கள், பட்டாசு கொளுத்தும் ஆட்கள், ஸ்வீட் கொடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் என்று புகுந்து விளையாடுகின்றனர் அ.தி.மு.க.-வினர். ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியானதும், ஆரம்பத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த சில மாவட்டச் செயலாளர்களும், தகவல் உண்மைதான் என்று உறுதியானதும் வாய் நிறையப் பல்லாகக் காணப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. வட்டாரங்களில் சிலருடன் பேசியபோது, “எதை எடுத்தாலும் பணம்.. பணம்.. என்று ரேட் பேசிக்கொண்டிருந்தார்கள். கட்சியில் இருப்பதற்கே சங்கடமாகக்கூட இருந்தது. கடந்த ஆட்சியில் தி.மு.க.-வினரோடு ஒன்றாகத் திரிந்தவர்கள் எல்லாம், தி.மு.க. ஆட்சியில் சுட்ட பணத்தில் ஒரு பகுதியை மன்னார்குடி குடும்பத்தில் யாருக்காவது கொடுத்துவிட்டு, இந்த ஆட்சியிலும் பணம் பண்ணத் தொடங்கிய கொடுமைதான் உச்சக்கட்டம்” என்றார்கள்.

அ.தி.மு.க. என்ற கட்சியில் முகம் தெரியப்பட்ட எல்லோருமே, ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு தொகையாவது மன்னார்குடி குடும்பத்தில் ஏதாவது ஒரு நபருக்கு ஏதோ ஒரு வகையில் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்! சீனியாரிட்டி அல்லது பாபுலாரிட்டியில் பதவிக்கு வருவதற்கும் பைசா கொடுக்க வேண்டியிருந்திருக்கிறது.

“அடாடா.. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முடிவை எடுத்திருந்தா நல்லாயிருக்குமே” என்று அங்கலாய்ப்பவர்களில் பலர், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அ.தி.மு.க. டிக்கெட்டில் போட்டியிட்டவர்கள்! சில மேயர் வேட்பாளர்கள் உட்பட பலரும் பணம் கொடுத்தே சீட் வாங்கியிருக்கிறார்கள்.

சின்னம்மா நீக்கப்பட்டார் என்றவுடன், இந்தக் கதையெல்லாம் இப்போது வெளியாகின்றது.

உதாரணமாக, தென்மாவட்ட தற்போதைய மேயர் ஒருவர் 4-கோடி கொடுத்தார் என்கிறது ஒரு தகவல். அவரது, ‘பழைய தொழில்’ பற்றி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அம்மா வரை போகாமல் செய்வதற்கான அன்பளிப்புதான் 4-கோடி.

4-கோடி கொடுத்த இன்னாள் மேயரின், முன்னாள் தொழில்.. வேறு என்ன, கட்டப் பஞ்சாயத்துதான்! இதுபோல பலரும் ‘சின்னம்மாவால் தூய்மைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்!

அவர்கள் எல்லாம் மிக எளிதாக பைசாவிற்காக பதவி வணிகம் நடைபெற்றபோது, வெளியேயிருந்து பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்த உண்மைத் தொண்டர்கள் பலர்தான், இன்று பட்டாசு வெடிப்பவர்கள்!

சசிகலாவும் 69 எம்.எல்.ஏக்களும், ஜெயலலிதா அதிரடி முடிவு.



அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா 19.12.2011 வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)

2. ம.நடராஜன்

3. திவாகர் (மன்னார்குடி)

4. டி.டி.வி. தினகரன்

5. வி. பாஸ்கரன்

6. வி.எம்.சுதாகரன்

7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்

8. எம்.ராமச்சந்திரன்

9. ராவணன்

10. மோகன் (அடையாறு)

11. குலோத்துங்கன்

12. ராஜராஜன்

13. மகாதேவன்

14. தங்கமணி

ஆகியோர் இன்று (19.12.2011) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிக்கையில் கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையால் சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்படவிருப்பதை முன்னரே அறிந்த சசிகலா 2 ஸ்கார்பியோ கார்களில் தனது உடைமைகளுடன் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டம்

அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா முக்கிய அதிகார மையமாக உருவெடுத்து பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் சமுகமான முக்குளத்தோர் சமுகத்தை சார்ந்த எம்.எல்.ஏ வினர் 69பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்



சசிகலாவின் அதிகாரத் தலையீடு

உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.

உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அவரது செயல்பாடுகள் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து பொன் மாணிக்கவேலை தூக்கினார். இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.

அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.




ஜெ. வீடு, அதிமுக அலுவலகம் முன்பு இனிப்பு வழஙகி கட்சியினர் மகிழ்ச்சி.

சென்னையில் ஜெயலலிதாவின் இல்லம் முன்பு கூடிய அதிமுகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். அதிமுக தலைமை அலுவலகம் முன்பும் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டிவனம், உளுந்தூர் பேட்டை, விழுப்புரத்திலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்து கொண்டாடினர்.

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை வரவேற்று, உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் பழனிவேலு, நகர செயலாளர் துரை, ஒன்றிய சேர்மேன் பாலு உள்பட அதிமுகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர், உளுந்தூர் பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஜெயலலிதா, சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா?

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.