Monday, December 19, 2011

சசிகலா நீக்கப்பட்டதிற்காக, பட்டாசு வெடித்துக் கொண்டாடுபவர்கள் யார்?


சசிகலா மற்றும் குடும்பத்தினர் கூண்டோடு அதிரடியாக நீக்கப்பட்டது, அ.தி.மு.க.-வில் பெரிய உற்சாக அலையையே ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அ.தி.மு.க.-வினரில் மனநிலை எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட அதே மனநிலையுடன் வீதிகளில் அ.தி.மு.க.-வினரைக் காணக்கூடியதாக உள்ளது.

அநேக நகரங்களில் நிலைமை அப்படித்தான் உள்ளது. போயஸ் கார்டனுக்கு வெளியேயும் ஆனந்தத்துடன் கோஷம் எழுப்பும் தொண்டர்களை இன்று மாலைவரை காணக்கூடியதாக இருந்தது.

மொட்டை போடும் தொண்டர்கள், பட்டாசு கொளுத்தும் ஆட்கள், ஸ்வீட் கொடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் என்று புகுந்து விளையாடுகின்றனர் அ.தி.மு.க.-வினர். ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியானதும், ஆரம்பத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த சில மாவட்டச் செயலாளர்களும், தகவல் உண்மைதான் என்று உறுதியானதும் வாய் நிறையப் பல்லாகக் காணப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. வட்டாரங்களில் சிலருடன் பேசியபோது, “எதை எடுத்தாலும் பணம்.. பணம்.. என்று ரேட் பேசிக்கொண்டிருந்தார்கள். கட்சியில் இருப்பதற்கே சங்கடமாகக்கூட இருந்தது. கடந்த ஆட்சியில் தி.மு.க.-வினரோடு ஒன்றாகத் திரிந்தவர்கள் எல்லாம், தி.மு.க. ஆட்சியில் சுட்ட பணத்தில் ஒரு பகுதியை மன்னார்குடி குடும்பத்தில் யாருக்காவது கொடுத்துவிட்டு, இந்த ஆட்சியிலும் பணம் பண்ணத் தொடங்கிய கொடுமைதான் உச்சக்கட்டம்” என்றார்கள்.

அ.தி.மு.க. என்ற கட்சியில் முகம் தெரியப்பட்ட எல்லோருமே, ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு தொகையாவது மன்னார்குடி குடும்பத்தில் ஏதாவது ஒரு நபருக்கு ஏதோ ஒரு வகையில் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்! சீனியாரிட்டி அல்லது பாபுலாரிட்டியில் பதவிக்கு வருவதற்கும் பைசா கொடுக்க வேண்டியிருந்திருக்கிறது.

“அடாடா.. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முடிவை எடுத்திருந்தா நல்லாயிருக்குமே” என்று அங்கலாய்ப்பவர்களில் பலர், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அ.தி.மு.க. டிக்கெட்டில் போட்டியிட்டவர்கள்! சில மேயர் வேட்பாளர்கள் உட்பட பலரும் பணம் கொடுத்தே சீட் வாங்கியிருக்கிறார்கள்.

சின்னம்மா நீக்கப்பட்டார் என்றவுடன், இந்தக் கதையெல்லாம் இப்போது வெளியாகின்றது.

உதாரணமாக, தென்மாவட்ட தற்போதைய மேயர் ஒருவர் 4-கோடி கொடுத்தார் என்கிறது ஒரு தகவல். அவரது, ‘பழைய தொழில்’ பற்றி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அம்மா வரை போகாமல் செய்வதற்கான அன்பளிப்புதான் 4-கோடி.

4-கோடி கொடுத்த இன்னாள் மேயரின், முன்னாள் தொழில்.. வேறு என்ன, கட்டப் பஞ்சாயத்துதான்! இதுபோல பலரும் ‘சின்னம்மாவால் தூய்மைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்!

அவர்கள் எல்லாம் மிக எளிதாக பைசாவிற்காக பதவி வணிகம் நடைபெற்றபோது, வெளியேயிருந்து பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்த உண்மைத் தொண்டர்கள் பலர்தான், இன்று பட்டாசு வெடிப்பவர்கள்!

No comments: