Monday, December 5, 2011

மார்ஜரி ஆசனம், புஜங்காசனம், பூர்ண புஜங்காசனம்.

மார்ஜரி ஆசனம்.
மார்ஜரி ஆசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி, வஜ்ராசனத்தில் அமரவும். இரு கைகளையும் தேவையான தூரத்தில் முழங்காலுக்கு இணையாக நிலைநிறுத்துங்கள். விரல்கள் மட்டும் தரையில் உள்ளங்கைகள் பதிய மேல்நோக்கி இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து தோள் பட்டைவரை உள்ள முதுகு எலும்பை மேல்நோக்கி உடம்பை உயர்த்தவேண்டும்.

ஒவ்வொரு முதுகுதண்டு - எலும்பையும் மனக்கண்ணால் நினைத்து பார்த்து , அத்தனையை யும் கீழே இறக்கும் வகையில், தலையை மேல்நோக்கி தூக்கவேண்டும். இவைகளை மேலும் - கீழுமாக மாற்றி மாற்றி, இயல்பான சுவாசத்தில் 20 முறை செய்யவேண்டும். அதற்குப் பிறகு, பழைய நிலைக்கு திரும்பிவிடலாம்.

குறிப்பு:

மார்ஜரி ஆசனத்தை பரபரப்போடு செய்யக்கூடாது. அப்படி செய்தால் முதுகுவலி, பிடரி வலி ஆகிய அவதிகள் வந்துசேரும்.

பயன்கள்:

பெருந்தொந்தி, வாயுக்கோளாறு நீங்கும். நரம்பு நோய்கள் அணுகாது. முதுகு வலி, பிடரி வலி, இடுப்பு பிடிப்பு நீங்க மிகச்சிறந்த ஆசனம்!



புஜங்காசனம்.
புஜங்காசனம்

செய்முறை:

விரிபில் குப்புறப்படுத்த நிலையில் இரு கைகளையும் தோள்பட்டைக்கு அடியில் வையுங்கள். இயல்பான சுவாசத்தில் முகத்தை நிமிர்த்தி, கைகளை சற்று அழுத்தவும். தோள் பகுதியை மேலே தூக்குங்கள். இரு கால் பாதங்களும் இணைந்தே இருக்கட்டும். உள்ளங்கை-தோள்பட்டைவரை சமப்பகுதி நேர்க்கோட்டுக்கு வருமாறு, அவரவர்களுக்கு எந்த அளவு செய்யமுடியுமோ, அந்தளவுக்கு செய்வது நல்லது.

பயன்கள்:

மார்பெலும்பு விரியும். பிராணசக்தி உடம்பில் அதிகம் சேரும். இடுப்பு பகுதி சுருங்கும். செரிமான கோளாறு வராது. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிவயிற்று பிரச்சினைகள் தீரும்.


பூர்ண புஜங்காசனம்.
பூர்ண புஜங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி குப்புறபடுத்து, இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கட்டிப்பிடியுங்கள். மூச்சை இயல்பாக உள்ளே நிறுத்தி, கால் - அடித்தொடையில் அழுத்தவும். உடம்பின் முன்பகுதியை தூக்க கைகளை ஊன்றாமல், `படம் எடுத்த நாகம் போல' நன்கு மேலே எழும்பவேண்டும். அதே சமயத்தில் இரு கால்களும் தரையோடு அழுந்தி இருக்கட்டும். அதற்கு பிறகு அந்தந்த பக்க கையால், முழங்கால் பகுதியை பிடிக்கவேண்டும்.

பயன்கள்:

அடிவயிற்று தசைகள் பலம் பெறும். சிறுநீரக பிரச்சினை வராது. நுரையீரல் நன்கு இயங்கும.