Tuesday, June 21, 2011

பள்ளிக் கல்வி தேர்வுத்துறை இயக்குநரை கைது செய்ய சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் 2008ஆம் ஆண்டு சங்ககிரி அருகே உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

ராஜேஸ்வரியின் +2 மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அரசு தேர்வு துறை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்த உயர்நீதிமன்றம் +2 தேர்வில் வெற்றி பெற்றது செல்லும் என்றும், ராஜேஸ்வரி இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வை எழுத அனுமதிக்கும்படியும் அரசு தேர்வுதுறை இயக்குநருக்கு உத்தரவிட்டது.

அதன்படி 2008ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ராஜேஸ்வரி தேர்ச்சி பெற்றார். ஆனால் ராஜேஸ்வரிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் வழங்காமல் அரசு தேர்வு துறை இயக்குநரகம் இழுத்தடித்தது.

இந்நிலையில் சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு சான்றிதழை பெற்றுத் தரும்படி ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். ஜூன் மாதம் 16ஆம் தேதிக்குள் ராஜேஸ்வரிக்கு சான்றிதழும், வழக்கு செலவு தொகை 6 ஆயிரம் ரூபாயும், அரசு தேர்வு துறை உடனடியாக வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனாலும் அரசு தேர்வு துறை இயக்கநர் அலுவலகம் அவருக்கு சான்றிதழும், 6 ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் கொடுக்காததால் அரசு தேர்வு துறை இயக்குநரை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துமாறு சேலம் நுகர்வோர் மன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

சமச்சீரற்ற கல்வியும் சர்வாதிகார அரசும் .

"முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்கிற பழமொழிக்கு ஏற்ப.. தமிழகத்தில் துக்ளக் தர்பார் தொடங்கி விட்டது. "ஒரு அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது” என்றார் நபிகள் நாயகம். நிகழ்காலத் தவறுகளின் மீதுள்ள கோபத்தில், கடந்த காலத் தவறு ஆட்சிக்கு வந்துள்ளது.

தன்னை மகாராணியாக கருதிக்கொள்ளும் ஜெயலலிதாவிற்கு, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை நினைவுப்படுத்த வேண்டிய நேரம், இவ்வளவு சீக்கிரம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வித்திட்டம் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மனுதர்மம் எப்படி நால்வருணம் என்கிற சாதிய அமைப்பைக் காப்பற்றுகிறதோ, அதைப் போலவே நான்கு வகையான கல்வி முறைகள் இங்கே காப்பற்றப்படுகின்றன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என நான்கு வகையான பாடத்திட்டங்கள், தனித் தனியாக இயங்குகின்றன. குழந்தைகள் விசயத்தில் காட்டப்படும் இந்த அநாகரிகமான வேறுபாடு அருவெறுக்கத்தக்கது. அதை மாற்ற முனைந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை ஜெயலலிதா அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது திடீரென்று முளைத்த மழை நேரத்துக் காளான் அல்ல. அதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பத்தாண்டு காலம் போராடி இருக்கிறார்கள். அதன் விளைவாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஒரு குழுவை அன்றைய கலைஞர் அரசு அமைத்தது. அந்த குழு மாவட்டந்தோறும், பள்ளிக்கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

பின்னர், 2007 இல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழு அறிக்கையின் கருத்துக்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தது. இதன் பிறகு, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தெரிந்து வர 2008 ஆம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு நியமித்தது.

பின்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 26.08.2009 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விதமான பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டது. சட்ட வடிவு கொண்டு வரப்பட்டது. அதன் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி 2010 இல் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011-இல் கொண்டு வரப்படும் என முந்தைய அரசு அறிவித்து இருந்தது.

அதிகாரம் தலைக்கு ஏறிய சில தினங்களுக்குள்ளேயே ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டார். ஏழைகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஒரே கல்வி என்பதை ஏற்றுக் கொள்ள அவரின் பார்ப்பனீய ஆதிக்க மனம் மறுக்கிறது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் தனியார்மயமாக மாறும் அவலமான உலகமய சூழலில், தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வெறிக்கு துணை போயிருக்கிறது இன்றைய அரசு.

உயர்நீதி மன்றத் தீர்ப்பும், மக்களின் ஆவேசமும் மட்டுமே இதற்கு மாற்றான சூழலைக் கட்டமைக்க முடியும். ”ஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயினர்” என்ற கண்ணதாசன் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஆளுமையற்றவர்களை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி உள்ளார். ஜெயலலிதாவின் அமைச்சர்கள் யாரும் 150 கல்வியாளர்களை கொண்டு நியமிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் தகுதி படைத்தவர்கள் இல்லை.

பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பலரும் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்து முன்ணணித் தலைவர் இராம.கோபாலன் சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். இந்த முடிவு பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. பாடத்திட்டத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதி இருந்தால், அதை மட்டுமே நீக்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக நீக்குவது என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

'அரசு மதுபானம் விற்பது தவறு’ என ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு கொண்டு வருவதில் அதிரடி முடிவு எடுப்பாரா ஜெயலலிதா? செய்ய மாட்டார். ஏனெனில், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பால், இலவசத் திட்டங்கள் என்னும் ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்த வேண்டி வரும். இதில் மட்டும் கலைஞர் அரசின் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றுவது ஏன்?

'ஒரு விசயம் உருப்படாமல் போக வேண்டும் என்றால் அதை கிணற்றில் போடு. இல்லையென்றால் அதை விசாரிக்க கமிசன் போடு' என்றார் இராஜாஜி. ஜெயலலிதா கிணற்றில் போட வழியின்றி வல்லுநர்கள் குழுவைப் போட்டிருக்கிறார். அச்சடித்த புத்தகங்கள் குழந்தைகளின் கனவுகளில் மண் அள்ளிப் போட காத்திருக்கின்றன. மக்கள் வரிப்பணம் வழக்கம் போல 200 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களை போராடத் தூண்டுகிறது ஜெயலலிதா அரசு. மக்களின் போராட்டம் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை என்பதை நிரூபிக்கும் காலம் மீண்டும் கூடி வந்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் பற்றிய விசயத்தில் அரசின் இத்தகைய மோசமான போக்கு நீடிக்குமானால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

- அமீர் அப்பாஸ்

கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் பள்ளி கல்வி அலுவலகத்தில் மாணவ - மாணவிகள் முற்றுகை ; 200 பேர் கைது.

கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம்: பள்ளி கல்வி அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் முற்றுகை; 200 பேர் கைது

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பள்ளி-கல்லூரி மாணவர்கள் 200 பேர் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது பள்ளி கல்வி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தடுப்பு கம்பியை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நீடித்தது.

இதையடுத்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாநில தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜ் மோகன் ஆகியோர் போராட்டம் குறித்து கூறியதாவது:-

நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி சில பள்ளிகளுக்கு நூறு சதவீதத்துக்கு மேல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். நிர்ணயித்த கட்டணத்தை விடவும் கூடுதலாக சிலர் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த கல்வியில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தனியார் பள்ளி நிர்வாகிகள், இடம் பெற்று இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதைவிட தேவையான இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பது மாணவர்களுக்கு நன்மை தரும்.

கடந்த ஆண்டு 344 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்டன. இங்கு உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான மாணவ- மாணவிகள் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது : பிரதமருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம்!..கடிதம்!..கடிதம்!..

தமிழக மீனவர்கள்  23  பேர்  கைது:பிரதமருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம்

கச்சத்தீவு அருகே நேற்று நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்கள் கவலை அளிக்கிறது என்றும், தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியும் கடிதம் அனுப்பி உள்ளார் .

கருணாநிதி கடிதம் எழுதுவதை ஒவ்வொரு தடவையும் ஜெயலலிதா கிண்டல் செய்வார். இப்போது அவரும் அதைத்தான் செய்கிறார்.

கடிதம் எழுதுவது கண் துடைப்பு செயல் என்பதை கடந்த ஆட்சியில் தெளிவாக மக்கள் கண்டுவிட்டார்கள். இதை உணர்த்திய பெருமைக்குரியவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா தான்.

எனவே கடிதம் எழுதாமல் உடனடியாக பிரதமரை தொடர்பு கொண்டு இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவந்தால் உண்மையாகவே புரட்சியாளராக ஜெயலலிதாவைப் பார்க்கலாம்.

பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு விவகாரம்.


மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருக்கிறார். டெல்லியில் பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் அலுவலகங்கள் அமைந்துள்ள வடக்கு பிளாக்கில் பிரணாப் முகர்ஜியின் நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ளது.

நிதியமைச்சக பிரிவில் உள்ள பிரணாப் அமரும் அலுவலக அறை, அவரது தனி உதவியாளரின் சேம்பர், அவரது செயலாளரின் அறை, 2 கான்பரன்ஸ் அறைகள் ஆகியவற்றி்ல் உளவு முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது., மத்திய அரசின் உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்பு கருவிகளை பொருத்தி ரகசியமாக கண்காணித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர்,

உளவுத்துறையினர் ரகசியமாக கண்காணித்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை உளவுத் துறையினர் கண்காணித்தது உண்மை. ஆனால், அந்த ரகசிய கண்காணிப்பு மூலமாக எதையுமே அவர்கள் கண்டு பிடிக்கவில்லை'' என்றார்.

நிதிஅமைச்சரின் அலுவலகம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் மிகவும் முக்கியமானது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

குலக் கல்வித் திட்டப் போர் வேறு பெயரில் மூண்டுவிட்டது.



தினமலர் உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனிய கருத்து நிலை சார்ந்த ஊடகங்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் சமத்துவம் என்ற பேச்சே அவர்களுக்குக் கசக்கிறது. தகுதி, திறன் என்பன பற்றியெல்லாம் வாய் கிழிய அவர்கள் பேசுகின்றனர். இன்னொருபுறம் இவர்கள் தங்கள் பார்ப்பனிய - சாதிய கருத்து நிலையையே பெரும்பகுதியினரின் கருத்து நிலையாகக் காட்ட முயற்சிக்கின்றனர்.

நல்லவர்களின் நாடித் துடிப்பு நம் வாழ்வு என்னும் கிறித்தவ அமைப்பு நடத்தி வரும் வார இதழில் (19-6-2011) ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது.

அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப்படும். முதலடியே முதல் கோணலானது. நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு காலப் போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற எழுத்தாளர் சின்னக் குத்தூசி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது (29-5-2011) ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.

பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்த விடக்கூடாது. அதை அழித்தே தீருவேன் என்கிற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி, அதுவும் சமமான கல்வி என்பது பார்ப்பனியத்துக்கு எதிரானதே! சோவின் தலையங்கம் அதனை வெளிப்படையாகவே கூறுகிறது.

வெறிநாயை அடித்துக் கொல்லுவது போல வெகு மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை - இந்தக் காலகட்டத்திலும் சோ ஆதரித்து எழுதுகிறார் என்றால், அந்தப் பார்ப்பனப் புத்தி அனைவருக்கும் சமமான கல்வி என்னும் சமச்சீர் கல்வியை எப்படி ஏற்றுக் கொள்ளும்? சுருக்கமாகச் சொன்னால் சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்ட புத்தியுள்ளவர்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமா?

சமச்சீர் கல்வி பார்ப்பனர் அல்லாதாருக்கானது. சமச்சீர் கல்வி எதிர்ப்பே பார்ப்பனர்களுக்கானது.

ஆம். குலக் கல்வித் திட்டப் போர் வேறு ஒரு பெயரில் மூண்டுவிட்டது.

தமிழர்களின் கல்வியில் கை வைத்த வர்களைத் தமிழர்கள் தண்டிக்காமல் விட்டதில்லை. 1952 இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களின் தலையில் கைவைத்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சரியான அடி வாங்கினார். மொத்தம் 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றார்.

சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களைக் கொண்ட ஒரு குழுவினை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்து விட்டார்.

அதற்கான விலையை இந்த ஆட்சி கொடுக்க வேண்டிவரும்.

குலக்கல்வித் திட்டம்.

அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும்; அரை நேரம் படித்தால் போதும் என்று கூறி அன்று ஆச்சாரியார் ராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தாரே - அந்தக் குலக் கல்வித் திட்டத்தை... இன்றைக்கும் ஆதரித்து எழுதுகிற பார்ப்பனர்கள், பார்ப்பன ஏடுகள் இருக்கத்தானே செய்கின்றன.

அந்தக் குலக்கல்வித் திட்ட ஆதரிப்புக் கனவான்கள்தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்பதை அடிக்கோடிட்டு மனதில் நிறுத்துக!

தினமலர் - வாரமலரில் (4.4.2010) கேள்வி ஒன்றக்குப் பதில் என்ன தெரியுமா?

கேள்வி: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட, ஏதாவது கைத்தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு, ரோடு ரோடாக அலைந்து திரிவதைவிட கைத்தொழில் ஒன்றை கற்று தொழில் செய்யலாமே... தினமலர் அத்துமணியின் பதில் இதோ:

கற்றுத் தருவதுடன் நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினார். அப்போது இந்தத் திராவிட கட்சிகள், குய்யோ முறையோ எனக் கத்தி, பைசா பெறாத காரணங்களையும், ஜாதிவெறியையும் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை - காலையில் ஏட்டு கல்வி, மாலையில் தொழிற்கல்வி. தொடர விடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்! ஏதோ தினமலர் மட்டும்தான் இப்படி கூறுகிறது என்று கருத வேண்டாம்.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப் பட்ட 26 ஆண்டுகளுக்குப்பிறகு (1980 ஜூலை) கல்கி என்ன எழுதியது தெரியுமா?

ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளையும் ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாதத் திண்டாட்டத்தைப் போக்குவது.

தொழிற்கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது. என்றால் அவாளின் இரத்தத்தில் சூடேறிக் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வைத் தமிழர்கள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

தினமலரும், கல்கியும் மட்டுமா? இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற பெருந்தலைவர் யார் தெரியுமா? அவர்தான் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட 34 ஆண்டு களுக்குப் பிறகு அவரின் துக்ளக்கில் (15.7.1988) எழுதுகிறார். ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் என்று எழுதினாரே!

இந்தக் கூட்டம்தான் தங்களுக்கு வசதியாக - இன ரீதியாக முதல் அமைச்சர் கிடைத்து விட்டார். என்றவுடன், சமத்துவக் கல்வி திட்டமாம் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு உலை வைக்கின்றனர். உஷார்! உஷார்!!

சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை “திடீர்” நில அதிர்ச்சி : பொதுமக்கள் வீட்டை விட்டு ஓட்டம் .


சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திப்பம்பட்டி, குள்ளப்பநாயக்கனூர், குரால் நத்தம், கூட்டாறு, தும்பல் பட்டி, கம்மாளப்பட்டி, சாமகுட்டப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று அதிகாலை 5.21 மணியளவில் திடீரென நிலஅதிர்ச்சி ஏற்பட்டது.

அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திடீரென நில அதிர்வை உணர்ந்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்து வெளியே ஓடிவந்தனர். அனைவரும் வீட்டை விட்டு ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் நில அதிர்ச்சி ஏற்பட்டதை பற்றி பரபரப்புடன் பேசிக் கொண்டனர்.

இதுகுறித்து திப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் தியாகராஜன், கூறியதாது:-

அதிகாலை நாங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தோம். அப்போது திடீரென வீடுகள் அதிர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த சத்தத்தை கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் எழுந்து அழ ஆரம்பித்து விட்டனர். சுமார் 2 நிமிடங்கள் அளவுக்கு நீடித்தது என்றார்.

இதுகுறித்து குரால்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் கூறும் போது, நாங்கள் அதிகாலை நேரத்தில் வயலில் அரளி பூ பறித்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென டமார் என்று கட்டிடம் இடிந்து விழுவது போன்று சத்தம் ஏற்பட்டது.அப்போது பக்கத்தில் பண்டிகைக்கு வெடி வெடிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டோம்.

பிறகு தான் அது நில அதிர்வு என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் வயலில் பூ பறித்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் வயலில் இருந்து ஓடி வந்து விட்டனர் என்றார்.

வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம், மோட்டூர், சோமம்பட்டி, மன்னார் பாளையம், பொன்னாரம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களிலும் இன்று அதிகாலை 5.20 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து விலாரிப் பாளையம் கிராம மக்கள் தெரிவித்ததாவது:-

விவசாய தோட்டத்தில் வேலை செய்வதற்காக பெரும்பாலானோர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வயலுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தோம். அப்போது சுமார் 5.20 மணிக்கு வெடி வெடித்தது போல் சத்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அலை அலையாக நிலத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. அதனால் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினோம்.

இதுவரை ஏற்படாத வகையில் எங்கள் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றனர். விவசாயி சீனிவாசன் என்பவர் கூறும் போது, சத்தம் கேட்டதும் எனது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். தொடர்ந்து சில வினாடிகளுக்கு நில அதிர்வை உணர முடிந்தது. அக்கம், பக்கத்து வீடுகளில் இருந்தும் தெருவுக்கு வந்து நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர்.என் வாழ் நாளில் இது போன்ற ஒரு நில அதிர்வை முதல்முறையாக உணர்வதால் உடலில் நடுக்கமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது என்றார்.

ஆத்தூர் சுற்று வட்டார பகுதியில் பெத்த நாயக்கன்பாளையம், உமையாள்புரம், ஏத்தாப்பூர், ஆரியப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் உருண்டு ஓடியது. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

புத்திர கவுண்டன்பாளையம் வடக்கு தெருவில் உள்ள விஜய் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு ஓடியது. இதுகுறித்து புத்திர கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கூறும் போது, இன்று அதிகாலை பயங்கர சத்தம் ஏற்பட்டு நில அதிர்வு ஏற்பட்டது. வீடே இடிந்து விழும் அளவுக்கு இருந்ததால் நாங்கள் அனைரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தோம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் தெருவில் அதிர்ச்சியுடன் இருந்தோம் என்றார்.

இதே ஊரை சேர்ந்த குமுதா என்ற பெண் கூறும் போது, இன்று அதிகாலை நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஏதோ விபரீதம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அனைவரும் வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து விட்டோம் என்றார். இந்த நில அதிர்வு காரணமாக சேலம் மாவட்டத்தில் மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்கள் நீண்ட நேரமாக வீட்டிற்குள் செல்ல பயந்து வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.

ரிக்டர் அளவில் 2.9 பதிவானது : 5.21-க்கு தொடங்கி 5.22 வரை 1 நிமிடம் நீடித்த நில அதிர்வு.

இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு சேலம் மாவட்ட வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகி இருந்தது. அதில் சரியாக அதிகாலை 5.21 மணிக்கு தொடங்கி 5.22 வரை 1 நிமிடம் நில அதிர்வு ஏற்பட்டு இருப்பதாக பதிவாகி இருந்தது.

மேலும் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 2.9 அளவில் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், 1 நிமிடம் நீடித்ததால் நில அதிர்வை பொதுமக்கள் அதிகம் உணர்ந்து இருப்பார்கள் என்று வானியை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு, இலங்கை கடற்படை அட்டூழியம்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த  ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு நடுக்கடலில் கச்சத் தீவு அருகே வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் 5 ரோந்து கப்பலில் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களிடம் ஒலி பெருக்கிகள் மூலம், எங்கள் பகுதியில் மீன் பிடிக்காதீர்கள். உடனடியாக வெளியேறி செல்லுங்கள் என்று கூறினர்.

இதையடுத்து அவசர அவசரமாக மீனவர்கள் வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பினர். ஆனால் 5 படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அம்புஜம், ஞானசேகரன், ராமேசுவரத்தை சேர்ந்த பொன்னழகு, இருளாண்டி, பால்ராஜ் ஆகியோரின் 5 படகுகளில் சென்ற மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர் விவரம் தெரிய வில்லை. இன்று காலை மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 5 படகுகளில் சென்ற 23 மீனவர்கள் கரை திரும்பாதது தெரியவந்தது.

இதையடுத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம், நேற்று நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எங்களை எச்சரித்தனர். நாங்கள் உடனடியாக கரை திரும்பினோம். எனினும் 23 மீனவர்களை சிறைபிடித்து சென்று விட்டனர் என்று புகார் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது தொடர்பாக இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள், மீன் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், சிறைபிடித்தும் வந்த இலங்கை கடற்படையினர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதகாலமாக தமிழக மீனவர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதிய ஆட்சி வந்த பிறகு முதன் முறையாக தற்போது தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் ராமேசுவரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்காவின் பிணத்தருகே படித்து மதிப்பெண்களை அள்ளி எடுத்த ஏழைச் சிறுவன்.




பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோரெல்லாம் இது மாதிரி நமக்கு ஒண்ணு பிறக்கலையே என்று ஏங்க ஆரம்பிக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும் பள்ளத்தில் விழுந்தே தீருவேன் என்று சபதமிட்டு பெற்றோரை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயைப் போன்று தன்னை வளர்த்த அக்காவின் பிணத்தருகே அழுகையோடு படித்து மதிப்பெண்களை அள்ளிஎடுத்து தன் அக்காவின் கனவை நனவாக்கிய ஒரு ஏழைச் சிறுவனின் சாதனைக் கதை. இது மாதிரி ஒரு பிள்ளையோ சகோதரனோ நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்று படிப்பவர்களை ஏங்கவைக்கும் ஒரு முன்னுதாரணம் .

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை தேர்வு எழுதியவன்தான் ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

மாரி... யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியாசொல்ல அள்ளிக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்.அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக் கொண்டே அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனைஅடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவர்கள் பலர்.

நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரிச்செல்வம், +1 சேருவது தொடர்பாக நிறுவனத்திற்கு வந்தபோது மாரிச்செல்வத்தை சந்தித்து பேசியதிலிருந்து அவனது சாதனையின் பின்னிருந்த பல வேதனையான சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரிமேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால் அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய் அம்மா நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா என்று கூறினான்.அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி வேணாம் மாரி நீ போய்ப் படி.அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க... நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும் எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார்.அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன.தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது.கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும் இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும் சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும் மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். மாரி இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா, அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார்.

வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியாண்டி பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர். தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது கூலி வேலைக்குச் செல்வது கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம் பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி என அக்கா கேட்டார். ஆமாக்கா. இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும் என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. என்று அவன் பதற ஒண்ணுமில்ல மாரி நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும் என்றார். சரிக்கா நீ போய் தூங்குக்கா என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை நாளைக்குப் பரீட்சை எழுதணும்...நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா என்று அனைவரும் தேற்றினர். மாரிநீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம் என அவன் மாமா கூறவும் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம் என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார் என்று மாரி உடைந்து அழும் போது நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும் அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கி விட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.

அவனுடைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ்-95 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-99 சமூகஅறிவியல்- 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம்.அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

மாரி...இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்த பாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல் ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும் அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயது வரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியாண்டி பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும் தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்.

சமச்சீர் கல்வியா? சமத்தாழ்வு கல்வியா? - சோ.



சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்ப்போர் யார்? அந்த வரிசையில் முதலில் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமி. அவர்தானே இப்பொழுது பார்ப்பன இனத்துக்கு, அறிவிக்கப்படாத ஏகத்தலைவர் - அ.தி.மு.க. ஆட்சியின் ராஜகுரு!

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி அவர் என்ன திருவாய் மலர்கிறார்? எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன்படுத்துவது சமத் தாழ்வு கல்வி முறை என்று இதற்குப் பட்டம் சூட்டியுள்ளார்.

ஸ்டேட் போர்டு, ஓரியண்டல் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.ஈ. என்ற பல கல்வி முறைப் பாடத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.

இதில் சி.பி.எஸ்.ஈ. என்பது அகில இந்திய அளவில் சமச்சீர் கொண்டதாகும்.

தமிழ்நாட்டளவில் இப்படிப் பல் வேறு கல்வி திட்டங்கள் இருப்பதாக ஒரு குழப்ப நிலை நீடிக்கிறதே!

மெட்ரிக்குலேஷன் படித்தால் ஒரு மாதிரி, ஸ்டேட் போர்டு ஸ்கூலில் படித்தால் தரம் தாழ்ந்த மாதிரியான சமூக மதிப்பீடுகள் இருக்கவே செய்கின்றன.

பாடத் திட்டங்கள் மாறி மாறி இருக்கும் நிலையில் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும்? தொழிற் கல்லூரிகளிலோ, கலைக் கல்லூரிகளிலோ சேருவதற்குப் பல்வேறு மாறுபட்ட கல்விக் கூடங்களில் படிப்போரின் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும் என்பது போன்ற பிரச்சினைகள் இதில் உள்ளடக்கம்.

ஏழை - பணக்காரப் பேதம், சிறுவர்கள், மாணவர்கள் மத்தியிலே தெரியக் கூடாது, - உணரக் கூடாது என்பதற்காகத்தானே சீருடைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அப்படி இருக்கும் போது கல்வித் திட்டத்தில் மட்டும் நெட்டைக் குதிரை, மட்டக் குதிரை என்ற வேறுபாடு ஏன் என்ற வினா நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

அதற்கொரு முடிவுதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம்! கடந்த ஆண்டே முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் அமல்படுத்தப்பட்டும் விட்டது.

அ.இ. அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் ஏட்டிக்குப் போட்டி என்ற அணுகுமுறை இங்கே கிடுகிடுக்கிறது.

தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கல்வித் திட்டமா - ஏற்கமாட்டோம் என்று அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இப்பொழுது நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய கையுடன் குழுக்கள் அமைக்கப் படுகின்றனவாம். ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். தலைமைச் செயலாளர் இந்தக் குழுவின் தலைவராம்.

முதல் அமைச்சரின் மனப்பான்மை இதில் என்ன என்று தெரிந்துவிட்ட பிறகு அதிகாரிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். - எழுதி வைக்கப்பட்ட முடிவுதான். இப்பொழுது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆலோசகர்கள், கேட்கவும் வேண்டுமோ!

சோ அய்யர் எழுதுவதைப் பார்த்தால் இதில் வெறும் அரசியல் கண்ணோட்டம் என்பதை விட வருணாசிரமக் கண்ணோட்டம் என்ற கொம்பு நீட்டிக்கொண்டு இருப்பதை நன்றாகவே அறிய முடிகிறது.

சிலர் உயர் வகைக் கல்வியைப் பெறுவதை, தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் என்று சமச்சீர் கல்வியைக் குறிப்பிடுகின்றார். 22.-6.-2011 துக்ளக் தலையங்கத்தில்.

யார் அந்த சிலர்? அந்த உயர் வகைக் கல்வி என்பது என்ன? என்ற கேள்வி எழுகிறது.

அந்தச் சிலர் என்பது பார்ப்பனர்களே! அவர்களுக்குத் தேவையானது என்பது. அந்த உயர் வகைக் கல்வி என்பதே!

சமச்சீர் கல்வி என்று வந்து விட்டால் அந்தச் சிலர் - இந்தச் சிலர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துக் குடி மக்களும் ஒரே வகையான கல்வியைப் படிக்க வேண்டும் என்ற சமநோக்கும், அகலப் பார்வையும் வந்து விடுமே! ஏற்பார்களா மேட்டுக் குடியினர்?

இதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே மாதிரியான கல்வியா என்கிற பார்ப்பனத்தனம் இதில் திமிர் முறித்து பூணூல் கொழுப்புடன் எகிறிக் குதிக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நிறுத்தி வைத்துள்ளாரா? குப்பைத் தொட்டியில் வீசி விட்டாரா? என்று தெரியவில்லை.

இது பற்றி வெளிவரும் செய்திகளில் பார்ப்பனியக் கருத்து நிலையை ஊக்கமுடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாக எண்ணி குதூகலிக்கின்றனர் என்று மட்டும் தெரிகிறது.

thamizhoviya.blogspot.com