Tuesday, June 21, 2011

கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் பள்ளி கல்வி அலுவலகத்தில் மாணவ - மாணவிகள் முற்றுகை ; 200 பேர் கைது.

கல்வி கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம்: பள்ளி கல்வி அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் முற்றுகை; 200 பேர் கைது

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பள்ளி-கல்லூரி மாணவர்கள் 200 பேர் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது பள்ளி கல்வி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தடுப்பு கம்பியை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நீடித்தது.

இதையடுத்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாநில தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜ் மோகன் ஆகியோர் போராட்டம் குறித்து கூறியதாவது:-

நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி சில பள்ளிகளுக்கு நூறு சதவீதத்துக்கு மேல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். நிர்ணயித்த கட்டணத்தை விடவும் கூடுதலாக சிலர் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த கல்வியில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தனியார் பள்ளி நிர்வாகிகள், இடம் பெற்று இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதைவிட தேவையான இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பது மாணவர்களுக்கு நன்மை தரும்.

கடந்த ஆண்டு 344 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்டன. இங்கு உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான மாணவ- மாணவிகள் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments: