Tuesday, June 21, 2011

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு, இலங்கை கடற்படை அட்டூழியம்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த  ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு நடுக்கடலில் கச்சத் தீவு அருகே வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் 5 ரோந்து கப்பலில் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களிடம் ஒலி பெருக்கிகள் மூலம், எங்கள் பகுதியில் மீன் பிடிக்காதீர்கள். உடனடியாக வெளியேறி செல்லுங்கள் என்று கூறினர்.

இதையடுத்து அவசர அவசரமாக மீனவர்கள் வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பினர். ஆனால் 5 படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அம்புஜம், ஞானசேகரன், ராமேசுவரத்தை சேர்ந்த பொன்னழகு, இருளாண்டி, பால்ராஜ் ஆகியோரின் 5 படகுகளில் சென்ற மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர் விவரம் தெரிய வில்லை. இன்று காலை மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 5 படகுகளில் சென்ற 23 மீனவர்கள் கரை திரும்பாதது தெரியவந்தது.

இதையடுத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம், நேற்று நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எங்களை எச்சரித்தனர். நாங்கள் உடனடியாக கரை திரும்பினோம். எனினும் 23 மீனவர்களை சிறைபிடித்து சென்று விட்டனர் என்று புகார் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது தொடர்பாக இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள், மீன் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், சிறைபிடித்தும் வந்த இலங்கை கடற்படையினர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதகாலமாக தமிழக மீனவர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதிய ஆட்சி வந்த பிறகு முதன் முறையாக தற்போது தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் ராமேசுவரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: