Thursday, January 19, 2012

விபரீதகரணி, சர்வாங்காசனம், சர்வாங்க பத்மாசனம்.

விபரீதகரணி.
விபரீதகரணி

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி தலைவைத்து படுத்து, கைகளை தரையோடும், உடலோடும் ஒட்டிவைக்கவும். இரண்டு கைகள், தோள்பட்டை மற்றும் தலைப்பகுதியை தரையில் அழுத்தி, இயல்பான சுவாசத்தில் கால்களை மேலே தூக்கவும். அடுத்தபடியாக இடுப்பையும் மேலே தூக்குங்கள்.

இரு கைகளையும் அந்தந்த பக்கத்து புட்டத்தில் வைத்து, இரு கால்களும் சேர்ந்த நிலையில், பாதத்தை சற்று பின்னால் கொண்டு போகவும். இந்த நிலையில் ஒட்டுமொத்த உடம்பின் எடையும் முழங்கையில் இருக்கட்டும்!

பயன்கள்:

40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய தற்காலிக நோய்-நாள்பட்ட நோய் நீங்க காரணமாக அமைகிறது.


சர்வாங்காசனம்.
சர்வாங்காசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கால்களையும் இணையாக தலைக்கு மேல் செங்குத்தாக தூக்கவும். இரு கால்களையும் தலைக்கு பின்னால் கொண்டு போய்விடுங்கள். அதனால் இடுப்புபகுதி தூக்கியவாறு இருக்கும். இடுப்பு பகுதியை தூக்கியபின் இரு உள்ளங்கைகளையும் நடுமுதுகில் வையுங்கள்.

கால்களை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி செங்குத்தாக நேர்க்கோட்டில் நிறுத்தவும். உங்களின் கண்கள் மேலிருக்கும் இரு கால்கட்டை விரல்களை பார்க்கட்டும். கீழ்த்தாடைப்பகுதி நெஞ்சில் ஒட்டியிருக்க வேண்டும். கழுத்து பிடரி சரியாய் தரையில் படிய அமையுங்கள். ஆசனத்தின் போது உடலியக்கத்துடன் சுவாசமும் இயல்பாய் இருப்பது அவசியம்!

பயன்கள்:

சிரசாசனம் சக்கரவர்த்தி என்றால், சர்வாங்காசனம், `மகாராணி'. பிடரியிலுள்ள நாளமில்லா பிட்யூட்டரி சுரப்பியை நோக்கி புது ரத்தம் பாய்வதால், உடம்பில் சுறுசுறுப்பு வந்துசேரும். தைராய்டு, தைமஸ் ஆகியவற்றின் சுரப்பும் அருமையாக இருப்பதால், சரியான வளர்சிதை மாற்றம் அமையும். தைராய்டு குறைபாடுகள் அகலும். இது மச்சாசனத்துக்கு மாற்றுஆசனமும்கூட!

குண்டானவர்கள், மருந்து சாப்பிட்டு குரல் மாற்றம் அடைந்தவர்கள், பெண்ணுக்கு மீசை முளைத்தல், தோல் வியாதி, தொண்டையில் சதை வளருதல் போன்ற நோய்கள் குணமாகும். குதிகால் குடைச்சல், முழங்கால் மூட்டு வலி, நரம்பு சுருட்டு, மூலம், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும். கழுத்தெலும்பு தேய்வு (`பாண்டிலிட்டஸ்') குணமாகும். உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பயன்தரவல்ல ஆசனமிது!


சர்வாங்க பத்மாசனம்.
சர்வாங்க பத்மாசனம்

செய்முறை:

சர்வாங்காசன நிலையில் பத்மாசனம் செய்யுங்கள். அதே நிலையில் முன்பக்கமாக இறக்கி நெற்றியையோ, தரையையோ தொடலாம். இதேபோல முதுகு பக்கமாக இறக்கி, முழங்காலால் தரையை தொடவும்.

பயன்கள்:

மலச்சிக்கல் நீங்கும். மூலநோய் குணமாகும். வாயுத்தொல்லை நீக்கும். பிருஷ்டபாக எடை குறையும்.

உடல் எடையை குறைக்க சிறந்த ஆசன மிது!