Friday, June 10, 2011

சிபிஐ 2ஜி வழக்கை அரசியல் ஆயுதமாக்குகிறதா ?


திமுக காங்கிரஸ் உறவில் எந்த சிக்கலும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிலர் வேண்டுமென்றே பூதாகரமாக்கி வருதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமச்சீர் கல்வி திட்டத்தை தொடரும் படி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக்காட்டினார். சமச்சீர் கல்வியை தடுக்க அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால், திமுக சார்பில் எத்தகைய போராட்டங்களை மேற்கொள்வது என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

திமுக காங்கிரஸ் உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இரு கட்சிகளிடையேயான உறவில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினார்.

2ஜி வழக்கை சிபிஐ அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறதா என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், ஆயுதமாக இருக்கிறது. ஆனால் அரசியல் ஆயுதமா என தெரியாது என்று குறிப்பிட்டார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிலர் வேண்டுமென்றே பூதாகரமாக்கி வருதாகவும் குற்றம் சாட்டினார்.

நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டும் என்று திமுக என்றைக்கும் நினைத்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி தொடரும் என்ற உத்தரவால் மாணவர்கள், பெற்றோர் பெரும் குழப்பம்.


சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டம் நடப்பு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை பிறப்பித்து விட்டது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த தமிழக அரசு புதிய பாடப் புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிட்டது. இதற்கு வசதியாக பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது.

மேலும் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்கள் கடாசப்பட்டன. இந்த நிலையில் தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவால் எழுந்துள்ள குழப்பங்கள்

தற்போது அச்சடிக்கப்பட்டு வரும் புதிய பாடப் புத்தகங்கள் கதி என்னவாகும்

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனால் தீர்ப்பு உடனடியாக வராது என்ற நிலை. காரணம், உச்சநீதிமன்றத்திற்கு தற்போது கோடை விடுமுறை. ஒரு மாதத்திற்குப் பிறகே தீர்ப்பு வரும் வாய்ப்புள்ளதால் பள்ளிகளை 15ம் தேதியும் திறக்க முடியாத நிலை ஏற்படும்.

பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமானால், சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த நேரிடும். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் ரத்தாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு எடுக்கப் போகும் நிலை என்ன என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.

மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே பள்ளிகள் திறப்பு தாமதமாகியுள்ள நிலையில் தற்போது எந்தப் பாடத் திட்டம் என்பதே பெரும் கேள்விக்குறியாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் பெரும் குழப்பம் எழுந்துள்ளது.


திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை முடிவுகள்.


சிபிஐ திமுகவினர் மீது தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் இறுதியில் திமுக வெளியிட்ட அறிக்கையில், 2ஜி வழக்கு விவகாரத்தை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றும், கலைஞர் டிவிக்கு கடனாக தரப்பட்ட பணத்தை லஞ்சம் போல சிபிஐ காட்ட முயல்வதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில் மத்தியில் காங்கிரசுடனான கூட்டணி குறித்து திமுக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ், குறி வைத்துத் தாக்கி வருவதாக வும் திமுக கருதுகிறது. இதையடுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்ய இன்று மாலை உயர் மட்டக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தையொட்டி இன்று காலை முதல் மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தி வந்தார். அதில், இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என்று கருணாநிதி கூறியதாகவும் அதை அழகிரி உள்ளிட்டோர் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

அழகிரியின் கருத்தை மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

முன்னதாக இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கனிமொழியிடமும் கருணாநிதி ஆலோசனை கேட்டுள்ளார். நேற்று டெல்லி திகார் சிறைக்குச் சென்ற திமுக மூத்த தலைவரான துரைமுருகன் இது குறித்து கனிமொழியுடன் பேசியுள்ளார்.

தன்னை மையமாக வைத்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், கட்சியின் எதிர்காலம் - நலனுக்கு எது சரியான முடிவாக இருக்குமோ அந்த முடிவை எடுக்குமாறு துரைமுருகனிடம் கனிமொழி கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் கூட்டணியை முறிக்காமல் மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறலாம் என்று சில தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியிருந்தனர்.

இதனால் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது, வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற முடிவையே திமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல எந்த முக்கிய முடிவையும் எடுக்காமல் சப்பென்று முடிந்து விட்டது திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

திமுகவினர் மீது சிபிஐ தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது.

திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மாற்றப் பட்டதற்கு கண்டனம்.

தமிழகத்தில் சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து ள்ள தீர்ப்புக்கு வரவேற்பு. இந்தத் தீர்ப்பை ஏற்று நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியைத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

ஜூன் 20 முதல் 30 வரை பொதுக் கூட்டங்கள் நடத்துவது.

ஜூலையில் திமுக பொதுக் குழுவைக் கூட்டுவது.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு.

சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி.க்கள் இருப்பு உள்ள இலவச டி.வி.திட்டம் ரத்து.

இலவச டி.வி.திட்டம் ரத்து: 1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி.க்கள் ஆதரவற்ற இல்லம்- அரசு ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்படும்;  ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது கூறியதாவது:-

மக்கள் நலனை முன் நிறுத்தி எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற நாளிலேயே மக்கள் பயன் பெறும் திட்டங்களில் கையெழுத்திட்டேன். தி.மு.க.வினர் இலவசங்களை வழங்கி மக்களை ஏமாற்றி, அதை ஓட்டுக்கான கருவியாகத்தான் பார்த்தனர்.

தி.மு.க. ஆட்சியில் இலவச டி.வி. இல்லாதவர்களுக்கு டி.வி. கொடுப்பதாக அறிவித்தனர். ஒரு கோடியே 64 லட்சம் டி.வி. பெட்டி, இது வரை டி.வி.யே இல்லாத குடும்பத்துக்குத்தான் கொடுக்கப்பட்டு இருக்குமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் கூட காரில் வந்து இலவச டி.வி. வாங்கிச் சென்றதை மக்கள் பார்த்தனர்.

எனவே இலவச கலர் டி.வி. திட்டம், மக்கள் பயன்பட கூடிய திட்டமா? அல்லது ஆட்சியாளர்களுக்கு பயன்பட்ட திட்டமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இலவச டி.வி. ஒவ்வொன்றுக்கும் ரூ. 2265 செலவு செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கப்பட்டது. டி.வி. வாங்கினாலும், அதில் கேபிள் இணைப்பு பெற்ற வகையில் பயன் அடைந்தவர்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், துரை தயாநிதிதான்.

ஆண்டு ஒன்றுக்கு கேபிள் டி.வி.க்காக ரூ. 4 ஆயிரம் கோடி பணத்தை மக்கள் கொடுத்து வருகிறார்கள்.இந்த அளவுக்கு வருமானம் வகையில் கருணாநிதி தன் குடும்பத்துக்கு வழி செய்து கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்பம் கேபிள் டி.வி. மூலம் பெற்றுள்ளது. எனவே இலவச டி.வி. வழங்கும் திட்டம், அவரது சொந்த நலனுக்காக கொண்டு வந்த திட்டம் என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

6-ம் கட்டமாக இலவச கலர் டி.வி. வழங்க 10 லட்சம் டி.வி. பெட்டி கொள்முதல் செய்ய முடிவு செய்திருந்தனர்.இதில் கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் டி.வி. பெட்டிகளின் கொள்முதல் உத்தரவு ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்களுக்கு வழங்கப்படாமல் 1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி. பெட்டிகள் உள்ளது.

இந்த டி.வி. பெட்டிகள் ஆதரவற்ற இல்லங்கள், அரசு பள்ளிகள், பஞ்சாயத்துகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி போன்றவற்றுக்கு வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இது போன்ற ஊழல் மலிந்த திட்டங்கள்தான் நடை முறைப் படுத்தப்பட்டன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதால் இந்த உதாரணத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக்கூடாது : சென்னை ஐகோர்ட் உத்தரவு.

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சமச்சீர் கல்வி திட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து புதிய அ.தி.மு.க. அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. என்று சரமாரியாக கேள்வி எழுப்பி சில விளக்கங்களை கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன், சமச்சீர் கல்விக் கான பாடங்கள் தரமற்றவை. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஏராளமான புகார்களின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.

இரு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சமச்சீர் கல்வியே நிறுத்தும் தமிழக அரசின் சட்ட திருத்ததிற்கு இடைகால தடை விதிப்பதாகவும் மேலும் 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு சமசீர் கல்வியே நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவுவிட்டனர்.

‘ஆத்தா’வோடு பகை வராமலிருக்க, ‘தாத்தா’வைக் கழட்டி விடும் பேரன்.



சகோதரர்கள் இருவருக்கும் கூட்டு வியாபாரமும் இருக்கிறது. தனித்தனி வியாபாரங்களும் இருக்கின்றன.

“வர்த்தக நலன்களுக்கு முன்னால், குடும்ப உறவுகள் இரண்டாம் பட்சமே” என்பதுதான் இந்தத் தகவலின் பஞ்ச் வாக்கியம்.

அதன் விரிவாக்கம், தமது வர்த்தக சாம்ராஜ்யத்தைக் காத்துக்கொள்ள கலைஞரின் குடும்ப உறவொன்று, எதிராகத் திரும்ப ரெடியாகின்றது என்பதே.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம். டில்லியின் உதாசீனம். இந்த இரண்டுமே மேற்படி முடிவை எடுக்கத் தூண்டியது என்கிறார்கள்.

இந்த முடிவை எடுக்காவிட்டால், ஏற்படக்கூடிய உடனடி நஷ்டம் லேசானது அல்லவாம்.. நான்கு இலக்கத்தில் கோடிகள் என்கிறார்கள், இவர்களது வர்த்தகத்தை அறிந்தவர்கள். இந்தத் தொகை உடனடி நஷ்டம். அதைவிட வருடாவருடம் ஏற்படக்கூடிய நஷ்டம் தனி.

சகோதரர்கள் இருவருக்கும் கூட்டு வியாபாரமும் இருக்கிறது. தனித்தனி வியாபாரங்களும் இருக்கின்றன.

மாறன் குடும்பத்தின் இரு சகோதரர்களில் ஒருவருக்கே, இந்த இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. மற்றைய சகோதரர், தன்பங்குக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தைத் தானே தாங்கிக்கொள்ளத் தயாராகிவிட்டாராம். அவருக்கு தமிழகத்தில் ஏற்படக்கூடிய நஷ்டம் அவ்வளவு பெரியளவில் இருக்காதாம்.

இந்த இரண்டாவது சகோதரரின் முடிவின் காரணங்களை முதலில் பார்க்கலாம். இவரது ‘தனி’ முதலீடுகள், தமிழ்நாட்டை மையப்படுத்தி இல்லை. வெளி மாநிலங்களிலும், தலைநகரிலும் மையப்படுத்தப்பட்ட முதலீடுகள் அவை. அதன் ஒரு பகுதியே தமிழகத்தில் எக்ஸ்டென்ஷனாக இருக்கிறது.

அதைவிட அவரது பணம் தமிழகத்தில் பாய்ந்ததெல்லாம் குறுகியகால பிசினெஸ்களில். குறைந்தபட்சம் சில வாரங்களில் இருந்து, அதிகபட்சம் சில மாதங்களுக்குள் போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடக்கூடிய பிசினெஸ்கள் அவை.

இதனால் அந்த சகோதரர், ஏற்கனவே போட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதிலேயே இப்போது பிசியாக இருக்கிறார். புதிய புராஜெக்ட்கள் எதுவும் தற்போதைக்கு இல்லையாம். இன்னமும் சில வாரங்களில் அவரது கம்பனிகள் உறங்கு நிலைக்கு (sleep stage) போய்விடும்.

அதற்குப்பின் அவற்றால் இழக்கக்கூடிய பணம் 100 கோடிக்கு உள்ளேதான்! அவரால் மிகச் சுலபமாகத் தாங்கிக்கொள்ளக்கூடிய தொகை அது.

மற்றைய சகோதரரின் கேஸை எடுத்துக்கொண்டால், அது பெரிய மெஸ்ஸியான ஸ்டேஜில் இருக்கிறது. காரணம், அவருக்கும் வெளி மாநில வியாபாரங்கள் இருந்தாலும், பிரதான பிஸினெஸ் தமிழகத்தை மையப்படுத்தியே உள்ளது. அதில் அடி விழுந்தால், நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, 4 இலக்க கோடிகளில் நஷ்டம் வரும்!

இவர்தான் இப்போது தான் இதுவரை ஓடிக்கொண்டிருந்த பாதையிலிருந்து, திரும்ப ரெடியாகிறார் என்கிறார்கள்.

இந்தச் சகோதரார் ஏற்கனவே கட்சியிலிருந்து (தி.மு.க.) விலகி நடக்கத் தொடங்கிவிட்டார். அதைக் கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கும்படி வெளிப்படையாகவும் செய்யத் தொடங்கிவிட்டார். அடுத்த கட்டம் கலைஞர் குடும்பத் தொடர்புகளில் இருந்து விலகிக் கொள்வதுதான் என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன், இவரது நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்குப் புதிதாக இளைஞர் ஒருவர் அழைத்து வரப்பட்டிருக்கின்றார். அமெரிக்காவில் MBA படித்ததாகக் கூறப்படும் இந்த இளைஞர், நிறுவனத்தின் COO பதவியில் அமரவைக்கப்படவுள்ளார் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படையாகப் பார்த்தால், இது ஒரு வர்த்தக மேம்படுத்தல் நடவடிக்கை போலவே தோன்றும். ஆனால், இதற்குள் வேறு ஒரு விஷயம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த MBA இளைஞர், முன்பிருந்த அ.தி.மு.க. அரசின் ‘பவர்’ அரசியல்வாதி ஒருவரின் மகன்.

குறிப்பிட்ட அரசியல்வாதி, தற்போதைய அ.தி.மு.க. அரசில் செல்வாக்கு அற்றவராகத்தான் தற்போது இருக்கிறார். ஆனால், விரைவில் அவரது செல்வாக்கு ஓகோ என்று எழுந்துவிடும் எனக் கணித்துள்ளாராம் மாறன் சகோதரர்களில் ஒருவர்.

இந்த அரசியல்வாதி மூலமாகவே, அ.தி.மு.க.வுடன் ஒரு பிசினெஸ் ரூட் போடப்படுமாம்.

திகாருக்கும், சி.ஐ.டி. காலனிக்குமிடையே கலைஞர் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கமாக இந்த டீல் ஓடத்தொடங்கியிருக்கிறது. டீல் கலைஞரின் காதுகளுக்கும் அநேகமாகப் போயிருக்கும். ஆனால், என்னதான் செய்ய முடியும்?.

‘ஆத்தா’வோடு பகை வராமலிருக்க வேண்டுமானால், ‘தாத்தா’வைக் கழட்டித்தான் விடவேண்டும்.

இந்தியாவை குறிவைக்கும் புதிய ஏவுகணை !


பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால், அதன் முதன்மை இலக்கு, அம்ரிட்ஸார் நகரமாக இருக்கும்!

வாஷிங்டன், அமெரிக்கா: “பாகிஸ்தான் சமீபத்தில் சோதனை செய்துள்ள ஏவுகணை ரகம், இந்தியாவை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார், அணுஆயுத ஆராய்ச்சி நிபுணர் ஹான்ஸ் கிரிஸ்டென்சன். இவர், Federation of American Scientists’ Nuclear Information Projectன் இயக்குனர்.

கிரிஸ்டென்சன் குறிப்பிடும் ஏவுகணை பாகிஸ்தானியத் தயாரிப்பான ஹாஃப்ட்-9 ரக ஏவுகணை (NASR ரக ஏவுகணையின் பாகிஸ்தானிய ‘காப்பி’ இது என்கிறார்கள்).

வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்த ஏவுகணை ஏதோ சாதாரண விவகாரம் போலத்தான் தோன்றும். காரணம், இது குறுகிய தூரம் செல்லக்கூடிய (short range missile) ஏவுகணைதான்.

ஆயுதத் தயாரிப்பு நாடுகள் அனைத்துமே, இப்போதெல்லாம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைத் தயாரிப்புகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அப்படியான நிலையில், பாகிஸ்தான் மாத்திரம் எதற்காக குறுகிய தூரம் செல்லக்கூடிய ஏவுகணைத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதற்குக் காரணமே, பாகிஸ்தான் ஒரே எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது என்கிறார் கிரிஸ்டென்சன்.

அதாவது, பாகிஸ்தானின் எல்லையிலிருந்து குறுகிய தூரத்தில் சில முக்கிய இந்திய இலக்குகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரேயொரு எதிரி நாடு இந்தியாதான். எனவே, பாகிஸ்தானின் குறுகிய தூர ஏவுகணைத் தயாரிப்புகள் எல்லாமே இந்தியாவை மனதில் வைத்துத்தான் தயாரிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் இப்போது வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ள இந்த ஏவுகணையின் ரேன்ஞ், 60 கி.மீ.

பாகிஸ்தானின் எல்லையில் வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால், அதன் முதன்மை இலக்காக இருக்கக்கூடிய நகரம், அம்ரிட்ஸர்.அதைவிட நடுத்தர அளவில் வேறு பல இந்திய நகரங்களும் உள்ளன.

அம்ரிட்ஸர் நகரத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இந்தியாவின் பல ராணுவ முகாம்கள் பாகிஸ்தானின் எல்லையிலிருந்து 60 கி.மீ. ரேன்ஞ்சுக்குள் இருக்கின்றன. அவற்றைவிட, இந்தியாவின் நடுத்தர அளவிலான ஆயுதக் கிடங்குகள் சிலவும், இதே 60 கி.மீ. ரேன்ஞ்சுக்குள் வருகின்றன.

மற்றொரு விஷயம், இது சிறிய ரகத்திலான ஏவுகணை. அதனால், அதன் தயாரிப்புச் செலவும் அதிகமில்லை. பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட்டில் இதன் தயாரிப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்களது ராணுவ பட்ஜெட்டுக்குள், இதுபோன்ற ஏவுகணைகளை நூற்றுக்கணக்கில் தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்வது, அவ்வளவு சிரமமான காரியமல்ல.

பாகிஸ்தானின் இந்த வருட ராணுவ பட்ஜெட்டில் 6 சதவீத நிதி ஒதுக்கீடே இந்த ஏவுகணையை நூற்றுக்கணக்கில் தயாரிக்கப் போதுமானது.

ஹாஃப்ட்-9 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்து விட்டதால், இவ்வகை ஏவுகணைகள் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படவுள்ளதாகக் கூறியிருக்கிறது பாகிஸ்தான்

சிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி ! இப்படியும் சிக்கினார் தயாநிதி !!


“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே! உங்களுக்கு சி.பி.ஐ.யிடம் வர ஆறு வருடங்கள் எடுத்தனவா?” ஏர் செல்லின் முன்னாள் அதிபர் சிவசங்கரன் வி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, சி.பி.ஐ. அதிகாரி கள் கேட்ட முதல் கேள்வி இது.

இதற்கு சிவசங்கரன், “தயாநிதி மாறனால் ஏற்பட்டிருக்கக்கூடிய உயிர் ஆபத்தில் இருந்து தப்புவதற்காகவே நான், இந்தியாவை விட்டு வெளியேறி விட்டேன்” என்று பதிலளித்ததாகத் தெரிகின்றது. இந்தப் பதிலை சி.பி.ஐ. தயாநிதிக்கு எதிராக உபயோகித்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், சிவசங்கரன் ஆறு வருடங்களுக்குப்பின் தயாநிதிக்கு எதிரான வெடிகுண்டாக மாறியதற்கு, மற்றொரு நபரின் தூண்டலும் காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

அந்த மற்றொரு நபர், தி.மு.க.வின் உயர்மட்ட பெண்மணி என்பதே இதிலுள்ள ஹைலைட்!

சிக்கலில் மாட்டப்பட்டுள்ள தயாநிதியும் தி.மு.க.தான். அவரும், தி.மு.க. உயர்மட்டக் குடும்ப உறுப்பினர்தான். அப்டியிருந்தும், தி.மு.க.வின் மற்றொரு உயர்மட்டக் குடும்ப பெண்மணி எதற்காக தயாநிதிக்கு எதிராக, சிவசங்கரனுக்கு கொம்பு சீவி விடவேண்டும்?

“எல்லாமே குடும்ப உட்பூசல்தான்” என்கிறது விபரமறிந்த தகவல்!

தி.மு.க.வில் எந்தவித செல்வாக்கும் இல்லாமல் தயாநிதி இருந்த காலத்தில், டில்லியை நோக்கி பாதை காட்டிவிட்டதே இந்த பெண்மணிதான். அதன் பிறகு, மதுரை அடிதடியுடன் குடும்பம் பிரிந்தபோது, தயாநிதிக்கு ஆதரவாக இருந்தவரும் இதே பெண்மணிதான்.

ஆனால், ராசா.. கனிமொழி.. என்று வரிசையாக ஆட்கள் உள்ளே போகத் தொடங்க, தயாநிதி மாத்திரம் மத்திய அமைச்சர் பந்தாவுடன் வலம்வந்து கொண்டிருந்தது இந்த பெண்மணியின் மனதில் ஏற்பட்ட முதல் நெருடல்.

அதற்கு அடுத்தபடியாக, இந்த பெண்மணிக்கு மற்றொரு விடயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. டில்லி நினைத்தால், கோர்ட் கேஸையெல்லாம் ஊதித் தள்ளிவிடலாம் என்பதே அந்த நம்பிக்கை.

“அதற்கான காலம் கடந்துவிட்டது. இப்போது விவகாரம் இந்திய சட்ட எந்திரத்துக்குள் போய்விட்டது. இனி டில்லி நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று குடும்பத் தலைவர் உட்பட, யார் விளக்கிச் சொன்னாலும் பெண்மணி, தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்வதாயில்லை.

இடையே சிறிதுகாலம் தயாநிதியுடன் இந்த பெண்மணி முரண்பட்டு இருந்தார். அப்படியிருந்தும், கோர்ட் விவகாரத்தை டில்லியில் பேசி சுமுகமாக முடித்துத் தரும்படி ஒரு கோரிக்கையுடன் தயாநிதியை அணுகியிருக்கிறார். ஆனால், அதற்கு தயாநிதி கூறிய பதில், குடும்பத் தலைவர் கூறிய அதே பதில்தான்! “காரியம் கையை விட்டுப் போய்விட்டது”

இதையடுத்தே, மீண்டும் தயாநிதிக்கு எதிரானவரானார் பெண்மணி.

முன்பாவது, கோபத்தில் இருந்தார். இப்போது ஆவேசத்தில் குமுறத் தொடங்கினார். “நாங்கள் சிக்கலில் மாட்டினால் டில்லியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால், தயாநிதி மாட்டினால் என்ன செய்வார்கள்?”

இந்தப் பின்னணியில்தான் சிவசங்கரன், இந்த பெண்மணியால் போன் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டார் என்கிறார்கள்.

சிவசங்கரனும் தயாநிதிக்கு எதிரான ஒரு நகர்வைச் செய்யலாமா என்று யோசித்துகொண்டிருந்த நேரம் அது. அதற்குள் இந்த பெண்மணியின் தூண்டலும் சேரவே-

சிவசங்கரன், சி.பி.ஐ.யின் அலுவலகம் போய் சேர்ந்தார் என்கிறார்கள்!

ஸ்ரீலங்கா அங்கே போகுமுன், கச்சதீவுக்கு சென்றவன் நான் - விஜயகாந்த் !


தமிழக முதலமைச்சர் கச்சதீவை மீட்கும் தீர்மானம் கொண்டுவர, எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

“முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்துக்கு முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.

“நான் மதுரையில் பிறந்தவன். மதுரையிலேயே வளர்ந்தவன். இந்த வகையில், ஒரு காலத்தில் கச்சதீவுக்கு நானும் போயிருக்கிறேன். நான் அங்கே சென்றபோது, அந்தப் பகுதியில் பண்டமாற்று முறையில் பொருட்கள் கொடுத்து வாங்கப்பட்டதை கண்டிருக்கிறேன்.

இன்று அந்த தீவிற்கு தமிழர்கள் யாரும் போக முடியாத, வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதான் மக்களுக்கு, முக்கியமாக தமிழக மீனவர்களுக்கு உள்ள குறை. மக்களுடைய குறைகளை அறிந்து, அதை தீர்க்கின்ற வகையில் நடப்பது தான் ஜனநாயகம். கடந்த தி.மு.க. அரசு, மீனவர்களின் குறைகள் எதையும் கேட்கவில்லை.

1973 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் ஊழல் தடுப்பு இயக்கம் நடத்தியபோது, தி.மு.க., அதற்கு ஆதரவு அளித்தது என கருணாநிதி பேசியிருக்கிறார். அதன் பின்னணி என்ன?

1972ம் ஆண்டில் தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேறி அ.தி.மு.க.வை, தொடங்கினார். அன்றைய முதல்வர் கருணாநிதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்திருக்கிறார் என்பதே எம்.ஜி.ஆரின் பிரதான குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டு கருணாநிதியை மிரள வைத்தது. எங்கே தன்மீது மத்திய அரசு வழக்கு தொடுத்து விடுமோ என்று அவர் பயந்தார்.

அதிலிருந்து தப்புவதற்காகத்தான், ஸ்ரீலங்காவுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி!” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

ஸ்ரீலங்காவுக்கு கச்சதீவு கொடுக்கப்பட்ட உடன்பாடு தொடர்பாக, மற்றொரு பழைய உதாரணத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

“மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. அப்போது மேற்கு வங்காளத்தின் முதல்வராக இருந்த பி.சி.ராய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடுத்தார்.

அந்த வழக்கில் அவரது வாதம் என்னவென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியை, இன்னொரு நாட்டிற்கு வழங்க வேண்டுமென்றால், இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மாத்திரம் போதாது. நாடாளுமன்றத் தீர்மானத்துடன், நீதிமன்றமும் அனுமதி வழங்கவேண்டும்.

இந்த இரு அனுமதியும் இருந்தால்தான், நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும்.

ஆனால், ஸ்ரீலங்காவுக்கு, கச்சதீவு அவ்வாறு வழங்கப்படவில்லை.நாடாளுமன்றத் தீர்மானம் மாத்திரமே உள்ளது. கச்சதீவை ஸ்ரீலங்காவுக்கு வழங்க, நீதிமன்ற அனுமதி கிடையாது.

அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, இந்த விஷயத்தில்எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. வெறும் கண் துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்தியுள்ளார்.

இப்போது கச்சதீவை மீட்கும் முயற்சியில் முதல்வர் இறங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று பேசியிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

ஆ.ராசா மீது சி.பி.ஐ. புது குற்றச்சாட்டு.


டாடா குழும நிறுவனங்களைவிட ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை ஊழியர்களை மிரட்டியும் எச்சரித்தும் செயல்பட வைத்தார் அப்போதைய அமைச்சர் ஆ.ராசா என்று சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.

பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. தில்லியில் நடைபெறும் இந்த விசாரணையில் சி.பி.ஐ. பங்கேற்று இதுவரை தான் விசாரித்த, திரட்டிய தகவல்களை குழுவிடம் தெரிவித்து வருகிறது.

சி.பி.ஐ. (மத்தியப் புலனாய்வுக் கழகம்) அமைப்பின் தலைவரான இயக்குநர் ஏ.பி. சிங், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.

ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்; டாடா குழுமத்துக்கு அல்ல என்று தொலைத் தொடர்புத்துறையின் பிற ஊழியர்களை அப்போதைய அமைச்சர் ஆ.ராசாவும் அவருடைய துறைச்செயலாளர் சித்தார்த்தபெகுராவும் ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும்

மிரட்டியும் எச்சரித்தும் காரியம் சாதித்ததாக ஏ.பி. சிங் தெரிவித்தார்.

வயர்லெஸ் உரிமம் வழங்குவதற்கான ஆலோசகர் ஆர்.பி. அகர்வாலை மிரட்டியும் நிர்பந்தப்படுத்தியும் தில்லி சர்க்கிளில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கே உரிமம் வழங்க வேண்டும் என்ற குறிப்பை அவர் மூலம் பெற்றனர் என்று சிங் தெரிவித்தார்.

டாடா நிறுவனம்: டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டி.டி.எஸ்.எல்.) என்ற நிறுவனம் 20 சர்க்கிள்களில் இரட்டைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொலைத் தொடர்புத் துறையின் கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தது. 2008 ஜனவரி 10-ம் தேதி அதற்கான அனுமதிக் கடிதத்தையும் அது பெற்றது.

துறை விதித்த நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்த டாடா குழுமம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வயர்லெஸ் பிரிவிடம் (திட்டமிடல், ஒருங்கிணைத்தல்) மனுச் செய்தது. ஆனால் அந்த மனு தொலைத் தகவல் தொடர்புத்துறையில் எங்கோ காணாமல் போய்விட்டது.

டாடா குழுமத்திலிருந்து துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, புதிதாக மனு அளிக்குமாறு 2008 மார்ச் 5-ம் தேதி கூறப்பட்டது. ஆனால் அதற்குள் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் அளிக்கப்பட்டுவிட்டன என்று கூட்டுக்குழுவிடம் தெரிவித்தார் ஏ.பி. சிங்.

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு குறித்தும் சில தகவல்களை அவர் அளித்தார். அனில் அம்பானி தலைமையிலான நிறுவனத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக அல்லாமல் திரைமறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பத்திரிகைத் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

350 கி.மீ.தூரம் செல்லும் பிரிதிவி-2 ஏவுகணை சோதனை வெற்றி.

350 கி.மீ.தூரம் செல்லும்  பிரிதிவி-2 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிருதிவி வகை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அடிக்கடி குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி செலுத்தி சோதனை செய்து வருகிறது.

அந்த வகையில் இன்று காலை பிரிதிவி-2 ரக ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் இருந்து காலை 9.05 மணிக்கு "மொபைல் லாஞ்சர்" மூலம் பிரதிவி-2 ஏவுகணை ஏவப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை மிகத் துல்லியமாக தாக்கியது.

இதையடுத்து பிரதிவி ஏவுகணை முழு வெற்றி பெற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ள பிரிதிவி-2 ரக ஏவுகணை சோதனைகள் அனைத்தும் 100 சதவீத வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரிதிவி-2 ரக ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணையில் 500 முதல் 1000 கிலோ எடை உள்ள அணு குண்டுகள் வைத்து பயன்படுத்தப்படும். 9 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரிதிவி ஏவுகணைகள் இதுவரை 4 தடவை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப் பட்டுள்ளது.