Friday, June 10, 2011

இந்தியாவை குறிவைக்கும் புதிய ஏவுகணை !


பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால், அதன் முதன்மை இலக்கு, அம்ரிட்ஸார் நகரமாக இருக்கும்!

வாஷிங்டன், அமெரிக்கா: “பாகிஸ்தான் சமீபத்தில் சோதனை செய்துள்ள ஏவுகணை ரகம், இந்தியாவை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார், அணுஆயுத ஆராய்ச்சி நிபுணர் ஹான்ஸ் கிரிஸ்டென்சன். இவர், Federation of American Scientists’ Nuclear Information Projectன் இயக்குனர்.

கிரிஸ்டென்சன் குறிப்பிடும் ஏவுகணை பாகிஸ்தானியத் தயாரிப்பான ஹாஃப்ட்-9 ரக ஏவுகணை (NASR ரக ஏவுகணையின் பாகிஸ்தானிய ‘காப்பி’ இது என்கிறார்கள்).

வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்த ஏவுகணை ஏதோ சாதாரண விவகாரம் போலத்தான் தோன்றும். காரணம், இது குறுகிய தூரம் செல்லக்கூடிய (short range missile) ஏவுகணைதான்.

ஆயுதத் தயாரிப்பு நாடுகள் அனைத்துமே, இப்போதெல்லாம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைத் தயாரிப்புகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அப்படியான நிலையில், பாகிஸ்தான் மாத்திரம் எதற்காக குறுகிய தூரம் செல்லக்கூடிய ஏவுகணைத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதற்குக் காரணமே, பாகிஸ்தான் ஒரே எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது என்கிறார் கிரிஸ்டென்சன்.

அதாவது, பாகிஸ்தானின் எல்லையிலிருந்து குறுகிய தூரத்தில் சில முக்கிய இந்திய இலக்குகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரேயொரு எதிரி நாடு இந்தியாதான். எனவே, பாகிஸ்தானின் குறுகிய தூர ஏவுகணைத் தயாரிப்புகள் எல்லாமே இந்தியாவை மனதில் வைத்துத்தான் தயாரிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் இப்போது வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ள இந்த ஏவுகணையின் ரேன்ஞ், 60 கி.மீ.

பாகிஸ்தானின் எல்லையில் வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால், அதன் முதன்மை இலக்காக இருக்கக்கூடிய நகரம், அம்ரிட்ஸர்.அதைவிட நடுத்தர அளவில் வேறு பல இந்திய நகரங்களும் உள்ளன.

அம்ரிட்ஸர் நகரத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இந்தியாவின் பல ராணுவ முகாம்கள் பாகிஸ்தானின் எல்லையிலிருந்து 60 கி.மீ. ரேன்ஞ்சுக்குள் இருக்கின்றன. அவற்றைவிட, இந்தியாவின் நடுத்தர அளவிலான ஆயுதக் கிடங்குகள் சிலவும், இதே 60 கி.மீ. ரேன்ஞ்சுக்குள் வருகின்றன.

மற்றொரு விஷயம், இது சிறிய ரகத்திலான ஏவுகணை. அதனால், அதன் தயாரிப்புச் செலவும் அதிகமில்லை. பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட்டில் இதன் தயாரிப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்களது ராணுவ பட்ஜெட்டுக்குள், இதுபோன்ற ஏவுகணைகளை நூற்றுக்கணக்கில் தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்வது, அவ்வளவு சிரமமான காரியமல்ல.

பாகிஸ்தானின் இந்த வருட ராணுவ பட்ஜெட்டில் 6 சதவீத நிதி ஒதுக்கீடே இந்த ஏவுகணையை நூற்றுக்கணக்கில் தயாரிக்கப் போதுமானது.

ஹாஃப்ட்-9 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்து விட்டதால், இவ்வகை ஏவுகணைகள் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படவுள்ளதாகக் கூறியிருக்கிறது பாகிஸ்தான்

No comments: