Friday, June 10, 2011

1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி.க்கள் இருப்பு உள்ள இலவச டி.வி.திட்டம் ரத்து.

இலவச டி.வி.திட்டம் ரத்து: 1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி.க்கள் ஆதரவற்ற இல்லம்- அரசு ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்படும்;  ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது கூறியதாவது:-

மக்கள் நலனை முன் நிறுத்தி எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற நாளிலேயே மக்கள் பயன் பெறும் திட்டங்களில் கையெழுத்திட்டேன். தி.மு.க.வினர் இலவசங்களை வழங்கி மக்களை ஏமாற்றி, அதை ஓட்டுக்கான கருவியாகத்தான் பார்த்தனர்.

தி.மு.க. ஆட்சியில் இலவச டி.வி. இல்லாதவர்களுக்கு டி.வி. கொடுப்பதாக அறிவித்தனர். ஒரு கோடியே 64 லட்சம் டி.வி. பெட்டி, இது வரை டி.வி.யே இல்லாத குடும்பத்துக்குத்தான் கொடுக்கப்பட்டு இருக்குமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் கூட காரில் வந்து இலவச டி.வி. வாங்கிச் சென்றதை மக்கள் பார்த்தனர்.

எனவே இலவச கலர் டி.வி. திட்டம், மக்கள் பயன்பட கூடிய திட்டமா? அல்லது ஆட்சியாளர்களுக்கு பயன்பட்ட திட்டமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இலவச டி.வி. ஒவ்வொன்றுக்கும் ரூ. 2265 செலவு செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கப்பட்டது. டி.வி. வாங்கினாலும், அதில் கேபிள் இணைப்பு பெற்ற வகையில் பயன் அடைந்தவர்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், துரை தயாநிதிதான்.

ஆண்டு ஒன்றுக்கு கேபிள் டி.வி.க்காக ரூ. 4 ஆயிரம் கோடி பணத்தை மக்கள் கொடுத்து வருகிறார்கள்.இந்த அளவுக்கு வருமானம் வகையில் கருணாநிதி தன் குடும்பத்துக்கு வழி செய்து கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்பம் கேபிள் டி.வி. மூலம் பெற்றுள்ளது. எனவே இலவச டி.வி. வழங்கும் திட்டம், அவரது சொந்த நலனுக்காக கொண்டு வந்த திட்டம் என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

6-ம் கட்டமாக இலவச கலர் டி.வி. வழங்க 10 லட்சம் டி.வி. பெட்டி கொள்முதல் செய்ய முடிவு செய்திருந்தனர்.இதில் கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் டி.வி. பெட்டிகளின் கொள்முதல் உத்தரவு ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்களுக்கு வழங்கப்படாமல் 1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி. பெட்டிகள் உள்ளது.

இந்த டி.வி. பெட்டிகள் ஆதரவற்ற இல்லங்கள், அரசு பள்ளிகள், பஞ்சாயத்துகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி போன்றவற்றுக்கு வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இது போன்ற ஊழல் மலிந்த திட்டங்கள்தான் நடை முறைப் படுத்தப்பட்டன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதால் இந்த உதாரணத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: