Friday, June 10, 2011

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை முடிவுகள்.


சிபிஐ திமுகவினர் மீது தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் இறுதியில் திமுக வெளியிட்ட அறிக்கையில், 2ஜி வழக்கு விவகாரத்தை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றும், கலைஞர் டிவிக்கு கடனாக தரப்பட்ட பணத்தை லஞ்சம் போல சிபிஐ காட்ட முயல்வதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில் மத்தியில் காங்கிரசுடனான கூட்டணி குறித்து திமுக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ், குறி வைத்துத் தாக்கி வருவதாக வும் திமுக கருதுகிறது. இதையடுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்ய இன்று மாலை உயர் மட்டக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தையொட்டி இன்று காலை முதல் மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தி வந்தார். அதில், இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என்று கருணாநிதி கூறியதாகவும் அதை அழகிரி உள்ளிட்டோர் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

அழகிரியின் கருத்தை மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

முன்னதாக இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கனிமொழியிடமும் கருணாநிதி ஆலோசனை கேட்டுள்ளார். நேற்று டெல்லி திகார் சிறைக்குச் சென்ற திமுக மூத்த தலைவரான துரைமுருகன் இது குறித்து கனிமொழியுடன் பேசியுள்ளார்.

தன்னை மையமாக வைத்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், கட்சியின் எதிர்காலம் - நலனுக்கு எது சரியான முடிவாக இருக்குமோ அந்த முடிவை எடுக்குமாறு துரைமுருகனிடம் கனிமொழி கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் கூட்டணியை முறிக்காமல் மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறலாம் என்று சில தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியிருந்தனர்.

இதனால் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது, வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற முடிவையே திமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல எந்த முக்கிய முடிவையும் எடுக்காமல் சப்பென்று முடிந்து விட்டது திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

திமுகவினர் மீது சிபிஐ தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது.

திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மாற்றப் பட்டதற்கு கண்டனம்.

தமிழகத்தில் சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து ள்ள தீர்ப்புக்கு வரவேற்பு. இந்தத் தீர்ப்பை ஏற்று நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியைத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

ஜூன் 20 முதல் 30 வரை பொதுக் கூட்டங்கள் நடத்துவது.

ஜூலையில் திமுக பொதுக் குழுவைக் கூட்டுவது.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு.

சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments: