Friday, April 15, 2011

இளைஞர்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன் : வைகோ.


மதிமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த 2.4.2011 அன்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இத்தகவலை அறிந்த வைகோ, கடந்த 5.4.2011 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களைக் காப்பாற்றிடக் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் நால்வரும், இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விக்டஸ் என்பவரது சடலம் மட்டும் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

எஞ்சிய இரு மீனவர்களின் சடலங்கள், தொண்டி அருகே, இலங்கைக் கடற்படையால் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மற்றொருவர் குறித்துத் தகவல் இல்லை. இறந்த மீனவர் ஒருவரின் கை, வெட்டித் துண்டிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த வைகோ, இன்று ராமேஸ்வரம் சென்று, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார். வைகோவைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் கதறி அழுதனர். வைகோ குழந்தைகளை ஆற்றுப்படுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

"உங்களின் தாங்க முடியாத துக்கத்திலும், கண்ணீரிலும் பங்கு கொள்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான்கு மீனவர்களைக் கொன்றது, இலங்கைக் கடற்படையினர் தான். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்குவதுடன், தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் மத்திய-மாநில அரசுகள் கருதுகின்றன.

மீனவர் படுகொலை தொடருமானால், இளைஞர்களைத் திரட்டி, கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்," என அவர்களிடம் வைகோ கூறினார்.

மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, மதிமுக சார்பில் தலா ரூ. 25,000 உதவித்தொகை வழங்கினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பய் விலகல்... ரவி வெங்கடசேன் நியமனம்: என்னதான் நடக்கிறது இன்போஸிஸில்?


பெங்களூரு, கடந்த இரு தினங்களாக மிகப் பெரிய நிர்வாக மாறுதல்களைச் சந்தித்து வருகிறது தொழில்நுட்பத் துறையில் முக்கிய நிறுவனமாத் திகழும் இன்போஸிஸ்.

இந்த காலாண்டில் இன்போஸிஸ் நிறுவனம் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்த காலாண்டு முடிவுகள் வெளியான கையோடு நிறுவனத்தின் பங்கு மதிப்பு சடசடவென சரிந்ததது. 7 சதவீதத்துக்கு மேல் சரிவு காணப்பட்டதும் முதலீட்டாளர்கள் பதற ஆரம்பித்துவிட்டார்கள்.

பய், தினேஷ் விலகல்

இன்னொரு பக்கம் இன்போஸிஸ் மனிதவளத் துறை தலைவர் மோகன்தாஸ் பய் நிறுவனத்திலிருந்து விலகினார். இந்த காலாண்டில் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு செயல்திறன் இல்லை என்பதாலேயே அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரும் இயக்குநருமான தினேஷ் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவர் வெளியேறும் அதே நேரம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருந்த ரவி வெங்கடேசன் இன்போஸிஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக இன்றுமுதல் பொறுப்பேற்றுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் ரவி. அதற்கு முன் இவர் கம்மின்ஸ் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5889 பணியாளர்கள் விலகல்

கடந்த நிதியாண்டில் மட்டும் நியமிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கை 8,930 பேர். இவர்களில் 5889 பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளனர். ஆனாலும் வரும் ஆண்டில் 45000 புதிய பணியாளர்களை நியமிக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்போஸிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,30,820.

ஏப்ரல் 30-ல் புதிய தலைவர் அறிவிப்பு

இதற்கிடையே வரும் ஏப்ரல் 30-ம் தேதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கான புதியவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது இன்போஸிஸ் நிர்வாகம். இப்போதைய தலைவர் நாராயணமூர்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார்.

1981-ம் ஆண்டு ஏழு கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர்களுடன் வெறும் 250 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்டது இந்த இன்போஸிஸ். இன்று அதன் நிகர லாபம் மட்டும் 408.5 மில்லியன் டாலர்கள்.

இத்தனை ஆண்டுகள் கிடுகிடு வளர்ச்சியைக் கண்ட இந்த நிறுவனம் இந்த ஆண்டுதான் சற்று மந்தமான கட்டத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியே என்றும், இது இன்போஸிஸை பாதிக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.

பாடகி சித்ராவின் மகள் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி.


பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் அகால மறைவால் திரையுலகம் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நந்தனாவின் உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பாடகி சித்ராவுக்கும் என்ஜினீயரான விஜயகிருஷ்ணர் என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 2002 ல் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நந்தனம் என்ற மலையாள படத்தில் சித்ரா பாடிய பாடலுக்கு கேரள அரசின் விருது கிடைத்தது.

இதனால் குழந்தைக்கு நந்தனா என்ற பெயர் சூட்டினார். குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது. குடும்பத்துடன் அவர் சென்னை சாலிகிராமம் - விருகம்பாக்கம் ஏ.ஆர்.கே.தெருவில் வசித்து வந்தார்.

ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், (மனநலம் குன்றியவர். யாரிடமும் எளிதில் பழக முடியாத மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை) தனது மகளை சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார். சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருந்தார். தனது மகளை விட்டுப் பிரியாமல் பாசத்துடன் வளர்த்து வந்தார் சித்ரா. எங்கு போனாலும் மகளையும் உடன் அழைத்துச் செல்வார்.

மகளுக்காகவே பிரத்யேகமாக பாடல்கள் பாடி டிவிடி வடிவில் வீட்டில் வைத்திருப்பார். தான் ஒருவேளை மகளை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனால் இந்த டிவிடியை கேட்குமாறு வீட்டில் சொல்லி விட்டுச் செல்வார் சித்ரா. அந்த அளவுக்கு சித்ராவின் குரல், நந்தனாவுடன் இருந்து கொண்டே இருக்கும்.

8 வயதான நந்தனாவை, துபாயில் நடைபெறும் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா குளிக்கச் சென்றாள்.

அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். அக்கம் பக்கத்தினர் நந்தனாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை நந்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

சித்ராவுக்கு இப்படி ஒரு பயங்கர துக்க சம்பவம் நடைபெறும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, குழந்தையை தனது மடியில் கிடத்தி கதறி அழுதது அத்தனை பேரையும் உருக்கி விட்டது.

நீண்ட காலம் கழித்து கடவுள் தனக்கு வரத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு விட்டாரே என்று கதறி அழுதார் சித்ரா.

நந்தனாவின் உடல் இன்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர்.

இதையடுத்து திரையுலகினர் பெருமளவில் திரண்டு வந்து குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பழம்பெரும் பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.ஜானகி பின்னர் கூறுகையில், சித்ராவுக்கு இப்படி ஒரு துக்கம் ஏற்பட்டிருக்கக் கூடாது. மிகுந்த வேதனையாக இருக்கிறது. நிச்சயம் சித்ராவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை, சித்ராவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சியை உருவாக்கும் என்றார்.

நந்தனாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.இலங்கை இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் பலி: அமெரிக்க கருத்தரங்கில் தகவல்.

அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுள் ஒருவரான கலாநிதி அருள்நாதன்,

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக இறுதிக்கட்ட போரின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பதுக்கும் மேலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். இச்செய்தி இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த கருத்தரங்கில் இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி கலாநித பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசுகளின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கிய பிரநிதிகளும் கலந்து கொண்டதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ளன.


வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்து விட்ட அரசியல்வாதிகள்-அன்னா ஹஸாரேஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை அரசியல்வாதிகள் சீர்குலைத்து விட்டனர் என்று அன்னா ஹஸாரே கடுமையாக தாக்கியுள்ளார்.

டெல்லியை முகாமிட்டு ஊழல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்த அன்னா ஹஸாரே தற்போது மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஊழல்வாதிகளைத் தண்டிக்க வகை செய்யும், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, சமீபத்தில் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தேன். இதற்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது. ஊழலுக்கு எதிராக, மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வை பார்த்து, சில அரசியல் கட்சித் தலைவர்களும், குற்றப் பின்னணி உடையவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

எனவே, ஊழலுக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்னை பொறுத்தவரை, அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என, ஒருபோதும் கூறியது இல்லை. அனைத்து துறைகளிலுமே, குறிப்பிட்ட சில நல்ல மனிதர்கள் இருப்பர். ஆனால், இது போன்றவர்கள், தங்களைச் சுற்றி நடக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது தான், அவர்கள் நேர்மையானவர்கள் என, மக்களுக்கு தெரிய வரும்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மவுனமாக இருப்பதும், ஒரு வகையில் ஊழலை ஆதரிக்கும் செயல் தான். ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்ததற்கு, அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள், முறைகேடான வழிகளின் மூலம், ஏராளமாக கறுப்பு பணம் ஈட்டுகின்றனர். ஆனால், அந்த கறுப்பு பணத்தில், குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டுமே, வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்.

கறுப்பு பணம் இருந்தால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல குணங்கள் உடைய, நேர்மையான வேட்பாளர்கள், தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரை, நான் பாராட்டியதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர்களுடைய மாநிலங்களில், அவர்கள் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளையும், திட்டங்களையும் மட்டும் தான், நான் பாராட்டினேன். மற்றபடி, கலவரம் நடந்தபோது, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளேன்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், சாதாரண மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் .


லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்: இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் கண்டனம்.


லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா, சீனா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபிக்கு எதிராக சிலர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த மாதம் 17-ந் தேதி அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, லிபியா மக்களை (கிளர்ச்சியாளர்களை) காப்பாற்றுவதற்காக லிபிய ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவானது.

ஆனால், அந்த தீர்மானத்தின் மீது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளும் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதே நேரத்தில் ஐ.நா. தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 'நேட்டோ' நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதலை தொடங்கி விட்டன. இங்கிலாந்தில் இருந்து மேலும் ஆயுதங்கள் அனுப்ப உள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற நாடுகளும் லிபியா மீதான தாக்குதல் ஆதரிக்கின்றன.

'பிரிக்ஸ்' மாநாடு

இந்த சூழ்நிலையில் சக்தி வாய்ந்த பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு சீனாவில் உள்ள சான்யா நகரில் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜிந்தாவ் உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், லிபியா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, 5 நாடுகளின் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய கிழக்கு, வடஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். லிபியாவில் ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ராணுவ தாக்குதல் தேவையற்றது என்பதை நாங்கள் கூட்டாக பகிர்ந்து கொள்கிறோம். லிபியா அதிபரை பதவியில் இருந்து வெளியேற்ற தூதரக ரீதியிலான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கத்தார் நாட்டில் மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் முதல் முறையாக ஒன்று கூடி விவாதித்துள்ளனர். அப்போது, கடாபி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், லிபியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பேச்சு வார்த்தை பணிகளை தொடங்க முன் வந்துள்ள ஆப்பிரிக்க கூட்டமைப்பை பாராட்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2ஜி உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்ற தமிழ் மையம்.


2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

கனிமொழி, தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த மையம்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தி வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ் மையம் அமைப்பு, 2ஜி உரிமம் பெற்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில், தமிழ் மையம் அமைப்புக்கு அந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நேரடியாகவே நன்கொடைகளை வழங்கியது தமிழ் மையம் அமைப்பின் ஆடிட் செய்யப்பட்ட பாலன்ஸ் ஷீட் மூலம் தெரிய வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அந்த காலகட்டத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராசா இருந்தார். அப்போதுதான் 2ஜி உரிமங்களும் அவரால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய தகவலால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சூடு கூடியுள்ளது.