Friday, April 15, 2011

லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்: இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் கண்டனம்.


லிபியா மீது அமெரிக்க கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா, சீனா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபிக்கு எதிராக சிலர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த மாதம் 17-ந் தேதி அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, லிபியா மக்களை (கிளர்ச்சியாளர்களை) காப்பாற்றுவதற்காக லிபிய ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவானது.

ஆனால், அந்த தீர்மானத்தின் மீது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளும் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதே நேரத்தில் ஐ.நா. தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 'நேட்டோ' நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதலை தொடங்கி விட்டன. இங்கிலாந்தில் இருந்து மேலும் ஆயுதங்கள் அனுப்ப உள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற நாடுகளும் லிபியா மீதான தாக்குதல் ஆதரிக்கின்றன.

'பிரிக்ஸ்' மாநாடு

இந்த சூழ்நிலையில் சக்தி வாய்ந்த பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு சீனாவில் உள்ள சான்யா நகரில் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜிந்தாவ் உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், லிபியா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, 5 நாடுகளின் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய கிழக்கு, வடஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். லிபியாவில் ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ராணுவ தாக்குதல் தேவையற்றது என்பதை நாங்கள் கூட்டாக பகிர்ந்து கொள்கிறோம். லிபியா அதிபரை பதவியில் இருந்து வெளியேற்ற தூதரக ரீதியிலான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கத்தார் நாட்டில் மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் முதல் முறையாக ஒன்று கூடி விவாதித்துள்ளனர். அப்போது, கடாபி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், லிபியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பேச்சு வார்த்தை பணிகளை தொடங்க முன் வந்துள்ள ஆப்பிரிக்க கூட்டமைப்பை பாராட்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments: