Friday, April 15, 2011

பாடகி சித்ராவின் மகள் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி.


பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் அகால மறைவால் திரையுலகம் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நந்தனாவின் உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பாடகி சித்ராவுக்கும் என்ஜினீயரான விஜயகிருஷ்ணர் என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 2002 ல் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நந்தனம் என்ற மலையாள படத்தில் சித்ரா பாடிய பாடலுக்கு கேரள அரசின் விருது கிடைத்தது.

இதனால் குழந்தைக்கு நந்தனா என்ற பெயர் சூட்டினார். குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது. குடும்பத்துடன் அவர் சென்னை சாலிகிராமம் - விருகம்பாக்கம் ஏ.ஆர்.கே.தெருவில் வசித்து வந்தார்.

ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், (மனநலம் குன்றியவர். யாரிடமும் எளிதில் பழக முடியாத மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை) தனது மகளை சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார். சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருந்தார். தனது மகளை விட்டுப் பிரியாமல் பாசத்துடன் வளர்த்து வந்தார் சித்ரா. எங்கு போனாலும் மகளையும் உடன் அழைத்துச் செல்வார்.

மகளுக்காகவே பிரத்யேகமாக பாடல்கள் பாடி டிவிடி வடிவில் வீட்டில் வைத்திருப்பார். தான் ஒருவேளை மகளை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனால் இந்த டிவிடியை கேட்குமாறு வீட்டில் சொல்லி விட்டுச் செல்வார் சித்ரா. அந்த அளவுக்கு சித்ராவின் குரல், நந்தனாவுடன் இருந்து கொண்டே இருக்கும்.

8 வயதான நந்தனாவை, துபாயில் நடைபெறும் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா குளிக்கச் சென்றாள்.

அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். அக்கம் பக்கத்தினர் நந்தனாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை நந்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

சித்ராவுக்கு இப்படி ஒரு பயங்கர துக்க சம்பவம் நடைபெறும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, குழந்தையை தனது மடியில் கிடத்தி கதறி அழுதது அத்தனை பேரையும் உருக்கி விட்டது.

நீண்ட காலம் கழித்து கடவுள் தனக்கு வரத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு விட்டாரே என்று கதறி அழுதார் சித்ரா.

நந்தனாவின் உடல் இன்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர்.

இதையடுத்து திரையுலகினர் பெருமளவில் திரண்டு வந்து குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பழம்பெரும் பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.ஜானகி பின்னர் கூறுகையில், சித்ராவுக்கு இப்படி ஒரு துக்கம் ஏற்பட்டிருக்கக் கூடாது. மிகுந்த வேதனையாக இருக்கிறது. நிச்சயம் சித்ராவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை, சித்ராவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சியை உருவாக்கும் என்றார்.

நந்தனாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.



3 comments:

Priya Thambi said...

சித்ராவின் மகள் மரணச்செய்தி கேட்டதில் இருந்து எதுவும் செய்ய முடியாமல் பேசாமல் அமர்ந்திருக்கிறேன்.. எனக்கு நெருங்கிய ஒரு உறவை இழந்து விட்டது போல மனம் வெறுமையாய் இருக்கிறது.. என் நேசத்திற்குரிய பாடகி சித்ரா.. பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு குழந்தை பிறந்தபோது கேரளாவே கொண்டாடியது அதை. ஆறாண்டுகளுக்கு முன்பு சித்ராவை நான் சந்தித்தேன். குழந்தை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அவருடைய உலகமே ‘ந்ந்தனா’ தான். அவருடன் இருந்த நிமிடங்களில் அவரது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது. சித்ரா அந்தக் குழந்தையோடும், அவரது சிரிப்போடும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது.

நந்தனா இன்று இல்லை என்பதை சித்ரா எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார் எனத் தெரியவில்லை.. தனது குரலாலும், சிரிப்பாலும் எத்தனையோ பேரை மகிழ வைத்த சித்ராவிடம் இருந்து இன்று மகிழ்ச்சி பறிக்கப்பட்டு விட்டது. எனது வெறுமையை போக்கிக் கொள்ள நான் சித்ரா பாடிய மலையாளப் பாடல்களைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. தன்னுடைய வெறுமையை சித்ரா எப்படி போக்கிக் கொள்ளப் போகிறார் எனத் தெரியவில்லை.

சித்ராவை சந்தித்தபோது, குழந்தையை கிருஷ்ணன் தான் தந்தான் எனச்சொல்லி, கிருஷ்ணனின் பெருமையைத் தான் பேசிக் கொண்டிருந்தார். அளவு கடந்த தெய்வ பக்தி உள்ளவர் அவர்.. பதினைந்து ஆண்டுகள் ஒரு குழந்தைக்காக காத்திருந்து, கிடைத்த குழந்தையை எட்டாண்டுகளில் பிரிவது பெருங்கொடுமை. சித்ரா வணங்கிய எல்லா தெய்வங்கள் மீதும் கோபம் வருகிறது. குழந்தைகளை பறிக்கும் தெய்வங்கள் இல்லாமல் போகட்டும்

நானானி said...

என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவ்த்துக் கொள்கிறேன்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

---------------------------------------------------------------------------------------------------------------------

வார்த்தைகளே வரவில்லை.

///////சித்ரா வணங்கிய எல்லா தெய்வங்கள் மீதும் கோபம் வருகிறது. குழந்தைகளை பறிக்கும் தெய்வங்கள் இல்லாமல் போகட்டும்/////

இல்லாமல் போகட்டும்.