Wednesday, December 14, 2011

கேரளா செல்லும் பன்றிக்கு ரயில்வே எஸ்பி தினகரன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு.



தேனி மாவட்டம் சின்னமனூரில் நேற்று இரவு கேரளாவுக்கு வெள்ளை பன்றிகள் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் 2 பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். போராட்டம் நடத்தியவர்களை இரவு முழுவதும் வீடு வீடாக கதவை தட்டி போலீசார் தேடினர். இதுதொடர்பாக 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன்பட்டியில் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான வெண்பன்றி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் கேரளாவுக்கு அனுப்பப்படும். இப்பண்ணை கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமானது என தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர். கிராம மக்கள் நேற்று பண்ணைக்குள் புகுந்து தாக்க திரண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே எஸ்பி தினகரன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதையடுத்து பன்றிகளை லாரிகளில் ஏற்றி கேரளா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்ணைக்குள் புகுந்த மக்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு பன்றிகளை 3 லாரிகளில் ஏற்றிக் கொண்டு சின்னமனூர், பொள்ளாச்சி வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர். இதையறிந்ததும் சின்னமனூரில் பொதுமக்கள் மூன்று லாரிகளையும் சிறைபிடித்தனர்.

லாரிகளுக்கு பாதுகாப்பாக வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சில் டிஐஜி அமல்ராஜின் கார் கண்ணாடி உடைந்தது. போலீசாரின் வேன்களும் சேதப்படுத்தப்பட்டன.

தடியடியில் முருகன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பன்றிகளை ஏற்றி வந்த லாரிகள் ஓடைப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டு பத்திரப்படுத்தப் பட்டன. இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை கற்களை தூக்கி போட்டு உடைத்தனர்.

போலீசார் அங்கு வந்ததும் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

நேற்று கேரளவத்தவர்களால் வெட்டப்பட்டு உயிர்தப்பி ஓடிவந்த தமிழர்களின் பாதுகாப்பை விட, தமிழக காவல்துறைக்கு கேரளா செல்லும் பன்றியின் பாதுகாப்பு முக்கியமாகப்பட காரணம் அங்கு பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் வேறு மாநிலத்தவரே.

முல்லைப்பெரியாறு அணை விவகார போராட்டக் களத்தில் நிற்கும் முக்கிய அதிகாரிகளான, தேனி மாவட்ட எஸ்.பி. பிரவின்குமார் ஆந்திரக்காரர். திண்டுக்கள் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்மாத்தூர் ராஜஸ்தான்காரர். தென்மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாஸ் ஒரிசாக்காரர். சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி. ஜார்ஜ் கேரளக்காரர். இவர்களுக்கெல்லாம் தமிழனின் தேவையும், உணர்வும் எங்கே புரியப்போகிறது?

கம்பம் மெட்டில் மக்களைத் தாக்கிய போலீஸ் ஏடிஜிபி ஜார்ஜைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.


கம்பம் மெட்டுப் பகுதியில் கேரளாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் திரண்ட மக்களை போலீஸார் தொடர்ந்து தடியடி நடத்தி கலைத்து விரட்டி வருவதை எதிர்த்தும், கூடுதல் டிஜிபி ஜார்ஜைக் கண்டித்தும் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கம்பத்தில் முகாமிட்டுள்ளார். அவர் கம்பத்திற்கு வருவதற்கு முன்பு வரை தேனி மாவட்ட மக்கள் போராட்டத்தில் போலீஸார் தலையிடாமல் இருந்து வந்தனர். ஆனால் ஜார்ஜ் வந்த பின்னர் தற்போது பேரணியாக செல்வோரைப் போலீஸார் தடுத்தும், தடியடி நடத்திக் கலைத்தும் விரட்டியடிக்கின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக கம்பம், கம்பம் மெட்டுப் பகுதியில் பேரணியாக சென்ற பொதுமக்கள், விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்தி விரட்டுவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ராம.சிவசங்கர் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது வக்கீல்கள் கூறுகையில், கூடுதல் டி.ஜி.பி.ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர்.அமைதியாக ஊர்வலம் சென்ற தமிழர்கள் மீது அவரது தூண்டுதலின்பேரில்தான் தடியடி நடத்தப்பட்டது என்று அப்போது வக்கீல்கள் குற்றம் சாட்டினர். தமிழர்கள் மீது தடியடி நடத்திய ஜார்ஜை சஸ்பெண்ட் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கிளர்ந்து எழுவார்கள் என்றும் வக்கீல்கள் எச்சரித்தனர்.

போராட்டங்களால் தேனி மாவட்டம் முடங்கியது

இந்த நிலையில் தொடர் போராட்டங்கள் காரணமாக தேனி மாவட்டமே முடங்கிப் போயுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக குமுளி, கம்பம் மெட்டு எல்லைச்சாலைகளில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சின்னமனூர், கருநாக்கமுத்தன்பட்டி, மார்க்கையன்கோட்டை, உ.அம்மாபட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சாரை சாரையாக மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்களில் குமுளி நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர்.

இந்த போராட்டக்குழுவினர் சென்ற சில நிமிடங்களில் அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலைகளில் கற்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டிப்போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.சின்னமனூர் நகரில் பொது மக்கள் டயர்களை கொளுத்திப்போட்டு தீ வைத்தனர். இதனை அடுத்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதையடுத்து சின்னமனூர் பகுதியில் இருந்து கம்பம், கூடலூர், குமுளி வரையிலான சாலையில் நேற்று காலை முதலே பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கூடலூரில் மக்கள் மீது போலீஸ் தடியடி

இதனிடையே குமுளி நோக்கி செல்ல முயன்ற பொது மக்கள் கூடலூரில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். பின்னர் அங்கிருந்து லோயர் கேம்ப் நோக்கி போராட்டக்குழுவினர் புறப்பட்டு சென்றனர். தம்மணம்பட்டி விலக்கு பகுதியில் போலீசார் மீண்டும் போராட்டக்குழுவினரை தடுத்தனர். அந்த தடையை மீறி லோயர் கேம்ப் குருவனூத்து பாலம் அருகே பகல் 1 மணி அளவில் ஊர்வலமாக பொது மக்கள் வந்து சேர்ந்தனர்.

அங்கே பாலத்தை மறித்து போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவீண்குமார் அபினபு, ஈஸ்வரன் மற்றும் ஆயுதம் தாங்கிய சிறப்பு அதிரடிப்படை போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்குழுவினரிடம் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் மேற்கொண்டு இந்த பாதையில் செல்ல முடியாது என அறிவுரை வழங்கி பேசினார். சுமார் 45 நிமிடம் அவர் பொது மக்களிடம் பேசியதை தொடர்ந்து அங்கு நின்ற பொது மக்கள் கேரள மாநில அரசை கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பொது மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி சென்றனர்.

மரங்களை வெட்டித் தீவைத்த மக்கள்

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் கோட்டூர், சீலையம்பட்டி, உப்பார்பட்டி விலக்கு பகுதிகளில் மர்ம நபர்கள் மரங்களை வெட்டி போட்டனர். இதனால் அந்த பாதையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சீலையம்பட்டி பகுதியில் சாலைகளில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பாதையில் கலவரம் ஏற்பட்டது போன்று பரபரப்பாக காணப்பட்டது.

ஏற்கனவே தேனி நகரில் நேற்று பகலில் கேரள மாநிலத்தவர்களின் கடைகள் உடைக்கப்பட்டது. மேலும் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையும் ஆங்காங்கே எரிக்கப்பட்டது. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் தேனி தொகுதி எம்.பி. ஆரூண் அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி பஸ் நிலையத்துக்கு நேற்று ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். செங்கோட்டைக்கு பஸ்களை இயக்கக்கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான 3 நட்சத்திர ஓட்டலின் ஜன்னல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதையடுத்து, பஸ் நிலையத்தில் இருந்த பஸ்கள், பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தேனியில் உள்ள கேரள நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கேரளாவுக்கு மொத்தமாக சரக்குகளை ஏற்றி அனுப்பும் தொழில் அதிபரின் கடை மீதும், அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக, தேனியில் அனைத்து பள்ளிகளுக்கும் பிற்பகலில் விடுமுறை விடப்பட்டது.

ஒரு கடையும் திறக்கப்படவில்லை

போடி நகரில் டீக்கடை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சின்னமனூரிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு கேரள நிறுவனங்களின் பெயர் பலகையை உடைத்து தீவைத்தனர். ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டி போட்டனர்.

கம்பம், உத்தமபாளையம் பகுதியில் அனைத்து கடைகளும், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்தன. தேனி மாவட்டம் முழுவதும் மரங்களை போட்டும், குழாய்களை போட்டும் வைத்திருந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த பெரும் போராட்டத்தால் தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஏதோ பந்த் நடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. தேனி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் போராட்டங்களால் மாவட்டம் முழுவதுமே அசாதாரண நிலை தொடர்கிறது.

ஓட்டுனர்களை முந்தி மாமூலை அள்ளும் அரசு போக்குவரத்து கழகம்.



தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஏழு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டங்களில் இருந்து ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் அதிக தூரமுள்ள இடங்களுக்கு சென்று வருகின்றன.

இப்படி இயக்கப்படும் பேருந்துகள் விழுப்புரம், தின்டிவனம், கிருஷ்ணகிரி, தாராபுரம், அவினாசி, கொடைரோடு. வேடசந்தூர் போன்ற இடங்களில் உள்ள சில பயணவழி உணவகங்களில் நின்று செல்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்களில் பயணிகள் சென்று சாப்பிட்டுவிட்டு செல்ல அனுமதித்த ஓட்டுனர்கள், இந்த பயனவழி உணவகங்கள் துவங்கப்பட்ட பின்னர், பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்தாமல், இந்த பயனவழி உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்துகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த உணவகங்களில் ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் சாப்பாடு, ஒரு தட்டு கோழிக்கறி, வெற்றிலை பாக்கு, ஒரு பாக்கெட் வில்ஸ் அல்லது கோல்டுபிளாக் சிகரெட் பாக்கெட் போன்றவைதான்.

ஆனால், பொதுமக்களை கொள்ளையடிக்கும் இந்த உணவகங்களில் சாதாரனமாக் கடைகளில் கிடைக்கும் சிகரெட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் என எல்லாவற்றிக்கும் அதான் விற்பனை விலையை விடவும் இரண்டு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள்.

இந்த உணவகங்களில் சாப்பிட போகும் பயணிகள் மினரல் வாட்டர் வாங்க வேண்டும் என்பதற்காக குடிப்பதற்கு கொடுக்கும் தண்ணீரில் உப்பை கலந்துவிடுகிறார்கள். 50 ரூபாய்க்கு கொடுக்கும் சாப்படிற்கு சாம்பார் ரசம், மோர் என எல்லாமே தண்ணீர் போலதான் இருக்கும்.

காசு கொடுத்து வாங்கியதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சிறுநீர் கழிப்பதற்கு போனால் அதற்கும் 2 ரூபாய் பிடுங்கும் இந்த பயனவழி உணவகங்கள் ஆட்சிக்கு தக்கபடி தங்களின் சாயத்தை மாற்றி மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது இந்த பயனவழி உணவகங்களின் கொள்ளைக்கு அரசு போக்குவரத்து கழகமே அங்கீகாரம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் அந்த பகுதிகளில் உள்ள பயனவழி உணவகங்களின் உரிமையாளர்களிடம் ஒரு பேருந்து வந்து சென்றால் அந்த கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு 40 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு உணவாக உரிமையாளரிடம் வசூல் செய்துகொள்கிறார்கள்.

இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ஓசியில் கொடுத்த கோழிக்கறியை இப்போது நிறுத்திவிட்டார்கள். இலவச சிகரெட் ஒரு பாக்கெட் என்ற அளவு போய் இப்போது இரண்டு சிகரெட் மட்டுமே கொடுக்கிறார்கள். அளவில்லா சாப்பாட்டும் இப்போது அளவு சாப்படாகி விட்டது.

இந்த ஓசி சமாச்சாரங்கள் கிடைக்காத காரணத்தால் ஓட்டுனர்கள் சிலர் இந்த பயணவழி உணவகங்களில் நிற்காமல் சென்றதால், எச்சரிக்கையான போக்குவரத்து நிர்வாகம் இப்போது தாங்கள் அங்கீகரித்துள்ள உணவகங்களில் நின்று பயணிகளின் கையில் உள்ள காசையெல்லாம் பிடுங்கி உணவகத்தில் கொடுத்ததற்கு அத்தாட்சியாக உங்களது இன்வைஸ்’ல் உணவக முதலாளியிடம் கையெழுத்து வாங்கிவா.... என்று நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது அரசு போக்குவரத்து கழகங்கள்.

எங்களுக்கும், பயணிகளுக்கும் வசதியான பயணவழி உணவங்களில் தான் பேருந்துகளை நிறுத்துவோம் என்று கடந்த திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தினோம். ஆனால் தற்போது அந்தப் பேச்சுக்கே வேலையில்லை என்று ஓட்டுனர்களும், நடத்துனர்களும் புலம்புகின்றனர்.

வருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால்விலை என பல அவசியம்மான பொருட்களுக்கு விலை ஏற்றியதுடன் நிற்காமல், கூடுதலாக எலைட் பார்களும் திறக்க உள்ளது.

இன்னும் வருமானம் வேண்டும் என்றால் என்னென்ன செய்வார்களோ என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

கார்ப்பரேட் பிடியில் குஜராத்...நடுத்தெருவில் விவசாயிகள்...!



“குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்! ’’என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகின்றன வடநாட்டு ஊடகங்கள். ஆனால் அதன் மறு பக்கத்தை யாரும் பார்ப்பதில்லை.

இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்கின்றார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குஜராத் போல தமிழ்நாடு விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், குஜராத்தில் விவசாயம் வளர்ந்த அளவுக்கு விவசாயிகள் வளரவில்லை.

வளமான விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. விவசாயிகள் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள். பாரம்பரிய விவசாய முறையை மாற்றியதால், கால்நடைகள் அழிந்து போய்விட்டன. உழவு செய்ய மாடுகள் கிடைப்பதில்லை. மாட்டுக்கு பதில் மனிதர்களை பூட்டி உழவு செய்யும் அவலம் நடந்து வருகிறது.

ஆனால், இன்று குஜராத்தில் ரிலையன்ஸ், அய்.டி.சி., கோத்ரெஜ், ஃப்யூச்சர், மஹிந்திரா, ஹரியாளி கிசான் பஜார், ஏ.சி.அய்.எல்., மகேந்திரா, டீ.சி.ம்.ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள் கிராமப்புற சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் இறங்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் விளைவாக, முறைசாரா சிறு உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றி விட்டன.

இன்னும் சில ஆண்டுகளில் குஜராத் மக்களின் மறுபக்கம் வெளி உலகத்திற்கு தெரியும்.

-யோகன்னா யாழினி-

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை ; அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? : வைரமுத்து ஆவேசம்.



முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்.

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன.

அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத் தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். 'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’ என்று அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.